

இயற்கையின் மகத்தான நியதிகளுள் ஒன்று சந்ததி விருத்தி. உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் தன் இனத்தைப் பெருக்கிக்கொள்வதையும், குட்டி / குஞ்சுகளைப் பேணி வளர்ப்பதையும் இயல்பான கடமையாகக் கொண்டுள்ளன. மனித சமுதாயத்தில் மட்டும் இதையும் தாண்டி ஒரு கூடுதல் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அது, ‘நமது பிள்ளைகள் நமது முதிய வயதில் நம்மைக் காப்பாற்றுவார்கள்’ என்ற நம்பிக்கை; ‘காப்பாற்ற வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு.
உலகெங்கும் மனித குலத்தில் இது காலகாலமாக, அனைத்துக் கலாச்சாரங்களிலும் ஒரு எழுதப்படாத சமூக ஒப்பந்தமாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. இளமைக்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் உழைப்பையும் பொருளாதாரத்தையும் பிள்ளை களுக்காகச் செலவிடுகிறார்கள். பிள்ளைகள் வளர்ந்து ஆளான பிறகு, பெற்றோருக்கு முதிய வயதில் ஓய்வளித்து அவர்களைப் பராமரிக்கிறார்கள்.
இதில் அன்பும் பாசமும் பிணைந்திருந்தாலும், எதார்த்தமாகப் பார்த்தால் இது ஒரு வகையான பண்டமாற்று முறைதான். இந்தப் பரஸ்பர உதவி தவறான ஒன்றல்ல; மனித சமூகத்தின் பிணைப்பிற்கு இதுவே அடிப்படையாகவும் இருந்து வந்திருக்கிறது.
எளிய நடைமுறையும் பொருளாதார மாற்றமும்
முந்தைய காலங்களில், பிள்ளைகள் நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று உயர்வடைய வேண்டும் என்ற பெற்றோரின் ஆசை மிக எளிமையானதாகவும் இயல்பானதாகவும் இருந்தது. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக இந்த நோக்கம் மெல்ல மெல்ல மாறி, முழுக்க முழுக்க பொருளாதாரம் சார்ந்ததாக மட்டுமே சுருங்கிவிட்டது.
இன்றைய நவீன சூழலில், குழந்தை வளர்ப்பு என்பது ஒரு குடும்பக் கடமை என்பதையும் தாண்டி, எதிர்காலப் பொருளாதாரத் திட்டமிடலாகப் பார்க்கப்படுகிறது. பிள்ளைகள் சிறுவயதாக இருக்கும்போதே, எதிர்காலத்தில் எந்தப் படிப்பு அதிகச் சம்பளத்தைப் பெற்றுத்தரும் என்ற கணக்கீடு தொடங்குகிறது. “நீ பெரியவனானதும் இன்ஜினியர் ஆகவேண்டும், டாக்டர் ஆகவேண்டும், சாஃப்ட்வேர் துறையில் லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும்” என்று பெற்றோர் வகுக்கும் பாதையிலேயே பிள்ளைகள் தள்ளப்படுகிறார்கள். அதற்கேற்பவே கல்வியும் ‘திணிக்கப்படுகிறது’.
நிராகரிக்கப்படுகிற விருப்பங்களும் தனித்திறன்களும்
ஒவ்வொரு பிள்ளைகளும் தனித்துவமான மனநிலையும் திறமைகளும் கொண்டவர்கள். சில பிள்ளைகளுக்கு ஓவியம், இசை, நடனம், ஒளிப்படம், திரைப்படம் போன்ற கலைத்துறைகளில் ஆர்வமும் திறனும் இருக்கலாம். சிலருக்கு விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் கனவு இருக்கலாம். இன்னும் சிலருக்கு சமூகவியல், எழுத்து அல்லது புதிய தொழில்முனைவு சார்ந்த தனித்திறன்கள் இருக்கலாம்.
ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் இந்தக் கனவு களையும் விருப்பங்களையும் சற்றும் பொருட்படுத்து வதில்லை. “இந்தக் கலையைப் படித்து என்ன செய்யப் போகிறாய்? அதில் கைநிறைய சம்பாதிக்க முடியுமா?” என்ற ஒற்றைக் கேள்வியின் மூலம் அவர்களின் ஆசைகள் நிராகரிக்கப்படுகின்றன.
பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்கு ஈடுபாடு இல்லாத உயர்கல்வித் துறைகளில் கட்டாயப்படுத்திச் சேர்க்கப்படுகிறார்கள். இது அவர்களை மனிதர்களாகப் பார்க்காமல், எதிர்காலத்தில் பணம் காய்ச்சி மரமாக மாற்ற நினைக்கும் தவறான அணுகுமுறையாகும்.
