கல்யாண விருந்து ஞாபகமா? பலாக்காய் கோலா உருண்டை, குஸ்கா ரெசிபி இதோ!

ஸ்டார்ட்டராகவும் சாப்பிடலாம், குஸ்கா ரைஸோடு தொட்டுக் கொண்டும் சுவைக்கலாம்; வீட்டிலேயே எளிதில் செய்யலாம்.
கோலா உருண்டை
கோலா உருண்டைGemini image
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

1. பலாக்காய் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்:

தோல் சீவி நறுக்கிய பலாக்காய் துண்டுகள் - 1 கப்

எண்ணெய் - பொரிக்கவும், வதக்கவும் தேவையான அளவு

பட்டை பவுடர் - ½ டீஸ்பூன்

கிராம்பு - 5

சீரகம் - ½ டீஸ்பூன்

பெருஞ் சீரகம் - ¾ டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 10

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1½ டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

சிவப்பு மிளகாய் - 2

தோலுரித்த சின்ன வெங்காயம் - 12

பொட்டுக் கடலை - ½ கப்

கறிவேப்பிலை - 2 இணுக்கு

கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு

துருவிய தேங்காய் பூ - ½ கப்

மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பலாக் காய் துண்டுகளை தண்ணீரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பஞ்சு போல் மிருதுவாகும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நான்கு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதில் கிராம்பு, சீரகம், பெருஞ்சீரகம், முந்திரி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கிளறவும். அதன் பின் கடாயை அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, உப்பு, பொட்டுக் கடலை மற்றும் தேங்காய் பூ சேர்த்து மசிய அரைத்துக் கொள்ளவும். பின் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதனுடன், பட்டை பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் வேக வைத்துள்ள பலாக்காய் துண்டுகளை சேர்த்து, அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் வரை அழுத்திப் பிசையவும்.

பிசைந்த கலவையை டேஸ்ட் பண்ணிப் பார்த்து, தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின் அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளை தயார் செய்யவும்.

ஒரு கடாயில், பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு சிவந்து வரும் வரை சுட்டு எடுக்கவும். இந்த பலாக்காய் கோலா உருண்டைகளை ஸ்டார்ட்டராக சாப்பிடலாம். அல்லது குஸ்கா ரைஸ்ஸுக்கு தொட்டுக் கொண்டும் உண்ணலாம்.

2. குஸ்கா ரைஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ் -1 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை சிறிய துண்டுகள் - 2

கிராம்பு - 4

ஏலக்காய் - 4

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

ஃபிரஷ் புதினா இலைகள் - ஒரு கைப்பிடி

ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி

பழுத்த தக்காளி - 2

உப்பு - தேவையான அளவு

கெட்டித் தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 10

கொதிக்க வைத்த தண்ணீர் - 2½ கப்

பிரிஞ்சி இலை -1

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

செய்முறை:

பாஸ்மதி அரிசியை தண்ணீரில் இருபது நிமிடம் ஊற வைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி 9 நாளுக்கும் 9 வகை சுண்டல்: நாவில் கரையும் கறிப் பொடி ரகசியம்!
கோலா உருண்டை

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் சமையல் எண்ணெயை ஊற்றவும். சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்க்கவும். அவை வறுபட்டதும் பச்சை மிளகாய்களை கீறிப் போடவும். பின் நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்துக் கிளறவும்.

அவை பஞ்சுபோல் வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கலந்து விடவும். பிறகு அதில் பாஸ்மதி அரிசியை சேர்த்து சிறு தீயில் மேலும் கீழுமாக 10 வினாடி கிளறி விடவும். பின் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றவும்.

கோலா உருண்டை
கோலா உருண்டைGemini image

தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். பின் குக்கரை மூடி, மீடியம் தீயில் வைத்து இரண்டு விசில் வந்ததும் தீயை அணைத்து விடவும்.

இதையும் படியுங்கள்:
உப்புமா வேண்டாம் என்பவர்களும் விரும்பும் கம்பு ரவை உப்புமா, கிச்சடி ரெசிபிகள்!
கோலா உருண்டை

ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரிப் பருப்புகளை தனித் தனியாக பொன் நிறம் வரும்படி வறுத்து எடுத்துக் கொள்ளவும். பத்து நிமிடம் கழித்து குக்கர் மூடியை திறந்து, குஸ்காவை கரண்டியால் மேலும் கீழுமாக கலந்து விடவும்.

பின் மேற்பரப்பில் லெமன் ஜூஸ் ஊற்றவும். வறுத்த வெங்காயம் மற்றும் முந்திரிகளை தூவி அலங்கரித்து, பலாக்காய் கோலா உருண்டையுடன் பரிமாறவும்.

பண்டிகை மற்றும் விருந்து நேரங்களில் மனதைக் கவரும் குஸ்கா மற்றும் கோலா உருண்டை கூட்டணியை, பலாக்காய் கொண்டு வீட்டிலேயே வித்தியாசமாகச் செய்து மகிழலாம்.