எதிர்பாராத விருந்தினர்கள் வீட்டிற்கு வரும்போதோ அல்லது காலையில் அவசரமாக உணவு தயார் செய்ய வேண்டிய சூழ்நிலையிலோ நம்முடைய நினைவிற்கு முதலில் வருவது உடனடி தோசை தான். அதிலும் சுடச்சுட, முறுகலாக ஒரு தோசை கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது? உணவகங்களுக்குச் செல்லும்போது பலரும் விரும்பி ஆர்டர் செய்யும் உணவுகளில் ஒன்றுதான் இந்த ரவா தோசை.
ஆனால், இதையே வீட்டில் செய்தால் மட்டும் சிலருக்குக் கல்லில் ஒட்டிக்கொள்ளும் அல்லது தடிமனாக அடை போல வந்துவிடும். உணவகங்களில் சுடுவது போலப் பேப்பர் போன்ற மெல்லிய தன்மையும், ஆங்காங்கே ஓட்டை விழுந்த அழகிய தோற்றமும் வருவதற்குச் சில நுணுக்கங்கள் தேவை. சரியான அளவுகளையும் வழிமுறைகளையும் பின்பற்றினால், அந்த அசலான உணவக சுவையை நாமும் எளிதாகக் கொண்டுவர முடியும்.
தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மைதா மாவு - கால் கப்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத் தூள் - அரை ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் - தோசை சுடுவதற்கு
செய்முறை!
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் ரவை, அரிசி மாவு மற்றும் மைதா ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இதனுடன் சீரகம், உடைத்த மிளகு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாவை மிகவும் நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். மாவு தயார் ஆனதும், குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் அப்படியே மூடி வைக்க வேண்டும். அப்போதுதான் ரவை தண்ணீரை உறிஞ்சி சரியான பதத்திற்கு வரும்.
பின்னர், அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நன்றாகச் சூடாக்க வேண்டும். கல் முழுமையாகச் சூடானதும், ஒரு சிறிய கிண்ணம் அல்லது கரண்டியால் மாவை எடுத்து, தோசைக் கல்லின் வெளிப்பகுதியில் இருந்து உள்நோக்கி வட்டமாக ஊற்ற வேண்டும். சாதாரண தோசையைப் போல மாவை ஊற்றித் தேய்க்கக் கூடாது.
மாவை ஊற்றியவுடன் மிதமான தீயில் வைத்து, தோசையைச் சுற்றி தாராளமாக எண்ணெய் அல்லது நெய் ஊற்ற வேண்டும். தோசையின் ஓரங்கள் சிவந்து, அடிப்பகுதி நன்றாக வெந்தவுடன் அதனைத் திருப்பிப் போடாமல் அப்படியே மடித்து எடுக்கலாம். இப்போது சூடான தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சுவையான ரவா தோசை பரிமாறத் தயார்.
மொறுமொறுப்பாக வருவதற்கான சிலகுறிப்புகள்:
மாவு எந்த அளவிற்குத் தண்ணீராக இருக்கிறதோ, அந்த அளவிற்குத் தோசையில் இயல்பாகவே அதிக ஓட்டைகள் விழும். மாவு கெட்டியாக இருந்தால் தோசை அடை போலத் தடிமனாகிவிடும்.
மாவை ஊற்றும் போது தோசைக் கல் மிக அதிக சூட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் மாவு கல்லில் விழுந்தவுடன் சலசலவெனப் பொரிந்து ஓட்டைகளை உருவாக்கும். ஊற்றிய பின் தீயை மிதமாக்கிக் கொள்ளலாம்.
ரவை மற்றும் மாவுப் பொருட்கள் பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும் தன்மையுடையவை. எனவே, ஒவ்வொரு முறை தோசை ஊற்றும் முன்பும் மாவை அடியிலிருந்து நன்றாகக் கலக்கி விட்டுத்தான் மாவை அள்ளி ஊற்ற வேண்டும்.
ஒரு பங்கு ரவைக்குச் சமமாக ஒரு பங்கு அரிசி மாவு சேர்ப்பதே மொறுமொறுப்பிற்கான சீக்ரெட். அதேசமயம், தோசை கல்லில் ஒட்டாமலும் பிய்ந்து போகாமலும் இருக்கவே கால் பங்கு மைதா மாவு சேர்க்கப்படுகிறது.
இந்தச் சிறிய நுணுக்கங்களை கவனமாகக் கையாண்டால், இனிமேல் உணவகங்களுக்குச் சென்றுதான் மொறுமொறுப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற அவசியமே இருக்காது. வீட்டில் உள்ள சாதாரண பொருட்களைக் கொண்டே, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த ரவா தோசை, உங்களின் காலை நேர உணவை மேலும் சிறப்பானதாக மாற்றும்.
நீங்களும் இந்த குறிப்புகளைப் பின்பற்றி உங்களின் குடும்பத்தினருக்குச் சுடச்சுடச் சுட்டுக் கொடுத்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுங்கள்.