
ஒருபோதும் நாம் ஒரு நபரின் தோற்றத்தையோ அல்லது செய்யும் வேலையைப் பார்த்தோ அல்லது அணிந்திருக்கும் உடையைப் பார்த்தோ அவருடைய மதிப்பை குறைவாக எடை போடக் கூடாது. ஒருவரைப் பற்றி தவறாக சித்தரிப்பது மிகவும் தவறான செயலாகும். நம்முடைய தவறான கற்பனையால் பாதிக்கப்பட்டவரின் மனநிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்படும். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வைக் கூறுகிறேன்.
சுமார் 55 வயதில் இருக்கும் அருண் என்கிற நபர் ஒரு பெரிய ஆபீஸில் செக்யூரிட்டியாக பணி புரிந்து வந்தார். செக்யூரிட்டி வேலையைத் தவிர அவ்வப்போது முதலாளி அழைக்கும் போதெல்லாம் அவருடைய ரூமிற்கு சென்று அவருக்குத் தேவையான வேலைகளை எல்லாம் செய்வார். அனைவருக்கும் கேட்ட போதெல்லாம் டிபன், டீ, காப்பி என எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து தருவார். ஆனால், முதலாளியின் உதவியாளர் பிரியாவிற்கும் மற்ற மூன்று பணியாளர்களுக்கும் அவரைக் கண்டால் பிடிக்காது.
ஏனென்றால், சில நேரங்களில் முதலாளியுடன் சேர்ந்து இவர்கள் எல்லோரும் டிஸ்கஷன் செய்யும்போது இவர் நடுவிலே புகுந்து, ‘இல்லை, இதை இவ்வாறு செய்ய வேண்டும்’ என்றெல்லாம் சொல்வார். அது அவர்களுக்குப் பிடிக்காது. ‘நீ ஒரு செக்யூரிட்டி, நீ பிராஜெக்ட்டிற்கு யோசனை தரியா? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு’ என்று பிரியா அடிக்கடி அவரை அவமானப்படுத்துவாள். மற்ற பணியாளர்களும் அவளோடு சேர்ந்து கொண்டு இவரைக் கடிந்து கொள்வார்கள். ஆனால், முதலாளி இவர்களிடம் ‘ஏன் அவரை அப்படிச் சொல்கிறீர்கள்? வயதில் பெரியவர். ஏதோ அவருக்குத் தோன்றியதைக் கூறினார்’ என்று கூறுவார்.
பிரியா செய்யும் அவமானத்தால் பல நேரங்களில் அருணுக்கு வருத்தமாக இருந்தது. இருந்தும் வேறு வழியில்லாமல் காலத்தின் சூழ்நிலையால் அதே வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். பிரியாவிற்கும் மற்றவர்களுக்கும் அவர் என்ன படித்திருக்கிறார், என்ன போசிஷனில் வேலை செய்கிறார் என்றெல்லாம் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு படிப்பறிவில்லாத செக்யூரிட்டி.
ஒரு நாள் முதலாளியுடன் ரூமில் எல்லோரும் உட்கார்ந்து கொண்டு மிகவும் டென்ஷனோடு பேசிக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் டிபன் மற்றும் காபியை கொண்டு வந்து அருண் டேபிளில் வைத்துக்கொண்டே அவர்கள் பேசுவதைக் கேட்டார். என்ன பிரச்னை என்றால், மறுநாளைக்கு ஜெர்மன் கான்ட்ராக்ட்டிற்கான மீட்டிங் நடக்க உள்ளது. மிகவும் முக்கியமான கான்ட்ராகட் இது.
இது மட்டும் கைக்கு வந்து விட்டால் அபார லாபம்தான். ஆனால், எப்போதும் ஜெர்மன் மற்றும் பிற அந்நிய தேசத்து மொழிகளில் அழகாக மொழிபெயர்த்து முதலாளியுடன் பேசும் மேனேஜர் திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இரண்டு நாட்களாக ஆபீஸிற்கு வரவில்லை. நாளை நடக்கவிருக்கும் ஒப்பந்தத்திற்கும் அவரால் வர இயலாது. அவரைத் தவிர வேறு யாருக்கும் ஜெர்மன் மொழி தெரியாது.
