உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை விரும்பி உண்பார்கள். அவர்களுக்கு முட்டைக்கு இணையான புரதத்தைத் தரக்கூடிய ஒரு அற்புதமான உணவுதான் கோபி பனீர் சில்லா.
காலிஃபிளவர் மற்றும் பனீர் சேர்த்துச் செய்யப்படும் இந்த உணவு, நாவிற்கு ருசியைத் தருவதோடு மட்டுமல்லாமல், நீண்ட நேரத்திற்குப் பசியைத் தாங்கும் ஆற்றலையும் உடலுக்கு வழங்குகிறது. கடலை மாவு மற்றும் காய்கறிகளின் கலவையில் உருவாகும் இந்த உணவை எப்படி மிக எளிதாகச் செய்யலாம் எனப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கோப்பை
துருவிய பனீர் – ½ கப்
துருவிய காலிஃபிளவர் – 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி விழுது – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி
கல் உப்பு – தேவையான அளவு
நெய் அல்லது சமையல் எண்ணெய் – சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை!
இந்த ஆரோக்கியமான உணவை தயாரிப்பதற்கு, முதலில் காலிஃபிளவரைச் சுடுநீரில் போட்டு நன்றாகச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனைச் சிறிய துளைகள் உள்ள துருவியில் பொடியாகத் துருவிக்கொள்ள வேண்டும். அதேபோன்று, பனீரை உதிரியாகத் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவைச் சேர்த்து, அதனுடன் துருவிய காலிஃபிளவர், பனீர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, மஞ்சள் தூள், சிறிதளவு ஓமம் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஓமம் சேர்ப்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கும்; மேலும் இது உணவிற்கு ஒரு தனித்துவமான வாசனையையும் கொடுக்கும்.
அனைத்துப் பொருட்களையும் சேர்த்த பிறகு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்குச் சற்று தளர்வாகக் கரைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளில் இயற்கையாகவே நீர்ச்சத்து இருக்கும் என்பதால், தண்ணீரைச் சிறுகச் சிறுகச் சேர்ப்பது மிகவும் அவசியமாகும்.
அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து, மிதமான தீயில் சூடாக்க வேண்டும். கல் காய்ந்ததும், கரைத்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு கரண்டி எடுத்து, தோசையைப் போலப் பரப்பி விட வேண்டும். காய்கறிகள் இருப்பதால் இதனை மிகவும் மெல்லியதாக வார்க்க முடியாது. எனவே சற்று தடிமனாகவே ஊற்றிக் கொள்ள வேண்டும்.
சுற்றிலும் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாகச் சிவந்து வரும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சுட்டெடுத்தால் இதன் மணம் வீடே கமழும்.
காலை நேர அவசரத்தில், வெறும் பத்து நிமிடங்களில் இந்த கோபி பனீர் சில்லா ரெசிபியை சுலபமாகத் தயார் செய்துவிடலாம். சுவையும் ஆரோக்கியமும் ஒருங்கே நிறைந்த இந்த சூடான கோபி பனீர் சில்லா ரெசிபியை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்க.