சேப்பங்கிழங்கு கொழகொழப்பாகிறதா? இதோ மொறுமொறுப்பான வறுவலுக்கு 7 ரகசியங்கள்!

உடலுக்கு சத்தான சேப்பங்கிழங்கை அரிப்பில்லாமல், மொறுமொறுப்பாக சமைக்க உதவும் எளிய வழிகாட்டி.
சேப்பங்கிழங்கு வறுவல் - Healthy Taro Root Dishes
சேப்பங்கிழங்கு வறுவல் - Healthy Taro Root DishesImage credit: Gemini
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

சேப்பங்கிழங்கு (Taro Root) என்பது நம் அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய சத்தான கிழங்கு வகையாகும். இதில் மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. இதை உணவில் சேர்ப்பதால் செரிமானத்திற்கு உதவும் , வயிறு நிறைந்த உணர்வைத் தரும், உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும் , இதய ஆரோக்கியம் தரும், தசைகள் மற்றும் நரம்புகளுக்கு உதவும் , உடல் செல்களை பாதுகாக்க உதவும்.

ஆனால் இதை நன்றாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். பச்சையான அல்லது சரியாக வேகாத சேப்பங்கிழங்கில் உள்ள கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் வாய் மற்றும் தொண்டையில் அரிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தலாம். இதில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடும் அளவைக் கவனிக்க வேண்டும்.

மேலும், சிறுநீரக நோய் உள்ளவர்கள் பொட்டாசியத்தைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

எல்லாம் சரி, சேப்பங்கிழங்கு சாப்பிடப் பிடிக்கும். ஆனால் வறுக்கும்போது மட்டும் கையில் ஒட்டும் தன்மை, கொழகொழப்பு, மசிந்து போவது போன்ற பிரச்னைகள் வருகிறதே. என்ன செய்ய என்ற கவலையா? இதோ இந்தப் பதிவு உங்களுக்குத்தான். சில எளிய சமையல் முறைகளைப் பின்பற்றினாலே போதும். சேப்பங்கிழங்கை மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் வறுக்கலாம்.

சேப்பங்கிழங்கு கொழகொழப்பு இல்லாமல் வறுக்க இந்த 7 ரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
கிராமத்து சுவையில் மணமணக்கும் கொள்ளு பயறு 5 சூப்பர் ரெசிபிகள்!
சேப்பங்கிழங்கு வறுவல் - Healthy Taro Root Dishes

1. சேப்பங்கிழங்கை நன்றாகக் கழுவிவிட்டு வேகவைக்கவும்.

குக்கரில் 1–2 விசில் வரும் வரை வேகவிடுங்கள். கிழங்கின் அளவைப் பொறுத்து நேரம் மாறும் என்பதையும் கவனியுங்கள். கிழங்கு முழுவதும் மசிந்துவிடும் அளவுக்கு வேகவைக்கக் கூடாது.

2. ஆறவைத்த பிறகு தோலை உரிக்கவும். வேகவைத்த சேப்பங்கிழங்கைச் சிறிது நேரம் ஆறவிடவும். பின்னர் தோலை உரித்து வட்டமாக அல்லது நீளமாக நறுக்கவும்.

3. நறுக்கிய துண்டுகளை ஒரு தட்டில் பரப்பி 10–15 நிமிடங்கள் வைக்கவும். அதிகப்படியான ஈரப்பதம் நீங்கினால் வறுக்கும்போது நன்றாக மொறுமொறுப்பாகும்.

4. மசாலாவைச் சரியான அளவில் சேர்த்தால் கொழகொழப்பு நீங்கும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சரியாக சேர்க்கவும்.

5. ஒரு கப் வேகவைத்த சேப்பங்கிழங்குத் துண்டுகளுக்கு 1–2 டீஸ்பூன் அரிசி மாவைத் தூவி வறுத்தால் வெளிப்புறத்தில் மொறுமொறுப்பான தன்மையை உருவாக்க உதவும்.

6. எண்ணெய் நன்றாகச் சூடானதும் வறுக்கவும். மிதமான தீயில் எண்ணெயைச் சூடாக்கவும். கிழங்குத் துண்டுகளை ஒன்றின் மீது ஒன்று குவிக்காமல் போடவும்.

7. ஒரு பக்கம் பொன்னிறமாக மாறிய பிறகு மெதுவாகத் திருப்பவும். வெளிப்புறம் மொறுமொறுப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். அடிக்கடி கிளறவேண்டாம்.

