புரதச்சத்தும் நார்ச்சத்தும் அபரிமிதமாக நிறைந்துள்ள முளைக்கட்டிய பச்சைப் பயறு, மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட தேங்காய் பால் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்த ஒரு அசத்தலான உணவை சுலபமாகச் செய்ய முடியும். இந்த பச்சைப்பயறு சாதம் சுவையில் பிரியாணியையே மிஞ்சும் அளவுக்கு வீடே கமகமவென மணக்கும்.
இதற்கு பெரிய அளவில் எந்தவொரு சைட் டிஷ்ஷும் கூட தேவையில்லை; ஒரு காரசாரமான உருளைக்கிழங்கு வறுவல் அல்லது மொறுமொறுப்பான அப்பளம் இருந்தாலே போதும், தட்டு உடனே காலியாகிவிடும். சுவை நிறைந்த இந்த அட்டகாசமான உணவை குக்கரில் எப்படி உதிரியாகச் செய்வது என்று இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி - 1 கப்
முளைக்கட்டிய பச்சைப் பயறு - 1 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1.5 கப்
தண்ணீர் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1
நெய் மற்றும் சமையல் எண்ணெய் - தலா 1 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை!
முதலில் அரிசியை நன்றாகக் கழுவி 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் நீரை முழுமையாக வடித்துக்கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
இவை மணம் வீசியதும், நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்கு குழையும் வரை பிரட்டி விட வேண்டும்.
தக்காளி தொக்கு பதத்திற்கு வந்ததும், நாம் தயாராக வைத்துள்ள முளைக்கட்டிய பச்சைப் பயற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் மிதமான தீயில் வதக்க வேண்டும். முளைக்கட்டிய பயறு சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் அதிக நேரம் வதக்கத் தேவையில்லை. இப்போது இந்த பச்சைப்பயறு சாதம் செய்யத் தேவையான ஒரு கப் அரிசிக்கு, ஒன்றரை கப் கெட்டியான தேங்காய் பால் மற்றும் அரை கப் தண்ணீர் என்ற அளவில் ஊற்ற வேண்டும்.
தேங்காய் பால் சேர்ப்பதால் இந்த சாதம் அலாதியான சுவையைக் கொடுப்பதோடு, வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. இதனுடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு, கலவையைக் கொதிக்க விடவும்.
தேங்காய் பால் கலவை தளதளவெனக் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்துள்ள அரிசியை அதனுடன் சேர்த்து உடையாமல் மெதுவாகக் கிளறி விடவும். பின்னர் குக்கரை மூடி, மிதமான தீயில் இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். குக்கரின் ஆவி முழுமையாக அடங்கியதும் மூடியைத் திறந்தால், வீடு முழுவதும் மணக்கும் சத்தான மற்றும் சுவையான முளைக்கட்டிய பச்சைப்பயறு சாதம் உதிரியாகத் தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த ஆரோக்கியமான ரெசிபியை இன்றே உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.