

கம்பு மாவு என்பது கம்பு தானியத்தை அரைத்து தயாரிக்கப்படும் சத்தான பாரம்பரிய சிறுதானிய மாவாகும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இரும்பு சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் அடங்கியுள்ளது. கம்பு உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், மலச்சிக்கலை போக்கவும் உதவும். எளிதில் செரிமானம் மேம்படவும், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் கம்பு மாவை வைத்து விதவிதமான நொறுக்குத் தீனிகளைச் செய்யலாம்.
1. கம்பு காராச்சேவு:
மாலையில் மொறு மொறுவென்று சாப்பிடுவதற்கு ஏதுவான, டீ காபிக்கு தோதான நொறுக்குத் தீனி இது.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - 1 கப்
கடலை மாவு -1/2 கப்
சீரகம் (அ) ஓமம் -1 ஸ்பூன்
வெண்ணெய் -2 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கம்பு மாவு, கடலை மாவு, சீரகம், வெண்ணெய், மிளகாய் தூள், தேவையான உப்பு அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இதனை காராச்சேவு கட்டையில் வைத்து, சூடான எண்ணெயின் மேல் தேய்த்தெடுக்க ருசியான காராச்சேவு தயார். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.
2. கம்பு பிஸ்கட்:
பேக்கரி உணவுகளை விரும்பும் குழந்தைகளுக்கு இதனை நாம் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
நாட்டு சக்கரை - 1/2 கப்
வெண்ணெய் -1/4 கப்
பால் - சிறிது
ஏலக்காய்த்தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
வெண்ணெய் மற்றும் நாட்டுச் சர்க்கரையை நன்கு குழைத்து அத்துடன் கம்பு மாவு சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் தெளித்து சப்பாத்தி மாவு போல் திரட்டி விரும்பிய வடிவங்களில் வெட்டி, ஓவனிலோ (Oven) அல்லது கடாயிலோ பேக் செய்து எடுக்கவும். சத்தான ருசியான கம்பு பிஸ்கட் தயார்.
3. கம்பு நாடா பக்கோடா:
பண்டிகை காலங்களிலும், மாலை நேரத்திலும் டீ, காப்பியுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும் இந்த மொறு மொறுப்பான ஸ்னாக்ஸ்.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - 1/4 கப்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
கம்பு மாவுடன் சம அளவு அரிசி மாவு மற்றும் கால் பங்கு கடலை மாவு சேர்க்கவும். உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு பிழியவும். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்தெடுக்க அதிகம் சிவக்காமல் இருப்பதுடன் ருசியும் மாறாமல் இருக்கும்.
4. கம்பு கொழுக்கட்டை (இனிப்பு/ காரம்):
ஆவியில் வேக வைப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது; எளிதில் ஜீரணிக்க கூடியது.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
கம்பு மாவை லேசாக வறுத்து சூடான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சுருண்டு வரும் வரைக் கிளறி கடைசியாக ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். பூரணம் தயார்.
கம்பு மாவில் சொப்பு செய்து அதில் பூரணத்தை ஒரு ஸ்பூன் அளவில் உள்ளே வைத்து கொழுக்கட்டைகளை தயார் செய்யவும். இதனை ஆவியில் ஏழெட்டு நிமிடங்கள் வேகவைத்து எடுக்க இனிப்பு கொழுக்கட்டைத் தயார்.
கார கொழுக்கட்டைக்கு வெல்லத்திற்கு பதில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து செய்யவும். உளுத்தம் பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்து விட்டு தேங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி எடுக்க காரப்பூரணம் தயார். இதனை கம்பு மாவில் செய்த சொப்பில் அடைத்து வேகவிட சத்தான கார கொழுக்கட்டை தயார்.
5. கம்பு இனிப்பு அப்பம்:
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இதனை எளிதில் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - 1 கப்
வெல்லக் கரைசல் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 ஸ்பூன்
பழுத்த வாழைப்பழம் - 1
நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கம்பு மாவுடன், சிறிது நீரில் நன்கு கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் மற்றும் நன்கு பிசைந்த வாழைப்பழம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பணியாரக் கல்லில் நெய் அல்லது எண்ணெய் விட்டு, இந்த மாவை ஒரு கரண்டி அளவில் எடுத்து விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க மிகவும் ருசியான, சத்தான அப்பம் தயார்.
மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட கடைகளில் வாங்கும் நொறுக்குத் தீனிகளுக்கு மாற்றாக, சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய கம்பு மாவு பலகாரங்களை மிக எளிதாக வீட்டிலேயே செய்து அசத்தலாம்.