கல்யாண வீட்டு கோவக்காய் பொரியல்: நிறம் மாறாமல், குழையாமல் வீட்டில் செய்து அசத்த எளிய 3 வழிகள்!

பிஞ்சுக் காய் தேர்வு முதல் மசாலா பொடி சேர்க்கும் நேரம் வரை அசத்தலான டிப்ஸ்.
கோவக்காய் பொரியல் - Kovakkai Poriyal
கோவக்காய் பொரியல் - Kovakkai Poriyal
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

நாம் வீட்டில் செய்யும் கோவக்காய் பொரியல் சில நேரம் குழைந்துவிடுவது உண்டு. குழைந்தாலே கலரும் மாறிவிடும். பார்ப்பதற்கும் கொழ கொழப்பாக இருக்கும்.

ஆனால், கல்யாண வீட்டு கோவக்காய் பொரியலைப் பார்ப்பதற்கே அட்டாக்ஷனாக இருக்கும். கல்யாண வீட்டுச் சமையலில் கோவக்காய் பொரியல் பார்ப்பதற்குப் பசுமை மாறாமல், எண்ணெயில் வதங்கினாலும் உடையாமல், தனித்தனியாக (உதிரி உதிரியாக) மொறுமொறுப்புடன் வருவதற்குச் சமையல் கலைஞர்கள் பின்பற்றும் மூன்று மிக முக்கியமான நுட்பங்கள் பற்றி தெரிந்துகொண்டால், நாமும் வீட்டில் செய்து அசத்தலாமே. அப்படி செய்து அசத்த சிறந்த வழிமுறைகள் இதோ:

காய் தேர்வும் நறுக்கும் முறையும்:

முதலில் காய்களை வாங்கும் பொழுது விரலால் அழுத்திப் பார்த்து வாங்கவேண்டும். காய் நன்கு அழுத்தமாக நன்கு பிஞ்சான, பசுமையான இளங்கோவக்காய்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலும் சிவந்த விதைகள் முற்றிய காய்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விடவேண்டும்.

சீரான நீளவாக்கு நறுக்கல்: காய்களை நீளவாக்கில் மெல்லியதாக நான்கு அல்லது ஆறு துண்டுகளாக நறுக்குவது சிறந்தது. இவ்வாறு நறுக்கும்போது எல்லாத் துண்டுகளும் ஒரே சீராக வேகும்; ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிரியாகவும் இருக்கும். ஆதலால் பொறுமையாக நறுக்குவது அவசியம்.

திறந்த வாணலியல் வதக்குதல்:

​கோவக்காயில் இயற்கையாகவே ஈரப்பதம் உண்டு. ஆதலால் சமைக்கும்பொழுது ​நிறம் மாறாமல் இருக்க, அடிகனமான அகலமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, முதல் 2 நிமிடம் மட்டும் மூடி வைத்துப் பிறகு ,திறந்து வைத்து மிதமான தீயில் வதக்கவேண்டும். மூடி போட்டு அதிக நேரம் வேகவைத்தால் காயிலுள்ள குளோரோபில் (Chlorophyll) சிதைந்து நிறம் மாறிவிடும். எண்ணெய் அதிகம் விடுவதால் மூடிவைக்காமல் திறந்து வைத்துக்கொண்டே வதக்கினால் உதிரி உதிராக வருகிறது.

​உப்பு மற்றும் மசாலா சேர்க்கும் சரியான நேரம்:

காய் முக்கால் பாகம் வதங்கி மொறுமொறுப்பான பதத்திற்கு வந்த பிறகே உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.

கல்யாண வீட்டு மசாலா பொடி: கடைசியில் வறுத்து அரைத்த கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த் துருவல் கலந்த பொடியைத் தூவி இறக்கினால், மீதமுள்ள ஈரப்பதத்தையும் அது உறிஞ்சி பொரியலைத் தனித்தனியாகவும் சுவையாகவும் வைத்திருக்கும்.

இந்த மூன்று குறிப்புகள்தான் கல்யாண வீட்டு கோவக்காய் பொரியலின் அந்த அசத்தலான நிறத்திற்கும், குழையாமல் உதிரியாக இருக்கும் நுணுக்கத்திற்குமான ரகசியம்.

