சர்க்கரை வேண்டாம்… ரத்தத்தை ஊறவைக்கும் கமகமக்கும் 'அத்திப்பழ அல்வா' 10 நிமிடத்தில் ரெடி!

anjeer-fig-halwa-recipe
anjeer-fig-halwa-recipe
Updated on

இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், வெள்ளைச் சர்க்கரை சேர்த்த இனிப்புகளைச் சாப்பிட உடல்நலம் குறித்த பயம் பலருக்கும் உண்டு. இதற்கு ஒரு அருமையான, ஆரோக்கியமான மாற்று உணவுதான் 'அத்திப்பழ அல்வா' (Anjeer Halwa). உலர் அத்திப்பழங்களில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம் ஏராளமாக நிறைந்துள்ளன. 

வழக்கமாக அத்திப்பழத்தைத் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது அப்படியேவோ சாப்பிட்டுப் பலருக்கும் போரடித்திருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு, எந்தவிதமான வெள்ளைச் சர்க்கரையும் சேர்க்காமல், அத்திப்பழத்தின் இயற்கையான இனிப்போடு சிறிது நெய் கலந்து நாவில் கரையும்படி ஒரு அல்வா செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்? 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்தத் தித்திப்பான அத்திப்பழ அல்வாவை எப்படிச் செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • உலர் அத்திப்பழம் - சுமார் 250 கிராம்

  • சூடான பால் அல்லது வெந்நீர் - 1 கப்

  • நெய் - 3 முதல் 4 டேபிள் ஸ்பூன்

  • நாட்டுச்சர்க்கரை அல்லது தூளாக்கிய வெல்லம் - 1/4 கப்

  • பாதாம், முந்திரி, பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை! 

அல்வா செய்வதற்கு முன்பாக, உலர் அத்திப்பழங்களைச் சற்று வெதுவெதுப்பான பால் அல்லது வெந்நீரில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். அத்திப்பழம் நன்றாக ஊறி மிருதுவாக மாறியதும், அதைத் தண்ணீரோடு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றுங்கள். 

மிகவும் நைஸாக இல்லாமல், லேசான கொரகொரப்புடன் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சிறிய கொரகொரப்புதான் அல்வா சாப்பிடும்போது அசல் சுவையைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
‘டிரிக் or ட்ரீட்’ என்றால் என்ன?ஹாலோவீனின் மர்மப் பின்னணி!
anjeer-fig-halwa-recipe

இப்போது அடுப்பில் ஒரு அடிகனமான நான்-ஸ்டிக் பேன் அல்லது கடாயை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். நெய் சூடானதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தாவைப் பொன்னிறமாக வறுத்துத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதே கடாயில் மேலும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, நாம் அரைத்து வைத்துள்ள அத்திப்பழ விழுதைச் சேர்த்து மிதமான தீயில் பொறுமையாகக் கிளற வேண்டும். அத்திப்பழத்தின் பச்சை வாசனை முழுமையாகப் போய், நெய்யோடு அது சுருண்டு வர சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.

அத்திப்பழ விழுது கெட்டியாகித் திரண்டு வரும்போது, எடுத்து வைத்துள்ள நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத்தைச் சேர்த்துக் கிளறுங்கள். வெல்லம் உருகியதும் அல்வா சற்று தளரும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். அல்வா கடாயில் ஒட்டாமல், சுருண்டு பளபளப்பாக வரும்போது, மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய்த் தூளைச் சேர்க்கவும். 

இதையும் படியுங்கள்:
கவிதை: கோடையும் நாம் கொண்டாடும் பருவந்தான்!
anjeer-fig-halwa-recipe

இறுதியாக, நாம் நெய்யில் வறுத்து வைத்துள்ள நட்ஸ் வகைகளைச் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்தால், இரும்புச்சத்து நிறைந்த, ரத்த சோகையைப் போக்கும் கமகமக்கும் 'அத்திப்பழ அல்வா' தயார். 

சர்க்கரை சேர்க்காத இந்த ஆரோக்கியமான இனிப்பை, பண்டிகை நாட்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ செய்து உங்கள் குடும்பத்தினருடன் சுவைத்து மகிழுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com