

நம் உடலில் சத்துக்கள் சேர்ந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் சத்தான உணவினை உண்கிறோம். ஆனால் சமைக்கும் முறை தவறாக இருந்தால் காய்கறிகளின் சத்துக்கள் குறைய அதிக வாய்ப்புண்டு. அந்த வகையில் காய்கறிகளின் முழு சத்துக்கள் கிடைக்க செய்ய வேண்டிய சில எளிய சமையல் மாற்றங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
காய்கறி நறுக்குதல்
காய்கறிகள் விரைவாக வேக வேண்டும் என்பதற்காக சிறிதாக நறுக்குகிறார்கள். அவ்வாறு நறுக்கும்போது வெட்டப்பட்ட பரப்பு அதிகரித்து காய்கறிகள் காற்று, தண்ணீருடன் தொடர்பை அதிகரித்து தண்ணீரில் கரையும் சில சத்துக்கள் குறிப்பாக வைட்டமின் சி தண்ணீருடன் கலந்து சமையலுக்குப் முன்பே வெளியேறுகிறது. ஆகவே சமையலுக்கு முன்பாக நடுத்தரமாக காய்கறி நறுக்குவதோடு, காய்கறிகளை நறுக்கி தண்ணீரில் ஊறவைப்பதைத் தவிர்த்தால் முழு சத்துக்களையும் பெறலாம்.
அதிக நீர் அதிக ஆபத்து
காய்கறிகளை வேகவைக்க அதிக தண்ணீர் பயன்படுத்தி கொதிக்க வைப்பது சத்துக்களை வெளியேற்றும். குறிப்பாக அத்தியாவசிய சத்துக்களான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்ற தண்ணீரில் கரையும் சத்துக்கள் காய்கறிகளை வேகவைத்து நீரை வடிகட்டும் பழக்கத்தின் மூலம் எளிதாக வெளியேற்றுகிறது.
ஆகவே காய்கறிகளை அதிக தண்ணீரில் கொதிக்க வைக்காமல் இருப்பதோடு, அப்படியே கொதிக்க வைத்தாலும் வடிகட்டும் நீரில் குழம்பு, சூப் செய்வது சத்துக்களை பாதுகாக்க உதவும்.
அதிக நேரம் ஆரோக்கியத்திற்கு கெடுதி
அதிக நேரம் காய்கறிகள் நன்றாக வெந்தால் தான் நல்லது என வேகவைப்பது சத்துக்களை இழக்க வைக்கும் பழக்கமாகும். வெப்பத்தால் பாதிக்கப்படும் சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி போன்றவை அதிகமாக சமைப்பதன் மூலம் ஊட்டச்சத்துக்களின் அளவினை குறைக்கிறது. ஆகவே சத்துக்களை பாதுகாக்க சரியான நேரம் மற்றும் காய்கறிகளின் தன்மையை கணித்து சரியான வெப்பத்தை நிர்ணயித்து சமைப்பதன் மூலம் தக்க வைக்கலாம்.
ஆவியில் வேகவைப்பது சிறந்தது
காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் தண்ணீரில் கரையாமல் இருக்க ஆவியில் வேகவைப்பது சிறந்ததாகும். ஏனெனில் நீராவி மூலமாக வேக வைக்கப்படுவதால் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் சமைக்கும் நீரில் வெளியேறுவது குறையும்.
கீரைகளை வெட்டியவுடன் சமைப்பது
கீரைகளை வெட்டி நீண்ட நேரம் வெளியில் வைத்தால் காற்று, வெளிச்சம்,வெப்பநிலை காரணமாக வைட்டமின் சி மற்றும் எளிதில் ஆவியாகும் சத்துக்கள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
ஆகவே நறுக்கியவுடன் கீரைகளை உடனடியாக சமைப்பது முழு சத்துக்களை பெற உதவும். இலை காய்கறிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
காய்கறிகள் கழுவும் முறை
காய்கறிகளின் முழு சத்துக்களைப்பெற காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பாக கழுவுவதே சிறந்தது. நறுக்கிய பின் கழுவினால் தண்ணீரில் சத்துக்கள் கரைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மீண்டும் சூடு படுத்துவது
உணவுப் பொருட்களை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் போது சத்துக்கள் குறைவதோடு சுவையும் பாதிப்படையும். ஆகவே மீதமான உணவை பாதுகாப்பாக சேமிப்பதோடு மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய முறையில் சமையல் சிறு சிறு மாற்றங்களை செய்தால் காய்கறிகளின் முழு சத்துக்களையும் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
காய்கறிகளை தவறான முறையில் நறுக்குவதாலும் வேகவைப்பதாலும் இழக்கும் வைட்டமின்களைத் தடுத்து, சரியான சமையல் மாற்றங்கள் மூலம் உணவின் முழு காய்கறி சத்துக்களையும் பெறலாம்.