

ஹோட்டல்களில் இட்லி, தோசையுடன் பரிமாறப்படும் பச்சை சட்னியான கொத்தமல்லி - புதினா தேங்காய் சேர்த்த சட்னி சற்று நேரமானாலும் நிறம் மாறி கருத்துப் போகாமல், பசுமையான பச்சை நிறத்திலேயே ருசியாக இருப்பதைப் பார்த்திருப்போம். அதை வீட்டில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக செய்து பார்த்திருப்போம். ஆனால் ருசியெல்லாம் அபாரமாக வந்தாலும், அந்தப் பச்சை நிறம் மட்டும் மிஸ் ஆகிவிடும். அப்படி வீட்டிலும் பச்சை நிறம் மாறாமல் செய்து அசத்தலாம். அதற்கான சில எளிய சமையல் நுட்பங்கள் மற்றும் ரகசியங்கள் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
ஹோட்டல் ஸ்டைல் பச்சை சட்னி செய்முறை மற்றும் நிறம் மாறாமல் இருப்பதற்கான ரகசியங்கள் இது தான்:
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காயின் வெள்ளைப் பகுதி- 1 கப்
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
புதினா இலைகள் - அரை கைப்பிடி
வறுத்து தோல் எடுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 முதல் 4 (காரத்திற்கேற்ப)
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
ஐஸ் வாட்டர் (குளிர்ந்த நீர்) - அரைப்பதற்குத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
மிக்ஸி ஜாரில் முதலில் தேங்காய், வேர்க்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். அதன் பிறகு நன்கு கழுவிய கொத்தமல்லி, புதினா இலைகளைச் சேர்த்து, சாதாரண தண்ணீருக்குப் பதிலாக குளிர்ந்த நீர் சேர்த்து சட்னி அதிக தண்ணியாக இல்லாமல், இட்லி தோசையில் தொட்டுச் சாப்பிடும் அளவிற்குச் சற்று கெட்டியான (Creamy) பதத்தில் இருக்கும்படி அரைத்து எடுக்கவும்.
ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும். தனியா புதினா பச்சை சட்னி ஹோட்டல் சுவையில் தயார்.
நிறம் கருகாமல் பசுமையாக இருக்க 5 ஹோட்டல் ரகசியங்கள்:
1. ஐஸ் வாட்டர் பயன்பாடு:
ஐஸ் வாட்டர் பயன்படுத்துவதன் காரணம் மிக்ஸியில் அரைக்கும்போது மோட்டார் சூடாகி இலைகளின் பச்சையம் கருகிவிடும். ஐஸ் வாட்டர் ஊற்றி அரைப்பதால் சூடு தணிந்து சட்னி பளிச்சென்ற பச்சை நிறத்தில் இருக்கிறது.
2. எலுமிச்சை சாறு:
எலுமிச்சைச் சாறு சேர்ப்பது சட்னி ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கருப்பாவதைத் தடுத்து, இயற்கையான பச்சை நிறத்தைத் தக்கவைக்கிறது.
3. புதினா அளவு:
புதினா இலைகள் காற்றில் பட்டால் விரைவில் கருக்கும் தன்மை கொண்டவை. எனவே கொத்தமல்லியை விடப் புதினாவை எப்போதும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். கொத்தமல்லி நல்ல பச்சையாக இருக்க வேண்டும். பிஞ்சான தண்டுகளும் இருக்கலாம். ஆனால் இலைகள் பழுத்து இருக்கக் கூடாது.
4. தேங்காயின் அடிப்பகுதி:
தேங்காய்த் துருவலில் உள்ள பிரவுன் நிற ஓட்டுப் பகுதியைத் தவிர்த்து, வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தினால் சட்னியின் நிறம் பளிச்சென்று இருக்கும்.
5. தோல் நீக்குதல்:
வேர்க்கடலையை கருகாமல் வறுத்து தோலை சுத்தமாக நீக்கிவிட வேண்டும். அப்பொழுதுதான் சட்னி பச்சை நிறமாக இருக்கும். தோலோடு சேர்த்தால் சட்னியின் நிறம் மாறிவிடும்.
தாளிதம்:
ஒரு கரண்டியில் தாளிதப் பொருட்களை தாளித்துத் தான் சட்னியில் கொட்ட வேண்டுமே தவிர, தாளித்த சட்டியில் சட்னியை கொட்ட கூடாது. அப்படி கொட்டினால் சட்னியின் நிறம் மாறிவிடும்.
உபரியாக ஒரு தகவல்:
சிலருக்கு புதினா தனியாவின் பச்சை வாசனை பிடிக்காது. அவர்கள் விரும்பினால் ஒரு கடாயில் 2 சொட்டு எண்ணெயில் பச்சை மிளகாய், இஞ்சியை மட்டும் லேசாக வதக்கிவிட்டு, அடுப்பை அணைத்த சூட்டிலேயே புதினா, கொத்தமல்லியைப் போட்டு 10 வினாடிகள் மட்டும் புரட்டி எடுத்து ஆறவைத்து அரைக்கலாம் நிறம் மாறுவதில்லை.
இதை படிப்பதினால் பச்சை சட்னியான புதினா மல்லி சட்னி அரைப்பவர்கள் இந்த நுணுக்கங்களை தெரிந்து கொண்டு, நிறம் மாறாமல் நல்ல சுவையுடன், ஆரோக்கியம் நிறைந்த சட்னியை அரைத்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஹோட்டல் கலரில், சுவையில் சாப்பிட்ட திருப்தியை இது கொடுக்கும்.
வீட்டில் அரைக்கும் கொத்தமல்லி-புதினா சட்னி சில நிமிடங்களிலேயே கருமை நிறத்திற்கு மாறுவதைத் தடுத்து, ஹோட்டல் போல பளிச்சென்ற பச்சை நிறத்திலும் சுவையிலும் இட்லி-தோசையுடன் பரிமாறத் தேவையான தெளிவான செய்முறையும் நுணுக்கங்களும் வாசகருக்குக் கிடைக்கும்.