பொன்னாங்கண்ணிக் கீரை ரைஸ், கறிவேப்பிலை பொடி சாதம், முருங்கைப்பூ சாதம், ஆம்லா சாதம் ஆகிய 4 வகையான சாதங்கள் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - ரெண்டு
உப்பு - தேவைக்கு
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - ஒரு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவைக்கு
உதிராக வடித்த சாதம் - ரெண்டு கப்
செய்முறை
பொன்னாங்கண்ணி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும். பயத்த பருப்பை குழையாமல் உதிரியாக வேக வைக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வதங்கியதும் கீரை, பின்பு உப்பு, தேங்காய் துருவல் போட்டு வதக்கி அதில் வெந்த பருப்பும், வடித்த சாதமும் சேர்த்து கிளறவும். கடைசியில் தேங்காய் பால் சேர்த்து கிளறி கீழே இறக்கவும். சத்தான சுவையான பொன்னாங்கண்ணி சாதம் ரெடி.
இதை வாரம் இரு முறை சாப்பிட்டால் முடி உதிர்வது நிற்கும். கண் பார்வை தெளிவாகும்.
தேவையான பொருட்கள்
காய்ந்த கறிவேப்பிலை - இரண்டு கைப்பிடி
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு -கால் கப்
உளுந்தம்பருப்பு - கால் கப்
உப்பு -தேவைக்கு
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
வடித்த சாதம் - 2 கப்
செய்முறை
கறிவேப்பிலையை பச்சை வாசனை போகாமல் கழுவி நிழலில் காய வைக்கவும். மற்ற மசாலா சாமான்கள் அனைத்தையும் நன்கு வறுத்து காய்ந்த கறிவேப்பிலையுடன் சேர்த்து பொடி செய்யவும். அரைத்த பொடியுடன் உப்பு, மாங்காய் தூளும் சேர்த்து கிளறவும். இந்த பொடியுடன் சூடு படுத்திய நல்லெண்ணெய் ஊற்றி வடித்த சாதத்தில் கலந்து கிளறி இறக்கவும். சத்தான கறிவேப்பிலை பொடி சாதம் ரெடி.
தினமும் சாப்பிடுவதற்கு முன் தினமும் ஒரு உருண்டை கறிவேப்பிலை பொடி சாதம் சாப்பிட்டால் முடி உதிர்வது நின்று கரு கருவென வளரும்.
தேவையான பொருட்கள்
முருங்கைப்பூ - ரெண்டு கப்
சின்ன வெங்காயம் - 15
கடுகு - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - ரெண்டு டீஸ்பூன்
வடித்த சாதம் - இரண்டு கப்
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு.
செய்முறை
முருங்கைப் பூவை நன்கு அலசவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும் . நன்கு வதங்கியதும், மிளகுத்தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கவும். இதை வடித்த சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கவும். முருங்கைப்பூ சாதம் ரெடி.
கண்கள் குளிர்ச்சியாகும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - துருவியது 1/4 கப்
வடித்த சாதம் - 2 கப்
உளுந்து - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
செய்முறை
வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் , கடுகு , உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கிள்ளிய சிவப்பு மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் துருவிய நெல்லிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சுருங்கும் வரை வதக்கவும்..
வதங்கிய பின் அதில் வடித்த சாதம் கலந்து கிளறி இறக்கவும். சுவையான சத்தான அசத்தலான நெல்லிக்காய் சாதம் ரெடி.
இதுவும் உடலுக்கு வலுவானது. முடி வளர்ச்சிக்கும் நல்லது.