ஆலூ ஊத்தப்பம்: குழந்தைங்க கேட்டு வாங்கி சாப்பிடும் சுவையான ரெசிபி!

மாவு அரைக்கும் கவலையே இல்லாமல், வீட்டில் உள்ள உருளைக்கிழங்கை வைத்து 15 நிமிடங்களில் கரகரப்பான ஆலூ ஊத்தப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
aloo uttapam recipe ஆலூ ஊத்தப்பம்
aloo uttapam recipe ஆலூ ஊத்தப்பம்
Updated on

காலையில் எப்போதுமே இட்லி, தோசை, உப்புமா என்று சாப்பிட்டு சலித்துவிட்டதா? குழந்தைகளுக்கு வித்தியாசமாகவும், அதேசமயம் ஆரோக்கியமாகவும் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கை வைத்து வெறும் 15 நிமிடங்களில் ஒரு அட்டகாசமான காலை உணவை தயார் செய்ய முடியும். அதுதான் சுவையான ஆலூ ஊத்தப்பம். 

உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து குழந்தைகளுக்கு நாள் முழுவதும் தேவையான நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். மாவு அரைக்க வேண்டிய அவசியமில்லாமல், இன்ஸ்டன்ட்டாக ரவை மற்றும் துருவிய உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்யப்படும் இந்த ரெசிபி, வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்:

  • துருவிய உருளைக்கிழங்கு - 1 கப்

  • ரவை - 1 கப்

  • புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்

  • பெரிய வெங்காயம் - 1 

  • துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2

  • இஞ்சி - 1 சிறிய துண்டு

  • சீரகம் - 1 டீஸ்பூன்

  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

  • சமையல் எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

முதலில் ஒரு நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கைத் தோல் சீவி, காரட் துருவியில் பொடியாகத் துருவிக் கொள்ளவும். துருவிய உருளைக்கிழங்கை தண்ணீரில் இரண்டு முறை நன்றாகக் கழுவி பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்; இதனால் அதிலுள்ள அதிகப்படியான ஸ்டார்ச் நீங்கிவிடும். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் ரவை, தயிர், மற்றும் பிழிந்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். 

aloo uttapam recipe ஆலூ ஊத்தப்பம்
aloo uttapam recipe ஆலூ ஊத்தப்பம்

இத்துடன் நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, சீரகம், கொத்தமல்லி இலைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். ரவை தண்ணீரை உறிஞ்சும் என்பதால், கால் கப் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்குப் பிசைந்து, ஒரு 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்க வேண்டும். மாவு ரொம்பவும் கெட்டியாக இருந்தால், மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கரகரப்பு அதிகம் தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
இடுப்பு வலி காணாமல் போகும்! 10 நிமிடத்தில் உதிரியான உளுந்து சாதம்!
aloo uttapam recipe ஆலூ ஊத்தப்பம்

மாவு ஊறியதும், அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்துச் சூடாக்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து, தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து சிறிய ஊத்தப்பம் போல சற்று தடிமனாக ஊற்றவும். மிகவும் மெல்லியதாக ஊற்றினால் திருப்பிப் போடும்போது உடைந்துவிடும். 

சுற்றிலும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு, ஒரு மூடி போட்டு 2 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். ஊத்தப்பத்தின் மேல் சிறுசிறு துளைகள் விழுந்து, ரவை மற்றும் உருளைக்கிழங்கு வெந்து நல்ல வாசம் வரும். ஒருபுறம் வெந்து பொன்னிறமாகச் சிவந்ததும், மெதுவாகத் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும்.

இரண்டு பக்கமும் நன்கு சிவந்து மொறுமொறுப்பானதும் தட்டில் எடுத்துவிடலாம். சுடச்சுட, காய்கறிகள் நிறைந்த இந்த ஆரோக்கியமான ஆலூ ஊத்தப்பம் தயார். காரசாரமான தக்காளி சட்னி, புதினா சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் இதைத் தொட்டுச் சாப்பிட்டால் சுவை தேவாமிர்தமாக இருக்கும். உருளைக்கிழங்கு மற்றும் ரவை சேர்ந்திருப்பதால், இது நீண்ட நேரத்திற்குப் பசியைத் தாங்கும். 

இதையும் படியுங்கள்:
நாவிற்கு விருந்தாகும் சேலம் தட்டுவடை செட்! ஆரோக்கியமான செய்முறை இதோ!
aloo uttapam recipe ஆலூ ஊத்தப்பம்

காய்கறிகளைச் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் இதன் சுவையில் மயங்கி தட்டு நிறையக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். அடுத்த முறை காலை உணவு என்ன செய்வது என்ற குழப்பம் வரும்போது, இந்த அட்டகாசமான ஆலூ ஊத்தப்பம் ரெசிபியை இன்று உங்கள் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com