

நாம் பொதுவாக ஹோட்டலுக்குச் சென்றால் ஆர்டர் செய்வது 'பாலக் பன்னீர்' தான். ஆனால், வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் "சாக் பன்னீர்" (Saag Paneer) தான் மிகவும் பிரபலம். பாலக் பன்னீரில் பசலைக்கீரை மட்டும் இருக்கும். ஆனால், சாக் பன்னீரில் கடுகு கீரை, பசலைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை போன்ற பல கீரைகளின் கலவை இருக்கும்.
இதுதான் இதற்கு அந்தத் தனித்துவமான, சற்றே துவர்ப்பான மற்றும் ஆழமான சுவையைக் கொடுக்கிறது. குளிர் காலத்தில் உடலுக்குத் தேவையான சூட்டையும், இரும்புச்சத்தையும் அள்ளித்தரும் இந்த உணவை, நம் ஊர் பாணியில் சுலபமாக எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கீரைகள்: பசலைக்கீரை - 1 கட்டு, கடுகு கீரை அல்லது அரைக்கீரை - ½ கட்டு, வெந்தயக் கீரை - சிறிதளவு.
பன்னீர் - 200 கிராம்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
பூண்டு - 10 பற்கள்
வெங்காயம் - 2
தக்காளி - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
நெய் அல்லது வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் கீரைகளைத் தயார் செய்வதுதான் முக்கியமான வேலை. பசலைக்கீரை, கடுகு கீரை, மற்றும் வெந்தயக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். ஒரு குக்கரில் அல்லது பாத்திரத்தில் இந்த கீரைகளைப் போட்டு, அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து வேகவைக்கவும். குக்கர் என்றால் ஒரு விசில் போதும்.
பாத்திரத்தில் என்றால் கீரை சுருங்கும் வரை வேகவைத்தால் போதும். வெந்த கீரையை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். ஆனால் கவனிக்கவும், வழுவழுவென பேஸ்ட் போல அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைப்பதுதான் சாக் பன்னீரின் ஒரிஜினல் டெக்ஸ்சர்.
இப்போது ஒரு முக்கியமான ஸ்டெப். அரைத்த கீரை விழுதை மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும். இந்த நேரத்தில், 2 ஸ்பூன் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கீரையில் ஊற்றவும்.
இது கீரையிலுள்ள தண்ணீரையும், கீரையையும் பிரிந்து போகாமல் ஒன்றாகச் சேர்த்து, ஒரு சில்கியான பதத்தைக் கொடுக்கும். இதை 5 நிமிடம் கைவிடாமல் கிளறவும்.
தாளிப்பதற்கு, ஒரு கடாயில் தாராளமாக நெய் அல்லது வெண்ணெய் ஊற்றவும். சாக் பன்னீரின் ருசியே இந்த நெய்யில்தான் இருக்கிறது. நெய் சூடானதும் சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி மசிந்தவுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். மசாலா பச்சை வாசனை போனதும், நாம் தயார் செய்து வைத்துள்ள கீரை விழுதை இதில் ஊற்றவும். தேவைப்பட்டால் சிறிது சுடுதண்ணீர் சேர்க்கலாம்.
இப்போது பன்னீர் துண்டுகளைச் சேர்க்கவும். பன்னீரை வறுத்துச் சேர்ப்பதை விட, அப்படியே பச்சையாகச் சேர்த்தால் தான் கீரையின் சாறு உள்ளே இறங்கி மிருதுவாக இருக்கும். மூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக, அடுப்பை அணைக்கும் முன் மேலே ஒரு பெரிய துண்டு வெண்ணெய் மற்றும் சிறிது ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றி இறக்கவும். அவ்வளவுதான், சத்தான, சுவையான "பஞ்சாபி சாக் பன்னீர்" தயார்.