

பிரண்டைத் துவையலை சாதத்தில் பிசைந்து அவரைக்காய் மிளகு கூட்டு, வாழைக்காய் பொடிமாஸுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
1. பிரண்டை துவையல்:
பிரண்டை - சிறு கட்டு
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய் - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
கருப்பு எள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையானது
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
வெல்லம் - ஒரு துண்டு
செய்முறை:
நார் உரித்த பிரண்டையை எண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதக்கவில்லை என்றால் தொண்டையை அரிக்கும்.
உளுத்தம் பருப்பு, மிளகாய், மிளகு, சீரகம், கருப்பு எள் ஆகியவற்றையும் சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்கு வறுத்தெடுக்கவும். சூடு சிறிது ஆறியதும் சின்ன நெல்லிக்காய் அளவு புளி, ஒரு துண்டு வெல்லம் சேர்த்து வதக்கிய பிரண்டையுடன் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் எடுத்து பிரண்டைத் துவையலில் போட்டுக் கலக்க மிகவும் ருசியான பிரண்டைத் துவையல் தயார்.
பிரண்டையில் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து), விட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும், எலும்பு முறிவுகளை விரைவாக குணமாக்கும் ஆற்றலும் கொண்டது. இதில் உள்ள நார்ச்சத்து அஜீரணக் கோளாறுகளைப் போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.
2. வாழைக்காய் பொடிமாஸ்:
வாழைக்காய் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
எலுமிச்சம் பழம் - 1மூடி
உப்பு - தேவையானது
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் துருவல் - 1/4 கப்
செய்முறை:
வாழைக்காயை பாதியாக நறுக்கி வாணலியில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக விடவும். தோலைக் கையால் கிள்ளி எடுக்க வேண்டும். அதுவே சரியான வெந்தப்பதம். இறக்கி சிறிது ஆறியதும் கையால் உதிர்த்துக் கொள்ளவும் அல்லது கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி பச்சை மிளகாயுடன் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு கடுகு பொரிந்ததும் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து உதிர்த்து வைத்துள்ள வாழைக்காயையும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும். அதில் தேவையான உப்பு, மஞ்சள் தூள், துருவிய தேங்காய் சேர்த்துக் கலந்து இறக்கி எலுமிச்சை சாறு பிழியவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி விட மிகவும் ருசியான வாழைக்காய் பொடிமாஸ் தயார்.
வாழைக்காயில் வைட்டமின்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குடலை சுத்தப்படுத்தும், ரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை தடுத்து சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
3. அவரைக்காய் மிளகு கூட்டு:
அவரைக்காய் - 1/4 கிலோ
வெந்த பயத்தம்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையானது
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
தேங்காய் எண்ணெய், கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சிறிது அவரைக்காயை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
தேங்காயுடன் மிளகாய்க்கு பதில் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து வெந்த அவரைக்காயில் கலந்து கொதிக்க விடவும். அரை கப் வெந்த பயத்தம் பருப்பையும் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க மிகவும் ருசியான அவரைக்காய் மிளகு கூட்டு தயார். மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
அவரைக்காயில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
பாரம்பரிய சுவையில் நாவிற்கு விருந்தளிப்பதோடு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் சத்தான மதிய உணவு காம்போவை மிக எளிதாக வீட்டில் தயார் செய்யலாம்.