என்ன செய்வதென்று புரியாமல் அனைவரும் குழம்பிக் கொண்டிருந்தார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த அருண், முதலாளியிடம், ‘சார் எனக்கு ஜெர்மன் மொழி நன்றாகத் தெரியும். நான் உங்களோடு நாளை வரலாமா?’ என்றார். அவ்வளவுதான் முதலாளியைத் தவிர மற்ற எல்லோரும் ஜோராக சிரித்து அவரைக் கிண்டலும் கேலியும் செய்து ரூமை விட்டு அனுப்பி விட்டார்கள். அதற்குப் பிறகு மாலை 6 மணி அளவில் பிரியா, முதலாளியிடம் ‘சார், ஃபோன் போட்டு ஜெர்மன் சாரோட அசிஸ்டெண்ட்கிட்ட கான்ட்ராக்ட் ஒப்பந்தத்தை நான்கு நாள் கழித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுங்கள்’ என்று கூறி விட்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள். மற்றவர்களும் சென்று விட்டார்கள்.
முதலாளி ஃபோன் போட்டு அவர்களிடம் அவகாசம் கேட்டார், அவர்களோ, ‘நாளை வர முடியாவிட்டால் வேறு கம்பெனியோடு ஒப்பந்தத்தை செய்து முடித்து விடுவோம்’ என்று கறாராக்க் கூறி விட்டார்கள். இதனால் முதலாளி குழம்பிக்கொண்டே இருந்தார். திடீரென செக்யூரிட்டியை ஃபோன் போட்டு கூப்பிட்டார். அவரை உட்கார வைத்து ‘நிஜமாகவே உனக்கு ஜெர்மன் மொழி தெரியுமா?’ என்று கேட்டார். அவரும் தன் சொந்த கதையை முழுவதுமாக கூறினார். M.tech, MBA படித்தும் இந்த செக்யூரிட்டி வேலைக்கு ஏன் வந்தார் என விவரமாகக் கூறினார்.
ஏற்கெனவே அவர் ஒரு பெரிய கம்பெனியில் associate analyst ஆக பணி புரிந்து வந்தார். மனைவிக்கு தாமதமாக கர்ப்பம் உண்டாகி, டெலிவரி நேரத்தில் complicate ஆகி குழந்தை இறந்தே பிறந்தது. அதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் மனைவிக்கு சித்த பிரமை பிடித்து விட்டது. இவர் மனைவிக்காக தனது வேலையை இழந்தார், செலவிற்காக வீட்டை விற்றார். இரவும் பகலும் அவளையே கவனித்து கொண்டார். கிட்டத்தட்ட 15 வருட போராட்டங்களுக்குப் பிறகு அவள் இறந்து விட்டாள். அதற்கு பிறகு இவரிடம் பணமும் இல்லை, ஒரு வேளை சோறு உண்பதற்கு கூட கையில் காசு இல்லை. எந்த கம்பெனியிலும் வேலையும் கிடைக்கவில்லை. ஆகவேதான் வயிற்று பிழைப்பிற்காக இந்த வேலையை செய்வதாகக் கூறினார்.
மறுநாள் ஆபீஸில் யாரிடமும் கூறாமல் முதலாளி ரகசியமாக அருணை அழைத்துக் கொண்டு கான்ட்ராக்டை முடிக்க அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்குச் சென்றார். ‘என்ன ஒரு திறமை அருணிடம், வியப்பில் ஜெர்மன் ஆபீஸரே மூழ்கி விட்டார். ஒரு ப்ராஜெக்டிற்கு பதிலாக இன்னும் இரண்டை சேர்த்து மூன்றாகக் கொடுத்து விட்டார்கள்.
முதலாளிக்கு பரம சந்தோஷம். வேலை முடிந்த பிறகு அருணையும் கூட்டிக்கொண்டு நேராக ஆபீஸிற்கு சென்று உடனடியாக வேறு ஆளை செக்யூரிட்டி வேலைக்கு அமர்த்தி விட்டு, அருணிற்கு ஒரு உயர்ந்த பதவியைக் கொடுத்தார். மறுநாள் பிரியா உட்பட மற்ற எல்லோரும் விஷயம் அறிந்து அருணிடம் மன்னிப்பு கேட்டு அவரைப் பாராட்டினர்.
இந்த நிகழ்வின் மூலம் நமக்குத் தெளிவாக என்ன புரிகிறதென்றால் ஒரு ஆளைப் பார்த்து கண்டிப்பாக அவரின் தரத்தை பற்றியோ அல்லது அவரின் படிப்பை பற்றியோ குறைவாக எடை போடக் கூடாது. நாம் ஒருவரை பார்த்தவுடன் மனதில் அவரைப் பற்றி நமக்கு என்ன தோன்றுகிறதோ அவை எல்லாம் எப்போதும் 100 சதவிகிதம் சரியாக இருக்காது. அவர்களைப் பற்றி அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் கூறுவதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அவர்களுக்கு அதை நிரூபிக்கும் வகையில் சில சந்தர்ப்பங்களைக் கொடுக்க வேண்டும்.