வரகரிசி, சாமையில் இத்தனை சுவையா? 4 சிறுதானிய ரெசிபிகள் இதோ!

காலை, மதியம், மாலை வேளைகளுக்கு ஏற்ற கேழ்வரகு, வரகரிசி, சாமை உணவுகளின் எளிய செய்முறைகள்.
சிறுதானியம்
சிறுதானியம் Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

1. சுவையான சிறுதானிய போண்டா:

முருங்கைக் கீரையில் இரும்பு சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளதால் இதனை வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள் 

கேழ்வரகு மாவு - 1/4 கப்

கோதுமை மாவு - 1/4 கப்

கடலை மாவு - 2 ஸ்பூன்

முருங்கைக்கீரை - 1 சிறிய கப்

வெங்காயம் - 1

உப்பு - தேவையானது

காரப்பொடி - 1/2 ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

கேழ்வரகு மாவு, கோதுமை மாவு மற்றும் கடலை மாவு மூன்றையும் நன்கு கலந்து அத்துடன் பொடியாக நறுக்கிய முருங்கைக் கீரை 1 கப், வெங்காயம் 1/4 கப் சேர்த்து தேவையான உப்பு, காரத்தூள் கலந்து தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்குப் பிசைந்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் போண்டாக்களாக போட்டு பொரித்து எடுக்க மிகவும் சுவையான மாலை சிற்றுண்டி தயார். பள்ளியிலிருந்து வரும் குழந்தைகள் முதல் வீட்டுப் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

2. வரகரிசி மசாலா வடை:

புரதச்சத்து நிறைந்த மாலை நேரத்துக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், செய்வதும் எளிது.

தேவையான பொருட்கள் 

வரகரிசி - 1 கப்

பாசிப்பயறு - 1/4 கப் கொண்டைக்கடலை 1/4 கப்

வரமிளகாய் - 4

இஞ்சி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்

வெங்காயம் - 1

சோம்பு - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையானது

எண்ணை - பொரிக்க

செய்முறை:

வரகரிசி, பாசிப்பயறு, கொண்டைக்கடலை ஆகியவற்றை 3 மணி நேரம் நன்கு ஊறவிடவும். இதனுடன் வர மிளகாய், தோல் நீக்கிய இஞ்சித் துண்டுகள், தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சோம்பு மற்றும் கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்த வடை மாவை வடைகளாகத் தட்டி எடுக்க மிகவும் ருசியாக இருக்கும்.

சிறுதானியம்
சிறுதானியம்Gemini image

3. சாமை எலுமிச்சை சாதம்:

தேவையான பொருட்கள் 

லஞ்ச் பாக்ஸ் மற்றும் மதிய உணவிற்கு ஏற்றது.

சாமை அரிசி - 1 கப்

தண்ணீர் - 2 கப்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்

கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்

கடுகு, மஞ்சள் தூள் - சிறிது

பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையானது

இதையும் படியுங்கள்:
பாரம்பரியம் முதல் சாக்லேட் வரை: 4 அசத்தல் கொழுக்கட்டைகள்!
சிறுதானியம்

செய்முறை:

சாமையை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவி 2 கப் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு உதிரியாக வேகவைத்து சிறிது ஆறவிடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து கடுகு பொரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு, பெருங்காயத்தூள் மற்றும் சாமை சாதத்தை சேர்த்து மெதுவாகக் கிளறி விட ருசியான, மணமான சாமை எலுமிச்சை சாதம் தயார். பொரித்த வடாம் வத்தலுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

4. முருங்கைக்கீரை பருப்பு கடையல்:

சமைத்த வரகரிசி, சாமை போன்ற சிறுதானியத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் 

முருங்கைக்கீரை - 1 கப்

துவரம் பருப்பு - 1/4 கப்

தக்காளி - 2

பூண்டு - 4 பற்கள்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 6

கடுகு, சீரகம் - தாளிக்க

இதையும் படியுங்கள்:
உடலுக்குத் தெம்பு தரும் வெள்ளைச் சோளம்: பாரம்பரிய முறையில் 3 அருமையான ரெசிபிகள்!
சிறுதானியம்

செய்முறை:

குக்கரில் பருப்பு, தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்த பருப்புடன் சுத்தம் செய்த முருங்கை கீரை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். மூடி வைத்து வேகவிட வேண்டாம்; கீரையின் நிறம் மாறிவிடும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் சேர்த்து தாளித்து கீரையில் கொட்டவும். தேவையான உப்பு கலந்து மத்து கொண்டு லேசாக கடைந்தெடுக்க சுவையான முருங்கை கீரை பருப்புக் கடையல் தயார். இதனை வரகரிசி, சாமை போன்ற சிறுதானிய சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

அன்றாட சமையலில் சிறுதானியம் சேர்க்க நினைப்பவர்களுக்கு போண்டா, வடை, எலுமிச்சை சாதம் மற்றும் முருங்கைக்கீரை பருப்புக் கடையல் ஆகிய நான்கு சுவையான உணவுகளின் தெளிவான செய்முறைகள் கிடைக்கும்.