ஒருமுறை இப்படி 'லகோரி' ஸ்டைல்ல பன்னீர் செஞ்சு பாருங்க, விரலையும் சாப்பிடுவாங்க!

வழக்கமான பன்னீர் ரெசிபிகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, உங்கள் வீட்டு கிச்சனையே ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக மாற்றும் அசத்தலான 'லகோரி பன்னீர் குருமா' செய்முறை இதோ!
Lahori Paneer Kurma
Lahori Paneer Kurma
Updated on

Lahori Paneer Kurma: வீட்டில் சப்பாத்தி, நாண் அல்லது பூரி செய்தால் அதற்குத் தொட்டுக்கொள்ளத் தானாகவே நம் நினைவுக்கு வருவது பன்னீர் பட்டர் மசாலாதான். எப்போது பார்த்தாலும் அதே பன்னீர் மசாலா, அதே சுவை என்று சலித்துப் போனவர்களுக்கு ஒரு சூப்பரான மாற்றுதான் இந்த 'லகோரி பன்னீர் குருமா'. 

அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூர் பகுதிகளில் மிகவும் பிரபலமான இந்த உணவு, முகலாயர்களின் ராஜபோக சமையல் கலையையும், உள்ளூர் மசாலாக்களின் காரசாரமான சுவையையும் தன்னுள் அடக்கியுள்ளது. முந்திரி விழுது மற்றும் தயிர் சேர்த்துச் செய்யப்படும் இந்த கிரேவி, நாவில் வைத்ததும் கரையும் பன்னீரோடு சேர்ந்து ஒரு தேவாமிர்தமான சுவையைத் தரும். 

தேவையான பொருட்கள்:

  • பன்னீர் - 250 கிராம்

  • பெரிய வெங்காயம் - 2

  • தக்காளி - 2

  • கெட்டித் தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

  • முந்திரி - 10 

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1.5 டீஸ்பூன்

  • மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா மற்றும் சீரகத் தூள் - தலா 1/2 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

  • கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1

  • சமையல் எண்ணெய் மற்றும் நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்

  • ஃபிரெஷ் கிரீம்  - 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

முதலில் ஒரு பேனில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, சதுரமாக நறுக்கிய பன்னீர் துண்டுகளை லேசாகப் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். வறுத்த பன்னீரைச் சிறிது வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் போட்டு வைத்தால், பன்னீர் பஞ்சு போல மிகவும் சாஃப்ட்டாக மாறும்.

இப்போது ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் மற்றும் மீதமுள்ள நெய்யை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்க வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் நல்ல பொன்னிறமாக மாறும் வரை பொறுமையாக வதக்குங்கள். 

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இப்போது தக்காளி விழுதைச் சேர்த்து, அதோடு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். மசாலாக்களில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை மிதமான தீயில் வதக்குவது மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
சாதாரண ஊறுகாயை ஓரம் கட்டுங்க... குடலுக்கு நன்மை செய்யும் மூங்கில் குருத்து ஊறுகாய் செய்முறை இதோ!
Lahori Paneer Kurma

எண்ணெய் பிரிந்து வந்ததும், அடுப்பை முற்றிலும் குறைத்து வைத்துவிட்டு, கெட்டித் தயிர் மற்றும் முந்திரி விழுதைச் சேர்த்துக் கட்டியில்லாமல் நன்றாகக் கிளறி விடுங்கள். கிரேவிக்குத் தேவையான அளவு உப்பைச் சேர்த்து, சுமார் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள். தயிர் மற்றும் முந்திரி சேர்ந்து கிரேவிக்கு ஒரு அருமையான கெட்டித்தன்மையையும், ரிச்சான சுவையையும் கொடுக்கும்.

குழம்பு நன்றாகக் கொதித்து வரும்போது, நாம் தண்ணீரில் ஊறவைத்துள்ள பன்னீர் துண்டுகளை வடித்து இதில் சேர்க்க வேண்டும். பன்னீர் மசாலாவோடு சேர்ந்து 5 நிமிடங்கள் கொதித்ததும், கரம் மசாலா மற்றும் கைகளை வைத்துக் கசக்கிய கஸ்தூரி மேத்தியைத் தூவுங்கள். கடைசியாக இரண்டு ஸ்பூன் ஃபிரெஷ் கிரீம் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்தால் வீடு முழுவதும் மணக்கும் 'லகோரி பன்னீர் குருமா' தயார். 

இதையும் படியுங்கள்:
வயிறு சூட்டைத் தணிக்கும் சூப்பர் ரெசிபி... சத்துகள் நிறைந்த 'குலித் கலான்' செய்வது இவ்வளவு சுலபமா?
Lahori Paneer Kurma

சுடச்சுட பட்டர் நாண் அல்லது சீரகச் சாதத்தோடு இதைச் சேர்த்துச் சாப்பிட்டால், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களைப் பாராட்டித் தள்ளிவிடுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com