முதலீடாகப் பார்க்கப்படும் குழந்தைகள்
இன்றைய சூழலில் பெற்றோர் பலரும் தங்களுடைய பிள்ளைகளைத் தங்கள் சந்ததி என்றோ, அவர்கள் சுதந்திரமாக வாழ உரிமையுள்ள தனிநபர்கள் என்றோ கருதுவதில்லை. மாறாக, அவர்களைத் தங்கள் ‘எதிர்கால முதலீடாகவே’ (Investment) கருதுகிறார்கள்.
குழந்தைகளின் பள்ளிச் செலவு, கல்லூரிச் செலவு, பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் என அனைத்தையும் ஒரு தொழிலில் போடும் முதலீடாகக் கணக்கிடுகிறார்கள். பிற்காலத்தில் பிள்ளைகள் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும்போது, அந்த முதலீட்டிற்கு ஏற்ற ‘லாபம்’ (Return on Investment) தங்களுக்குக் கிடைக்கிறதா என்று எதிர்பார்க்கிறார்கள். பிள்ளைகளின் தனிப்பட்ட மகிழ்ச்சியைவிட, அவர்கள் ஈட்டித் தரும் வருமானமே பெற்றோரின் முதன்மை இலக்காகிவிடுகிறது.
ஆண் பிள்ளைகளும் வரதட்சணைக் கணக்கீடும்
பொதுவாக, சமூக நடைமுறையில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்த பிறகு, அவர்கள் கணவர் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக ஆகிவிடுகின்றனர். பிற்காலத்தில் தங்களைப் பராமரிப்பவர்கள் ஆண் பிள்ளைகளே என்ற காரணத்தால், இந்த முதலீட்டு மனப்பான்மை ஆண் பிள்ளைகளின் மீதுதான் அதிகளவில் சுமத்தப்படுகிறது.
ஆண் பிள்ளைகளை முதலீடாகக் கருதும் இந்த மனப்போக்கின் மற்றொரு வெளிப்பாடுதான் வரதட்சணை எதிர்பார்ப்பு. சமூக ஆர்வலர்களும் சீர்திருத்தவாதிகளும் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், வரதட்சணை முறை இன்னும் தொடரத்தான் செய்கிறது. அது இக்காலத்தில் இன்னும் வீரியமாகவே நடைமுறையில் இருக்கிறது.
“நாங்கள் என் மகனைப் படிக்க வைக்க எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் தெரியுமா? அவன் எவ்வளவு பெரிய வேலையில் / பதவியில் இருக்கிறான் தெரியுமா? எவ்வளவு சம்பாதிக்கிறான் தெரியுமா?” என்று கூறி, அதற்குத் தகுந்தாற்போல் பெண் வீட்டாரிடம் வரதட்சணையைக் கூட்டி கேட்பதற்கு இந்த முதலீட்டு மனப்பான்மையே முக்கியக் காரணம்.
படிப்பு, வேலை, வருமானம் என்ற தளத்தில் மட்டுமல்லாது, திருமணஸ் சந்தையிலும் தங்கள் பிள்ளையை ஒரு லாபகரமான பொருளாகவே இவர்கள் நடத்துகிறார்கள்.
பெற்றோர் உணர வேண்டிய கடமை
பிள்ளைகள் பெற்றோரின் சொத்தோ அல்லது பொருளாதார முதலீடோ அல்ல. அவர்கள் இந்த உலகிற்கு வந்த தனித்துவமான மனித உயிர்கள். அவர்களுக்கு இந்த வாழ்க்கையை வாழவும், தங்கள் விருப்பப்படி எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும் முழு உரிமையும் உண்டு.
குழந்தைகளைப் பேணிப் பாதுகாப்பதும், அவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதும், சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதும் மட்டுமே பெற்றோரின் கடமையாகும். அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப அவர்கள் சுயமாக வளர்வதற்கு ஆதரவாக நிற்க வேண்டும். அதை விடுத்து, பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் கருவிகளாகவோ, பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கிற பணம் காய்ச்சி மரமாகவோ பிள்ளைகளைப் பயன்படுத்தக் கூடாது.
விதைத்ததே விளையும்!
பெற்றோர்கள் தங்கள் முதிய வயதில் பிள்ளைகளின் ஆதரவை எதிர்பார்ப்பதில் தவறில்லை. அது இயல்பானது, அவசியமானது. ஆனால், பிள்ளைகளை முதலீடாகவும், பணம் காய்ச்சி மரமாகவும் பார்க்கும் மனப்பான்மை தவறானது.
பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் சுதந்திரத்தையும் கொடுத்து, நல்ல மனிதர்களாக வளர்ப்பதே உண்மையான குழந்தை வளர்ப்பு.
பிள்ளைகளைப் பிள்ளைகளாகப் பாருங்கள்; முதலீடாகப் பார்க்காதீர்கள்! நீங்கள் அப்படிப் பார்த்து, அதற்கேற்ப வளர்த்தினால், எதிர்காலத்தில் அவர்களும் உங்களால் இப்போது லாபம் உண்டா அல்லது எவ்வளவு நஷ்டம் என்று கணக்குப் பார்ப்பார்கள்.