
துவையல் சட்னி இரண்டுமே சுவையான ஒரு பக்க உணவு. சட்னியை தாளிப்பது வழக்கம். துவையலை பெரும்பாலும் தாளிப்பதில்லை. சட்னி நீர்க்க இருக்கும். துவையலோ விழுதாக கெட்டியாக இருக்கும். துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், டிபன் ஐட்டங்களுக்கும், கஞ்சி, கூழ், தயிர் சாதம், பழைய சோறுடன் தொட்டுக்கொள்ளவும் பக்க உணவாகக் கொள்ளலாம்.
துவையல் என்றாலே என் அம்மாவின் ஞாபகம் தான் வரும். அவர்கள் மிக்சியில் அரைக்க அனுமதிக்க மாட்டார்கள். இது என்ன டேஸ்டே இல்லை? அம்மியில் வழுமென்று அரைத்து வா. முடியவில்லை என்றால் சற்று கொரகொரப்பாகவாவது அரைத்து எடுத்து வா. அப்போதுதான் வாய்க்கு நன்றாக இருக்கும் என்பார்கள். அவர்களுக்கு மிக்சியில் அரைத்தால் பிடிக்காது. எனவே நாங்கள் அம்மியில் தான் பொருட்களை வைத்து இரண்டு ஓட்டு ஓட்டி எடுத்து வருவோம். அந்தத் துவையலையும் அப்படியே சாப்பிட மாட்டார்கள்.
இட்லியோ தோசையோ போட்டுக்கொண்டு பக்கத்தில் அரைத்த துவையலை வைத்து நடுவில் குழி பண்ணுவார்கள். அந்த குழியில் நல்லெண்ணையை தாராளமாக ஒரு முட்டை (ஸ்பூன்) விட்டு விரலால் இங்கும் அங்குமாக பிரட்டி விட்டு அப்புறம்தான் இட்லியையோ தோசையையோ முக்கி எடுத்து வாயில் வைப்பார்கள். அதை கண்ணை மூடிக்கொண்டு ருசித்து சாப்பிடுவதை பார்க்க வேண்டுமே! ஏதோ துவையலை சாப்பிடுவதற்காகவே பிறவி எடுத்தது போல் செய்வார்கள். சாப்பிட்டு முடித்ததும் ஏதோ பிறவிப் பயனை அடைந்தது போல் முகத்தில் அப்படியொரு மந்தகாசமான புன்னகை இருக்கும்.
சாப்பிடுவது என்னவோ மூன்று இட்லி தான். தோசை என்றால் இரண்டு. ஆனால் அதற்கு தொட்டுக் கொள்ள அரைக்கும் துவையலில் வித்தியாசம் கேட்பார். 'இன்றைக்கு ஒரு நாள் சட்னி அரைக்கிறேனே' என்றால் ஒத்துக் கொள்ள மாட்டார். 'தண்ணியா வாய்க்கு ருசியாக இல்லாமல் அது என்ன சட்னி? துவையலுக்கு ஈடாகுமா?' என்பார். இஞ்சி துவையல், கொத்தமல்லி துவையல், புதினா துவையல், பிரண்டைத் துவையல் என 'துவைத்து துவம்சமாக்கும்' துவையலை சாப்பிடுவதில் தான் அவருக்கு தனி ருசி.
தயிர் சாதத்திற்கு 'கறிவேப்பிலைத் துவையல்' கட்டாயம் தேவை என்பார். அடைக்கு 'சுட்ட கத்திரிக்காய் துவையல்' போல் வராது என்பார். அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கமெல்லாம் கிடையாது. பிரஷ்ஷாக செய்ய வேண்டும் அப்போதுதான் ருசியாக இருக்கும் என்பார்!
அதிலும் துவையலுக்கு அரைக்க உளுத்தம் பருப்பை தான் சேர்க்க வேண்டும் என்பார். அதுதான் வாசம். கடலைப்பருப்பு சரிப்படாது என்பார். பெருங்காயத்தூளை மறந்தும் சேர்க்கக்கூடாது. கட்டி பெருங்காயத்தை தண்ணீரில் நனைத்து ஒரு ஸ்பூன் அளவில் பெருங்காயத் தண்ணீரை விட்டு தான் அரைக்க வேண்டும் என்பார். ஒரு துவையலுக்கு இவ்வளவு அலப்பறை செய்யும் நபரை இதுவரை நீங்கள் கட்டாயம் பார்த்திருக்க மாட்டீர்கள்.
யாரும் செய்யவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டார். தானே களத்தில் இறங்கி விடுவார். அடுப்பங்கரையிலேயே மேடையில் அம்மி பதிக்கப்பட்டுள்ளது. சரசரவென பொருட்களை எடுத்து வைத்து, வறுக்க வேண்டியவற்றை வறுத்து உப்பு, புளி சேர்த்து சுறுசுறுப்பாக அரைத்து முடித்து விடுவார். எங்கள் வீட்டில் எப்போதும் துவையல் இருந்து கொண்டே இருக்கும் அதுவும் பிரஷ்ஷாக!
ஒவ்வொன்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருப்பார். தேங்காய் துவையல் என்றால் சாதத்தில் பிசைந்து சாப்பிடும் பொழுது தேங்காய் எண்ணெய் ஒரு முட்டை (1 ஸ்பூன்) விட்டுக் கொள்வார். பிரண்டை துவையலுக்கு நல்லெண்ணெய்தான். இஞ்சி துவையலுக்கு நெய் என்று வெரைட்டி காட்டுவார். சாப்பிட்டு முடித்ததும் முழுமையான திருப்தி அவர் முகத்தில் தெரியும்.
இதை படிக்கும் பொழுதே உங்களுக்கு ஆயாசமாக இருக்கிறதா? தினம் தினம் சந்திக்கும் எங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்கள்!