சமையலறையில் மிக விரைவாக அழுக்காகும் ஒரு பகுதி எதுவென்றால் அது கண்டிப்பாக சமையலறை சிங்க் தான். பாத்திரங்கள் கழுவும் போது தெறிக்கும் தண்ணீர் மற்றும் உணவுத் துணுக்குகள் அனைத்தும் சேர்ந்து சிங்கின் ஓரங்களில் எளிதில் படிந்து விடும். இவற்றைத் தேய்த்துச் சுத்தம் செய்வது பலருக்கும் ஒரு சவாலான வேலையாகும். இந்தச் சிரமத்தைக் குறைக்க தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு எளிய முறை மிகவும் பிரபலமாகி வருகிறது.
பொதுவாக உணவுப் பொட்டலங்களைக் கட்ட பயன்படும் Aluminium Foil இப்போது சமையலறை சுத்தம் செய்யும் வேலைக்கும் பயன்படுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். சிங்கின் ஓரங்களில் தண்ணீர் மற்றும் உணவுத் துணுக்குகள் அதிகம் தேங்கும் இடங்களில் இந்தத் தாளை ஒரு தற்காலிகத் தடுப்பாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் அழுக்குகள் நேரடியாகச் சிங்கின் மீது படிவது முற்றிலுமாகத் தடுக்கப்படுகிறது.
பயன்படுத்தும் சரியான முறை!
இதனைப் பயன்படுத்த முதலில் சிங்கின் ஓரங்களை மிதமான கிளீனர் கொண்டு நன்றாகச் சுத்தம் செய்து முற்றிலும் ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும். அதன் பிறகு அலுமினியம் தாளைப் பிரித்து நமக்குத் தேவையான அகலத்திற்கு நீளமாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
வெட்டிய தாள்களைச் சிங்கின் ஓரங்களில் தண்ணீர் அதிகம் தெறிக்கும் இடங்களில் சமமாகப் படியுமாறு அழுத்தமாக ஒட்டி வைக்க வேண்டும். ஆனால் தண்ணீர் வெளியேறும் துளையை மறைக்காமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அலுமினியம் தாளைத் தேவைக்கேற்ப மடித்துச் சிங்கின் மூலை முடுக்குகளில் கூட மிக எளிதாகப் பொருத்த முடியும். தினசரி வேலைகளின் போது தண்ணீர் உணவுத் துகள்கள் மற்றும் எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் இந்தத் தாளின் மீது படியும்.
தாள் மிகவும் அழுக்காகிவிட்டாலோ அல்லது கிழிந்துவிட்டாலோ அதை அப்படியே எடுத்து குப்பையில் வீசிவிட்டு மீண்டும் ஒரு புதிய தாளை மிக சுலபமாக அங்குப் பொருத்திக் கொள்ளலாம்.
இந்த முறையால் கிடைக்கும் நன்மைகள்!
இந்த எளிய முறை, தினசரி சிங்கைக் கழுவிச் சுத்தம் செய்யும் நேரத்தை வெகுவாகக் குறைக்கிறது. தண்ணீர் தெறிப்பதையும், அதனால் உண்டாகும் பாசான்கள் மற்றும் கறைகளையும் இது முழுவதுமாகத் தடுக்கிறது. குறிப்பாகக் கடினமான மூலைகளைச் சுத்தம் செய்யும் வேலை இனி உங்களுக்கு இருக்காது. அலுமினியம் ஃபாயில் மிகவும் மலிவானது என்பதால் இது வீடுகளுக்கு ஏற்ற ஒரு மிகச் சிறந்த தற்காலிகப் பாதுகாப்பாகும்.
அலுமினியம் தாளைப் பயன்படுத்தினாலும் நாம் வழக்கமாகச் செய்யும் சுத்தம் செய்யும் வேலைகளை முற்றிலும் நிறுத்திவிடக் கூடாது. தாளை நீண்ட நாட்கள் ஈரமாக அப்படியே வைத்தால் அதன் அடியில் அழுக்குகள் சேர்ந்து அதிக வாடை வரத் தொடங்கிவிடும்.
எனவே தாள் அழுக்கானதும் உடனே மாற்றுவது பாதுகாப்பானது. இந்தச் சிறிய சமையலறை குறிப்பு உங்களின் தினசரி சமையலறை வேலைகளைக் கொஞ்சம் எளிதாக்கி சிங்கை பளபளப்பாக வைத்திருக்க நிச்சயம் உதவும்.