

புதுவிதமான சுவையில் அசத்தலான பர்பி வகைகள் தயாரிக்கும் வழிமுறைகள்
1. மலாய் பர்பி
தேவையான பொருட்கள்:
பால் - ஒன்றே கால் லிட்டர்
எலுமிச்சைப்பழம் (பெரியது) - 1 (சாறு எடுக்கவும்)
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
நெய் - 50 மில்லி
பாதாம், பிஸ்தா - அலங்கரிக்க
செய்முறை:
கால் லிட்டர் பாலை தனியே எடுத்து வைக்கவும். மீதம் உள்ள ஒரு லிட்டர் பாலை நன்கு கொதிக்க வைக்கவும். இதிலிருந்து ஒரு கரண்டி பால் எடுத்து, இதில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றினால், பால் திரிந்துவிடும். இதை, கொதிக்க வைத்த பாலில் ஊற்றவும். பால் திரிந்து மிதக்க ஆரம்பிக்கும். இதை மஸ்லின் துணியில் நன்கு வடிகட்டவும். இதுதான் பனீர்.
மஸ்லின் துணியுடன் சேர்த்து டேப் தண்ணீரில் சிறிது அலசி பனீரை நன்கு அலசிவிடவும். இதனால் பனீரில் உள்ள எலுமிச்சையின் மணம் அறவே அகன்றுவிடும்.
தனியாக எடுத்து வைத்த கால் லிட்டர் பாலை கொதிக்க வைத்து, அதில் பனீரைச் சேர்த்துக் கலக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் ஊற்றி குறைந்த தீயில் நன்கு கிளறவும். சுவையான மலாய் பர்பி ரெடி.
2. கேரட் பர்பி
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
துருவிய கேரட் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
ஏலக்காய்த்தூள் - 5 பொடித்தது
நெய் - 6 ஸ்பூன்
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கம்பிப் பாகு வைக்கவும். பாகு வெந்ததும் அதில் துருவிய தேங்காய், துருவிய கேரட் இரண்டையும் சேர்த்துக்கிளறவும். நன்றாகச் சுருண்டு வரும் போது, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் ஊற்றி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
பாதி ஆறியதும் துண்டு போட்டு வைக்கவும். நன்றாக ஆறியவுடன் ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் பர்பி தட்டில் ஒட்டாமல் பேப்பரில் வந்துவிடும். அல்டிமேட் சுவையில் கேரட் பர்பி ரெடி இந்த பர்பி பார்க்க மஞ்சள், வெள்ளை நிறத்துடன் அழகாக இருக்கும்.
3. ஆப்பிள் பர்பி
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – 1
சர்க்கரை – 150 கிராம்
தேங்காய் – அரை மூடி
ரவை – 4 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
சர்க்கரையை மூழ்கும் வரை தண்ணீர் விட்டுக் கரைய விடவும். ஆப்பிள் தோல் சீவி பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஆப்பிள் மற்றும் தேங்காயை சர்க்கரைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
ரவை தூவி சேர்த்து நெய் விட்டு ஏலக்காய்த்தூள் போட்டு மேலும் கெட்டியாகக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடவும். வித்தியாசமான சுவையில் ஆப்பிள் பர்பி ரெடி.
4. பாசிப்பருப்பு பர்பி
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
நெய் - 5 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 15
செய்முறை:
பாசிப்பருப்பு பர்பி செய்வதற்கு முதலில் 200 கிராம் பாசிப்பருப்பு எடுத்து அதனை கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கருக்கு மாற்றி விடுங்கள். இதனோடு இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் மூன்று விசில் வரும் வரை வேக விடவேண்டும். பாசிப்பருப்பு குழைய வேகவைக்க வேண்டும்.
பாசிப்பருப்பு வெந்த பின் அதனை நன்றாக மசித்து வைத்து ஆற விடவும். இப்போது 15 முந்திரி பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்யுங்கள். இந்த பொடியோடு ஆறிய பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து 100 கிராம் பொடித்த வெல்லம் சேர்த்து கொள்ளுங்கள்.
200 கிராம் பாசிப்பருப்பிற்கு 100 கிராம் வெல்லம் சரியாக இருக்கும். கூடவே 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் வடிகட்டிய வெல்லத் தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கொள்ளலாம்.
இதனோடு நான்கு டீஸ்பூன் நெய், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருங்கள். முதலில் அல்வா பதத்திற்கு வரும். அதன் பிறகு நன்றாக கெட்டியாகி பர்பி பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும். பர்பி பதத்திற்கு வந்த பின் ஒரு ஸ்பூன் நெய் தடவிய பாத்திரத்தில் இதனை கொட்டி, ஆறியதும் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளலாம். சுவையான பாசிப்பருப்பு பர்பி ரெடி.
5. பனங்கிழங்கு பர்பி
தேவையான பொருட்கள்:
வேகவைத்த பனங்கிழங்கு. - 6
தண்ணீர் -1/4கப்
சர்க்கரை -1 கப்
ஏலக்காய் - 2
நெய் -2 டீஸ்பூன்
துருவிய பிஸ்தா பருப்பு -1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கீரிஸ் செய்து வைக்கவும். வேகவைத்த பனங்கிழங்கின் வெளி பக்கத்தில் உள்ள நார்களை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பின்பு மிக்ஸி ஜாரில் ஏலக்காயுடன் சேர்த்து ஒரிண்டு சுற்றுகள் அரைத்து எடுக்கவும். (துருவிய தேங்காய் பதம்)
ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு துருவலை மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பனங்கிழங்கு துருவல் சர்க்கரையுடன் நன்றாக கலந்து கெட்டியாக மாறும் வரை வதக்கவும்.
இறுதியாக மீதமுள்ள நெய் சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் நன்கு வதக்கி பின்பு நெய் தடவிய தட்டில் பரப்பி வைக்கவும். பின்பு துருவிய பிஸ்தா பருப்பை தூவி விட்டு, விருப்பமான வடிவில் வெட்டி எடுக்கவும். சுவையான பனங்கிழங்கு பர்பி தயார்.
இந்த எளிமையான செய்முறைகள் மூலம், சமையலறையில் நீண்ட நேரம் செலவிடாமல், எதிர்பாராத விருந்தினர்களுக்கு அல்லது திடீர் இனிப்பு ஆசைக்கு, மிகக் குறைந்த நேரத்தில் நாவிற்கு விருந்தளிக்கும் உயர்தரமான இனிப்பு பலகாரங்களை உருவாக்கிப் பரிமாறும் வல்லமையைப் பெறுவீர்கள்.