இனி, கல்யாண வீட்டுச் சுவையுடன், பசுமை மாறாமல், குழையாமல் உதிரி உதிரியாக இருக்கும் கோவக்காய் பொரியல் செய்முறை பற்றி பார்ப்போம்:

இதையும் படியுங்கள்:
உப்புமா வேண்டாம் என்பவர்களும் விரும்பும் கம்பு ரவை உப்புமா, கிச்சடி ரெசிபிகள்!
கோவக்காய் பொரியல் - Kovakkai Poriyal

தேவையான பொருட்கள்:

நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிய பிஞ்சுக் கோவக்காய் -250 கிராம்

கடலை எண்ணெய்- 3 மேசைக்கரண்டி

கடுகு -1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி

வேர்க்கடலை- ஒரு தேக்கரண்டி

பெருங்காயத்தூள்- கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை- 1 கொத்து

மஞ்சள் தூள்-கால் தேக்கரண்டி

உப்பு: தேவையான அளவு

​கல்யாண வீட்டு மசாலா பொடிக்கு வறுத்து அரைக்க

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு-1 மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு-1 தேக்கரண்டி

​தனியா விதை - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 3 அல்லது 4 (காரத்திற்கு ஏற்ப)

தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி

மேற்கூறிய பொருட்களை தயாராக வைத்துக்கொண்டு முதலில் மசாலா பொடி தயாரிக்கவேண்டும்.

​ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். அடுப்பை அணைத்த பின் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அந்தச் சூட்டிலேயே லேசாகப் புரட்டி ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக (Coarse powder) அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

கோவக்காய் பொரியல் - Kovakkai Poriyal
கோவக்காய் பொரியல் - Kovakkai Poriyal

செய்முறை:

​ பிஞ்சான கோவக்காய்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரப்பதம் இல்லாமல் துடைத்து, காம்புகளை நீக்கிவிட்டு நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இப்பொழுது அகலமான, அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்துப் பொரிய விடவும். அடுத்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இப்போது நறுக்கி வைத்துள்ள கோவக்காய்களைச் சேர்த்து, தண்ணீர் தெளிக்காமல் மிதமான தீயில் நன்கு கிளறிவிடவும்.

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு மோர்க்குழம்பு ருசி ரகசியம்! வீட்டில் இப்படி வைங்க!
கோவக்காய் பொரியல் - Kovakkai Poriyal

வாணலியை மூடி போடாமல் திறந்த நிலையிலேயே வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு 8 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கவும்.​ காய் எண்ணெயிலேயே வதங்கி, தோல் சுருங்கி முக்கால் பாகம் வெந்து மொறுமொறுப்பான பதத்திற்கு நன்றாக வதங்கி வரும். இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.​

இறுதியாக, அரைத்து வைத்துள்ள கல்யாண வீட்டு மசாலா பொடியைத்தூவி, அடுப்பைச் சிறிய தீயில் வைத்து 1 முதல் 2 நிமிடங்கள் நன்கு பிரட்டி இறக்கவும். கம கம வாசனையுடன் நிறம் மாறாமல் குழையாமல் கல்யாண வீட்டு கோவக்காய் பொரியல் ரெடி.இதை சூடான சாதம், சாம்பார், ரசம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

கல்யாண வீட்டு கோவக்காய் பொரியல் நிறம் மாறாமல், குழையாமல் வர நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான மூன்று குறிப்புகள்:

1. இளங்காய்களை தேர்ந்தெடுத்து மெல்லியதாக நீளமாக நறுக்கி வைக்கவேண்டியது அவசியம். இதுதான் பசுமை மாறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். பழுத்த முற்றிய காய்கள்தான் கொழ கொழப்பிற்கு காரணம்.

2. தண்ணீர் சேர்க்காமல் திறந்த வெளியில் வைத்து அடிக்கடி கிளறிவிட்டு சமைப்பது அது உதிர் உதிராக வருவதற்கு முக்கிய காரணம்.

3. கோவக்காயை எண்ணெயில் போட்ட உடனேயே உப்பு சேர்த்தால், காயிலிருந்து தண்ணீர் வெளியேறி அது வேகத் தொடங்கி குழைந்துவிடும். ஆதலால் முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு சேர்ப்பதுதான் சரியான பதம்.

உபரி தகவல்: மசாலா பொடி சேர்த்த பிறகு நீண்ட நேரம் அடுப்பில் வைத்தால் தேங்காய் நிறம் மாறலாம்; எனவே 2 நிமிடங்களில் இறக்கிவிடுவது சிறந்தது.

சுருக்கமாக இதைப் படிப்பவர்கள் செய்து பார்த்து அசத்த தெரிந்துகொள்ள வேண்டியது "தண்ணீர் சேர்க்காமல் திறந்த வாணலியில் கோவக்காயை வதக்கி, முக்கால் பாகம் வெந்த பின் உப்பும், வறுத்து அரைத்த பருப்பு-தேங்காய் பொடியும் சேர்த்துப் பிரட்டுவது கல்யாண வீட்டுப் பொரியலின் பசுமையையும் மொறு மொறுப்பையும் தக்கவைக்கிறது" என்ற நுணுக்கத்தை தான். செய்து அசத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
அவியல் குழைந்து நீர்த்துப் போகுதா? கல்யாண வீட்டுப் பதத்தில் வர 6 எளிய டிப்ஸ்!
கோவக்காய் பொரியல் - Kovakkai Poriyal