தினமும் ஒரே மாதிரியான இட்லியைச் சாப்பிடுவது பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு பதிலா கொங்கனி பாரம்பரிய உணவான கொட்டோ இட்லி ஒருமுறை செஞ்சு பாருங்க. பலா இலைகளைச் சிறு சிறு கூடைகளாக முடைந்து, அதனுள் இட்லி மாவை ஊற்றி ஆவியில் வேகவைக்கும் இந்தத் தொன்மையான முறை, இட்லிக்கு ஒரு தனித்துவமான மர வாசனையையும் அலாதியான சுவையையும் தருகிறது.
பலா இலையில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் உணவில் கலப்பதால், இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த பாரம்பரியமான உணவை நமது வீட்டிலேயே எவ்வாறு எளிதாகத் தயார் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
இட்லி புழுங்கல் அரிசி - 3 கப்
முழு வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 கப்
அவல் அல்லது ஜவ்வரிசி - 1/2 கப்
கல் உப்பு - தேவையான அளவு
நன்கு வளர்ந்த பலா இலைகள் - தேவையான அளவு
தென்னை ஈர்க்கு அல்லது சிறிய குச்சிகள் - இலைகளை இணைக்க
செய்முறை!
முதலில் இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பைத் தனித்தனியாக நன்றாகக் கழுவி, சுமார் ஐந்து மணி நேரம் சுத்தமான தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மாவு அரைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அவலை ஊறவைத்துக் கொள்ளவும்.
உளுந்தை கிரைண்டரில் வெண்ணெய் பதத்திற்கு நன்கு அரைத்து எடுத்துக்கொண்டு, பின்னர் அரிசி மற்றும் அவலைச் சேர்த்து ரவை பதத்திற்குச் சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து, கைகளால் நன்றாகப் பிசைந்து எட்டு மணி நேரம் மாவைப் புளிக்க வைக்க வேண்டும்.
இந்த கொட்டோ இட்லி செய்வதற்கு, மாவு சாதாரண இட்லி மாவை விடச் சற்று கெட்டியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மாவு நீர்த்துப் போனால் இலைகளிலிருந்து வெளியேறிவிடும்.
மாவு புளிக்கும் நேரத்தில், பலா இலைகளைக் கூடை வடிவில் முடைய வேண்டும். ஒரே அளவிலான நான்கு பலா இலைகளை எடுத்து, அவற்றின் நுனிகள் ஒன்றோடொன்று பொருந்துமாறு வைத்து, தென்னை ஈர்க்கு அல்லது சிறிய குச்சிகளைப் பயன்படுத்தி ஒரு சிறிய கிண்ணம் போன்று தைத்துக் கொள்ள வேண்டும். இலைகள் சற்று முதிர்ந்ததாக இருந்தால், ஆவியில் வேகும்போது அதன் வாசம் மிகச் சிறப்பாக இருக்கும்.
மாவு நன்றாகப் பொங்கி வந்தவுடன், அதனை மிகவும் வேகமாகப் கலக்காமல் மெதுவாகக் கலந்து, தயார் செய்து வைத்துள்ள பலா இலைக் கூடைகளில் முக்கால் பாகம் வரை ஊற்ற வேண்டும். இட்லிப் பானையில் தண்ணீர் வைத்து, இந்த இலைக் கூடைகளை நிமிர்த்து வைத்து ஆவியில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேகவைக்க வேண்டும்.
இட்லி வெந்தவுடன், உடனடியாகத் திறக்காமல் ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்தால், பலா இலையின் வாசம் மாவில் முழுமையாக இறங்கியிருக்கும். இலைகளை மெதுவாகப் பிரித்து எடுத்தால், பலா இலையின் அச்சு பதிந்த, ஆவி பறக்கும் சுவையான கொட்டோ இட்லி தயார்.
தேங்காய் சட்னி, காரமான சாம்பார் அல்லது தக்காளித் தொக்குடன் இதனைப் பரிமாறினால், இதன் தனித்துவமான மணத்திற்கும் சுவைக்கும் ஈடு இணையே இருக்காது. வளரும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இது எளிதில் செரிமானமாகக்கூடிய மிகச் சிறந்த உணவாகும்.
விடுமுறை நாட்களில், ஆரோக்கியம் நிறைந்த இந்தப் பாரம்பரிய உணவை உங்கள் வீட்டிலும் செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.