குறிப்பாக சேப்பங்கிழங்கை நன்றாக வேகவைக்க வேண்டும். சரியாக வேகவைக்காத சேப்பங்கிழங்கு தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம்.

சேப்பங்கிழங்கு வறுவல் - Healthy Taro Root Dishes
சேப்பங்கிழங்கு வறுவல் - Healthy Taro Root Dishes

சுவையான 4 சேப்பங்கிழங்கு உணவுகள் இங்கு...

காரசாரமான சேப்பங்கிழங்கு வறுவல்

தேவை;

சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை உரிக்கவும். வட்டமாக நறுக்கி ஈரப்பதத்தை நீக்கவும்.தந்துள்ள மசாலா, உப்பு, அரிசி மாவு சேர்த்துப் பிசிறவும்.

தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அடுக்கி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை அளவை உயர்த்தாத 5 ஆரோக்கிய கோதுமை ரவை ரெசிபிகள்!
சேப்பங்கிழங்கு வறுவல் - Healthy Taro Root Dishes

இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். சிம்பிளான இது சாதம், சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்!

மிளகு சேப்பங்கிழங்கு வறுவல்

தேவை;

சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

பூண்டு – 4 பல்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை;

சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

சேப்பங்கிழங்கைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். கடைசியாக பொடித்த மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.

மிளகின் மணமும் பூண்டின் சுவையும் சேர்ந்து தயிருக்கு ஜோடியாக தனித்துவமாக இருக்கும்.

மசாலா சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேவை;

சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ

மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்

மல்லித்தூள் – 1 டீஸ்பூன்

சீரகத்தூள் – ½ டீஸ்பூன்

கரம் மசாலா – ¼ டீஸ்பூன்

அரிசி மாவு – 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை;

வேகவைத்த சேப்பங்கிழங்கை வட்டமாக நறுக்கவும். அனைத்து மசாலாக்களையும் அரிசி மாவையும் சேர்த்துப் பிசிறவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கிழங்குத் துண்டுகளை அடுக்கவும்.

மிதமான தீயில் இருபுறமும் மொறுமொறுப்பாக வறுக்கவும். காரமான மசாலா சுவையை விரும்புபவர்களுக்கு ஏற்றது இந்த ரெசிபி.

மொறுமொறுப்பான சேப்பங்கிழங்கு சிப்ஸ்

தேவை;

சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ

மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை:

சேப்பங்கிழங்கைச் சுத்தம் செய்து தோலை உரிக்கவும். மிக மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கவும்.

துண்டுகளின் ஈரப்பதத்தை நன்றாகத் துடைக்கவும். எண்ணெயை மிதமான சூட்டில் வைத்துப் படிப்படியாகப் பொரிக்கவும். பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறியதும் எடுத்து, உப்பு மற்றும் மிளகாய்த்தூள் தூவவும். இது சாதாரண சிப்ஸ் போல மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிட ஏற்ற ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.

சேப்பங்கிழங்கு வறுக்கும்போது செய்யக்கூடாத 4 தவறுகள் என்ன தெரியுமா?

அதிகமாக வேகவைப்பது

(கிழங்கு மசிந்துவிடும்)

ஈரத்துடன் வறுப்பது

(கொழகொழப்பாக இருக்கும்)

அதிகத் துண்டுகளை ஒரே நேரத்தில் போடுவது . (சீராக வறுபடாது)

அதிகத் தீயில் வறுப்பது

(வெளிப்புறம் கருகி உட்புறம் சரியாக வறுபடாது)

இதையும் படியுங்கள்:
பாகற்காய் கசப்பை முற்றிலுமாக நீக்க பாட்டி சொன்ன 5 எளிய ரகசிய வழிகள்!
சேப்பங்கிழங்கு வறுவல் - Healthy Taro Root Dishes

இன்னொரு ரகசிய முறை உண்டு.

சேப்பங்கிழங்கை வேகவைத்த பிறகு நன்றாக ஆறவைத்து, துண்டுகளாக நறுக்கி 15–20 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பின்னர் வறுத்துப் பாருங்கள். ஈரப்பதம் குறைவாக இருந்தால் துண்டுகள் உடையாமல் வறுக்க உதவும்.

logo
Kalki Online
kalkionline.com