

பத்து வகையான பாயசம் டிப்ஸ்…
* ஜவ்வரிசி பாயசம் செய்வதற்கு முன் ஜவ்வரியை லேசாக வறுக்கவும். அதில் வெந்நீரை ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு பாயசம் செய்தால், விரைவில் வெந்துவிடும். கேஸ் செலவும் மிச்சமாகும்.
* பாயாசத்தில் உலர் திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை நெய்யில் வறுத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.
* அவல் பாயாசம் செய்யும்போது சிறிது பாலுக்கு பதிலாக தேங்காய்ப்பால் கலந்து செய்தால் மணமும் சுவையும் கூடும்.
* பால் பாயசம் செய்யும்பொழுது கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு செய்தால் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.
* சேமியா பாயசம் செய்யும்போது சேமியாவை வெறும் வானவில் வறுத்து விட்டு பாலில் கலந்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிர் உதிராக வரும்.
* பாயசத்துக்கு பால் குறைவாக இருந்தால், ஒரு டேபிள்ஸ்பூன் ஹார்லிக்ஸை வெந்நீரில் கட்டி இல்லாமல் கரைத்து, சேர்த்துவிடுங்கள். பாயசம் நிறமாகவும் சுவையாகவும் இருக்கும்.
* நான்ஸ்டிக் கடாயில் பாயாசம் செய்தால் அடிப்பிடிக்கும் வாய்ப்பே கிடையாது.
* எந்த பாயாசமாக இருந்தாலும் சிறிது சாரை பருப்புகளை நெய்யில் வறுத்துப்போட்டால் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்.
* பாயாசம் நீர்த்துப் போய்விட்டால் சிறிது பொட்டுக் கடலை மாவினை பாலில் கரைத்து பாயாசத்தில் சேர்த்துவிட்டால் போதும் பாயாசம் திக் ஆகிவிடும். சுவையும் கூடும்.
* பாயாசத்திற்கு நெய்யில் முந்திரி, திராட்சை வறுக்கும் போது, சிறு சிறு தேங்காய் துண்டுகளையும் வறுத்து போட்டால், பாயாசம் கம கமக்கும்.
முத்தான மூன்று வகை மினி இட்லி ரெசிபிகள்:
தயிர் மினி இட்லி!
தேவை:
மினி இட்லி - 20.
தயிர் - 2 கப்.
சாட் மசாலா - ஒரு டீஸ்பூன்.
சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு - தலா கால் டீஸ்பூன்.
மாதுளை முத்துக்கள், முளைகட்டிய பயறு - தலா 4 டீஸ்பூன்.
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை:
முதலில் தயிருடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சாட்மசாலா சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மாதுளை முத்துக்கள், முளைப்பயறு, மினி இட்லி சேர்த்துக் கலந்து, கொத்துமல்லி தூவி பரிமாறவும். சுவையான தயிர் மினி இட்லி தயார்.
பெப்பர் மினி இட்லி
தேவை:
இட்லி மாவு - 2 கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத் தெடுங்கள். மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக்கிளறுங்கள். மிளகு மணமும், காரமும் சேர்ந்து, சுவை தரும் பெப்பர் மினி இட்லி ரெடி.
வேர்கடலை மினி இட்லி
தேவை:
இட்லி மாவு – ஒரு கப்,
பச்சை வேர்க்கடலை – 25 கிராம்,
கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப் பிலை – சிறிதளவு,
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்),– ஒன்று
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வேர்க்கடலையை வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறி வேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். மாவுடன் தாளித்த பொருள்கள், வேகவைத்த வேர்க் கடலை சேர்த்துக் கலக்கவும். மினி இட்லித்தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக வேகவிட்டு எடுக்கவும். அல்டிமேட் சுவையில் வேர்க்கடலை மினி இட்லி ரெடி.