
உங்கள் வீட்டில் உணவுப்பொருட்கள் மீந்துவிட்டதா? கவலை வேண்டாம். அதை சுவையாக்கி மாற்ற இதோ சில செயல்முறைகள்.
மீதமான குழம்பு, சாம்பார் கொண்டு சுவையான டிபன் சுலபமாக செய்துவிடலாம். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குழம்பு அல்லது சாம்பாரைக் கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்த ரவையைக் கொட்டிக்கிளறவும். வித்தியாசமான சுவையில் இன்ஸ்டன்ட் கிச்சடி தயார்.
ஊறுகாய் பாட்டிலில் காய் எல்லாம் தீர்ந்த பிறகு மிளகாய் வண்டல் மீந்திருந்தால் பாகற்காய், வெண்டைக்காய், குடைமிளகாய் போன்றவற்றில் அடைத்து சுவையான ஸ்டஃப்ட் வெஜிடபிள் கறி செய்யலாம்.
இடியாப்பம் மீந்துவிட்டால், அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊறவைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
கொத்துமல்லி சட்னி மீந்துவிட்டால், மோரில் சட்னியைப் போட்டு கரைத்து விடுங்கள். மசாலா மோர்போல் சுவையாக இருக்கும்.
தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்துவிட்டால், அதைக்கரைத்து உப்பு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால் பட்டு பட்டாக தோசை ருசியுடன் இருக்கும்.
மிகுந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
சாதம் மிகுந்துவிட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்து வடாம் போல் பிழிந்து காயவைக்கவும். இதை எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் மொறு மொறுவென்று இருப்பதுடன் சுவையிலும் அசத்தும்.
சமையலுக்கு வாங்கின முட்டைக்கோஸ் மிச்சம் வந்து விட்டதா? கோஸைப் பொடிப் பொடியாக நறுக்கி, அத்துடன் நிறைய வெங்காயத்தையும் நறுக்கிப் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கி, இக்கலவையுடன் கடலைமாவு, அரிசிமாவு, உப்புப்பொடி, மிளகாய்ப்பொடி கலந்து லேசாக தண்ணீர் தெளித்துப்பிசைந்து பக்கோடா மாதிரி போடலாம்.
பிரட் மீந்துவிட்டது என்றால் அதனை மிக்ஸியில் இட்டுப் பொடியாக்கி உப்பு, காரம், கரம் மசாலா, கொத்து மல்லித்தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து கட்லெட்டாக பொரித்து எடுக்கலாம். சுவையாக இருக்கும்.
சமையலுக்கு பயன்படுத்த முடியாத முற்றிய முருங்கைக்காய்கள் இருக்கிறதா? அவற்றின் விதைகளில் உள்ள பருப்புகளை வறுத்து சாப்பிட்டால் வேர்க்கடலை போன்ற ருசியில் இருக்கும்.
பருப்புவடை மீந்துவிட்டால் மறுநாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுத்து வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்க உசிலி சுவையாக இருக்கும்.
மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதிவிட்டால் சுவையான மோர்க்குழம்பு ரெடி.