ஓணம் ஸ்பெஷல்: வாசனை கமழும் சுவையான பலாப்பழப் புட்டு செய்முறை!

பாரம்பரிய ஓணம் பண்டிகைக்கு வீடே மணக்கும் பலாப்பழப் புட்டு 10 நிமிடத்தில் சுலபமாக செய்யலாம்.
பலாப்பழப் புட்டு - Onam Special Dish
பலாப்பழப் புட்டு - Onam Special Dish
Updated on

“எப்ப பார்த்தாலும் வீட்டுல தோசை... சப்பாத்தி... இதையே சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். அதுவும் இல்லன்னா சோறு, குழம்பு, சாம்பார், ரசம்... இப்படியே போய்க்கிட்டே இருக்கு. கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கு... ஆனா என்ன சாப்பிடுறதுன்னே தெரியல!” என்று என் தோழி மீனாட்சி வீட்டுக்கு வந்ததும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

“சரி... நீ உட்காரு. ஒரு பத்து நிமிஷம் இரு. நான் உனக்கு ஒரு வித்தியாசமான டிஷ் செஞ்சு தர்றேன்!” என்றேன்.

“என்ன செய்யப் போற?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

“பலாப்பழத்துல புட்டு!” என்றதும், அவள் முகத்தில் ஒரு நிமிடம் ஆச்சரியம்.

“பலாப்பழத்துல புட்டா? இதுவரைக்கும் அப்படி ஒரு புட்டு சாப்பிட்டதே இல்லையே!”

அதுதான் இந்த ஓணம் ஸ்பெஷல் பலாப்பழப் புட்டு!

வாங்க... வாசனை கமழும் பலாப்பழப் புட்டு செய்வோம்!

தேவையான பொருட்கள்:

வறுத்த அரிசி மாவு – 2 கப்

நன்றாகப் பழுத்த பலாப்பழச் சுளைகள் – 8 முதல் 10

துருவிய தேங்காய் – 1 கப்

ஏலக்காய்த்தூள் – ½ டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

வெதுவெதுப்பான தண்ணீர் – தேவையான அளவு.

முதலில்... பலாப்பழத்தின் பக்குவம்! பலாப்பழச் சுளைகளிலிருந்து விதைகளை நீக்கிக்கொள்ளுங்கள். அவற்றை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

முழுவதுமாக அரைத்துவிட வேண்டாம்.

சிறிது சிறிதாக பலாப்பழத்தின் சதை தெரிந்தால், சாப்பிடும்போது அதன் சுவையும் நன்றாகக் கிடைக்கும்.

அடுத்து... புட்டு மாவு!

ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு சிட்டிகை உப்பும் ஏலக்காய்த்தூளும் சேர்த்து கலக்கவும்.

பின்னர் அரைத்த பலாப்பழத்தைச் சேர்த்து மெதுவாகப் பிசையத் தொடங்குங்கள்.

பலாப்பழத்திலேயே இயற்கையான ஈரப்பதம் இருப்பதால், தண்ணீரை அதிகமாக ஊற்றவேண்டிய அவசியமில்லை.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
பலாப்பழப் புட்டு - Onam Special Dish

தேவைப்பட்டால் மட்டும் வெதுவெதுப்பான தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து, புட்டு மாவுக்கான சரியான பதத்துக்குக் கொண்டு வரவேண்டும்.

இங்கேதான் புட்டின் முக்கியமான பக்குவம்!

மாவை நன்றாக உருண்டையாகப் பிடித்தால் அது புட்டு மாவு அல்ல!

கையில் அழுத்தினால் ஒன்றாகப் பிடிக்க வேண்டும்...

விரலால் உதிர்த்தால் மீண்டும் உதிரியாக வேண்டும்.

அதுதான் சரியான புட்டு பதம்.

இப்போது... தேங்காயும் பலாப்பழமும்!

புட்டுக் குழலில் முதலில் சிறிது துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.

அதன் மேல் பலாப்பழம் கலந்த புட்டு மாவை நிரப்புங்கள்.

மீண்டும் தேங்காய்...

மீண்டும் புட்டு மாவு...

இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒவ்வொரு துண்டிலும் தேங்காயும் பலாப்பழமும் அழகாகக் கிடைக்கும்.

பின்னர் புட்டுக் குழலை ஆவியில் வைத்து சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

ஆவி வெளியே வரத்தொடங்கியதும்...

பலாப்பழத்தின் மணம் வீட்டையே சுற்றி வரும்!

பலாப்பழம் சுவைக்காக மட்டுமா?

அப்படியில்லை!

பலாப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன.

பலாப்பழப் புட்டு - Onam Special Dish
பலாப்பழப் புட்டு - Onam Special Dish

அதேபோல், அரிசி மாவு நம் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகிறது. தேங்காய் சிறிதளவு நார்ச்சத்துடன் கொழுப்பையும் வழங்குகிறது.

அதனால் இந்தப் புட்டு சுவையானதுடன் சில ஊட்டச்சத்துகளையும் தரக்கூடிய உணவாக இருக்கிறது.

ஆனால் பலாப்பழத்திலும் இயற்கையான சர்க்கரை இருப்பதால், அதற்கு மேலாக அதிக நாட்டுச்சர்க்கரை, வெல்லம் அல்லது நெய் சேர்த்து சாப்பிடாமல் அளவோடு ரசிப்பது நல்லது.

ஒரு சின்ன ரகசியம்!

பலாப்பழம் நன்றாகப் பழுத்ததாக இருந்தால், அதிலிருக்கும் இயற்கையான இனிப்பே போதுமானதாக இருக்கும்.

ஆனால் இன்னும் கொஞ்சம் இனிப்பு வேண்டுமென்றால், பரிமாறும்போது சிறிதளவு நாட்டுச்சர்க்கரையையும் ஒரு துளி நெய்யையும் சேர்த்துப் பாருங்கள். அந்த சூடான புட்டில் நெய் உருகி இறங்கும்போது...

பலாப்பழத்தின் மணம் + தேங்காயின் சுவை + நெய்யின் வாசனை...

மூன்றும் சேர்ந்து மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்!

புட்டு ஆறினாலும் சற்று ஈரப்பதத்துடன் மென்மையாக வறண்டுவிடாமல் இருக்கும்!

இதையும் படியுங்கள்:
ஓணம் கொண்டாட்டத்தை இனிமையாக்க நாவூறும் பலாப்பழப் பொங்கல்!
பலாப்பழப் புட்டு - Onam Special Dish

இந்த ஓணம் திருநாளில் வழக்கமான புட்டுக்கு பதிலாக ஒருமுறை பலாப்பழப் புட்டு செய்து பாருங்கள்.

வாழை இலையில் சூடாகப் பரிமாறி, அருகில் சிறிது தேங்காயும் நாட்டுச்சர்க்கரையும் வைத்தால்...

பார்க்க அழகு...

மணம் அருமை...

சுவைக்க இன்னும் அருமை!

ஓணம் என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல...

நம் உணவுகளின் வழியாக அன்பையும் பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு அழகான தருணம்!

logo
Kalki Online
kalkionline.com