சப்பாத்திக்கு இதுதாங்க பெஸ்ட்… கல்யாண வீட்டு வெஜ் குருமா ரகசியம்!

சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்ஷான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கமகமக்கும் வெஜ் குருமா வீட்டில் மிக எளிதாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!
veg kurma recipe வெஜ் குருமா
veg kurma recipe வெஜ் குருமா
Updated on

சப்பாத்தி, பரோட்டா, பூரி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது குருமா தான். அதிலும் குறிப்பாக, பல காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் அந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சுவை யாருக்குத்தான் பிடிக்காது? ஹோட்டல்களில் கிடைக்கும் கெட்டியான, மணக்கும் சுவையை வீட்டில் கொண்டு வருவது பலருக்கும் ஒரு சவாலாகவே இருக்கும். 

ஆனால், சரியான பக்குவத்தில் மசாலாக்களை வறுத்து அரைத்து செய்தால், கல்யாண வீடுகளையும் ஹோட்டல்களையும் மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமான வெஜ் குருமா நாமும் வீட்டில் எளிதாகச் செய்யலாம். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள மிகச் சிறந்த, ஆரோக்கியமான இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • நறுக்கிய காய்கறிகள் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி - 2 கப்

  • பெரிய வெங்காயம் - 2 

  • தக்காளி - 2

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

  • மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1

  • எண்ணெய் மற்றும் நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

  • துருவிய தேங்காய் - 1/2 கப்

  • சோம்பு - 1 டீஸ்பூன்

  • கசகசா - 1 டீஸ்பூன்

  • முந்திரி - 8 பற்கள்

  • பச்சை மிளகாய் - 2

veg kurma recipe வெஜ் குருமா
veg kurma recipe வெஜ் குருமா

செய்முறை! 

ஒரு பெர்ஃபெக்ட் குருமாவுக்கு மிக முக்கியமானது நாம் அரைத்து ஊற்றும் அரவை தான். முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், ஊறவைத்த கசகசா, முந்திரி, சோம்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நல்ல நைஸான விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

முந்திரி மற்றும் கசகசா தான் குருமாவுக்கு அந்த கெட்டித்தன்மையை கொடுக்கும். அடுத்ததாக, நாம் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைச் சிறிது உப்பு மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் குழைந்துவிடக் கூடாது.

இதையும் படியுங்கள்:
சலிப்பூட்டும் சாம்பாருக்கு குட்-பை! ஆந்திரா ஸ்டைல் 'பரங்கிக்காய் பால் கூட்டு' ரகசியம் இதோ!
veg kurma recipe வெஜ் குருமா

இப்போது ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடாக்குங்கள். நெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்குங்கள். 

பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாகக் கிளறி வதக்குங்கள். இதுதான் இந்த வெஜ் குருமா ரெசிபியின் சுவையைக் கூட்டும் முக்கியமான படியாகும்.

தக்காளி மசாலா தொக்கு போல சுருண்டு வந்ததும், வேகவைத்து வைத்துள்ள காய்கறிகளைத் தண்ணீருடன் அதில் சேர்த்து கொதிக்க விடுங்கள். காய்கறிகள் மசாலாவோடு சேர்ந்து ஐந்து நிமிடம் கொதித்ததும், நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய்-முந்திரி விழுதை ஊற்றி, தேவையான அளவு உப்பு சரிபார்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
ஒருமுறை இப்படி 'லகோரி' ஸ்டைல்ல பன்னீர் செஞ்சு பாருங்க, விரலையும் சாப்பிடுவாங்க!
veg kurma recipe வெஜ் குருமா

குருமா லேசாக நுரைத்து, மசாலா வாசனை போய் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்போது, சிறிது கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். வீடு முழுவதும் மணக்கும் சூப்பரான வெஜ் குருமா தயார். சுடச்சுட சப்பாத்தியை பிய்த்து இந்தக் குருமாவில் முக்கிச் சாப்பிட்டால், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களை மாஸ்டர் செஃப் என்றே புகழ்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com