

1. பென்டே பெலே சட்னி
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - ¾ கப்
பச்சை மிளகாய் - 9
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு - கொட்டை இல்லாத புளி
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் பூ - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
பெருங்காய தூள் - ¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
வெந்தயம் - ¾ டீஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பை குக்கரில் போட்டு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்தெடுத்துக் கொள்ளவும். பின் அதை பொடியாக்கவும்.
அதே வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்களை வதக்கி எடுக்கவும். பின் மிக்ஸியில் தேவையான அளவு உப்பு, புளி, வதக்கிய பச்சை மிளகாய்கள் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பை வடி கட்டி நீரில்லாமல் பிரித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதனுடன் வெந்தயப் பொடி, அரைத்தெடுத்த விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு தாளிப்புக் கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயப் பொடி சேர்த்து மிதமான தீயில் தாளித்து சட்னியில் ஊற்றி கலந்துவிடவும்.
சுவையான பென்டே பெலே சட்னி தயார். இதை சப்பாத்தி, தோசை போன்ற டிபனுடன் சேர்த்து உண்ணலாம்.
2. கிரீமி முருங்கைக் கீரை சன்னா கிரேவி - ரெசிபி
தேவையான பொருட்கள்:
வெள்ளை நிற கொண்டை கடலை - ½ கப்
இலை இலையாய் பிரிதெடுத்த முருங்கை கீரை - ¾ கப்
கெட்டித் தயிர் - ½ கப்
துண்டு துண்டாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
உரித்த பூண்டுப் பல் - 10
சீரகம் - ¾ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடிசா நறுக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - ¾ டீஸ்பூன்
பட்டர் - 50 கிராம்
ஃபிரஷான கொத்தமல்லி இலைகள் - 10
செய்முறை:
கொண்டைக் கடலையை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
முருங்கை கீரை இலைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஆறேழு நிமிடங்கள் வேகவிடவும். பின், ஆறியவுடன் நீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.
அதனுடன் இஞ்சி துண்டுகள் மற்றும் தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சீரகம், பூண்டு, வெங்காயம் மூன்றையும் ஒன்றிரண்டாய் நசுக்கி எண்ணெயில் போட்டு வதக்கவும்.
அதனுடன் அரைத்த கீரை பேஸ்டை ஊற்றி கலந்துவிடவும். பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும். கிரேவி பதத்திற்கு தேவைப்படும் தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வேக வைத்த கொண்டைக் கடலை மற்றும் பட்டர் சேர்த்து, சிறு தீயில் மேல் கீழாகக் கலந்து, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். மேற்பரப்பில் கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும். இந்த கிரேவியை சாதம் மற்றும் சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொள்ள சுவையாய் இருக்கும்.
சமையலறையில் எளிதாக மாற்றி அமைக்கக்கூடிய இரண்டு புதிய மற்றும் சுவையான சைட் டிஷ் ரெசிபிகள்.