

கனவில் பல் விழுவது போன்ற காட்சி வந்தால், அது மன அழுத்தம், அதிக கவலை அல்லது வாழ்க்கையில் ஏற்படும் பெரிய மாற்றங்களைக் குறிக்கிறது. இது உலக அளவில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான கனவு வகையாகும். நம் மூளையின் செயல்பாடுதான் கனவு. இரவில் தூங்கும் பொழுது நம் ஆழ்மனது தன்னை கனவுகள் மூலம் வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான கனவுகள் காலையில் விழித்தெழுந்ததும் மறந்துவிடும். சில கனவுகளோ மறக்காது.
உளவியல் மற்றும் பொதுவான விளக்கங்களின்படி, இந்தக் கனவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
1) உளவியல் காரணங்கள்:
*அதிகாரம் அல்லது தன்னம்பிக்கை இழப்பு:
பற்கள் வலிமையைக் குறிக்கின்றன. அவை விழுவது போல் கனவு கண்டால், ஏதோ ஒரு சூழ்நிலையில் நம் கட்டுப்பாடு அல்லது பலம் குறைவதாக நம் ஆழ்மனதில் நினைப்பதாக அர்த்தம். நம் வாழ்க்கையின் சில சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று நாம் நினைக்கும் பொழுது, உதாரணத்திற்கு நிதி பற்றாக்குறை, வேலை இழப்பு பயம் போன்ற காரணங்களால் இத்தகைய கனவுகள் தோன்றும்.
*மன அழுத்தம் மற்றும் கவலை:
நம் அன்றாட வாழ்க்கையில் வேலை செய்யும் இடத்திலோ அல்லது குடும்பத்திலோ எதிர்கொள்ளும் அதிகப்படியான கவலை, மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். இப்படி நிஜ வாழ்க்கையில் அதிகப்படியான டென்ஷன் அல்லது பாதுகாப்பற்ற தன்மையை உணரும்போது இத்தகைய கனவுகள் வரலாம்.
வாழ்க்கை மாற்றங்கள்:
புதிய வேலை, திருமணம், புதிய இடத்திற்கு மாறுதல், முதுமை அல்லது ஒரு முக்கியமான இழப்பு பற்றிய பயம் நம் ஆழ்மனதில் இருப்பதன் வெளிப்பாடாகக் கூட இந்தக் கனவு வரலாம். இது நம் வாழ்க்கையின் ஒரு பெரிய மாற்றக் கட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
தன்னம்பிக்கை குறைவு:
பற்கள் நம் அழகோடும், பேசும் திறனோடும், பலத்தோடும் தொடர்புடையவை. எனவே மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயம் அல்லது தன்னம்பிக்கைக் குறையும் போது இத்தகைய கனவுகள் தோன்றக்கூடும்.
2) உடல்ரீதியான காரணங்கள்:
பல் மற்றும் ஈறு பிரச்சனைகள்:
பல் வலி, ஈறுகளில் வீக்கம் அல்லது இரவில் தூங்கும் போது பற்களைக் கடிப்பது அல்லது ஈறுகளில் வலி போன்ற உடல் உபாதைகள் இருந்தாலும் மூளை இதனைப் பல் விழுவது போன்ற சிம்பலாக மாற்றிக் காட்டக்கூடும்.
வயதாகும் பயம்:
பற்கள் விழுவது முதுமையின் அறிகுறியாகப் பார்க்கப் படுவதால், வயதாகிவிடுமோ என்ற ஆழ்மன பயம் அல்லது உடல்நலக் குறைவு பற்றிய கவலைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
3) கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள்:
புத்துணர்ச்சி மற்றும் வளர்ச்சி:
சில ஆன்மீக நம்பிக்கைகளில், பழைய பற்கள் விழுந்து புதியவை முளைப்பதுபோல, பழைய பழக்கங்களை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதையும் இது குறிக்கும். அதாவது வாழ்க்கையில் ஒரு பழைய அத்தியாயம் முடிந்து, புதிய நல்லதொரு தொடக்கம் ஏற்படப் போவதைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
பாரம்பரிய நம்பிக்கைகள்:
சிலருக்கு ஏதேனும் நேர்த்திக்கடன் அல்லது வேண்டுதல்களை மறந்திருந்தால், அதை நிறைவேற்றுவதற்கு நினைவூட்டும் விதமாகவும் இந்தக் கனவு வருவதாக ஆன்மீக நம்பிக்கை உள்ளது.
மொத்தத்தில் இந்த கனவு நம் நிஜ வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஏதோவொரு மன அழுத்தத்தை நிவர்த்தி செய்து, நம்மை சுயகவனிப்பு (self-care) செய்து கொள்ளத் தூண்டும் ஒரு சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. எனவே கண்ட கனவு நிஜத்திலும் நடந்து விடுமோ என்ற பயம் தேவையில்லை.
இதைப் பற்றி கவலைப்படுவது தேவையற்றது, அர்த்தமற்றது. கனவுகளை பாசிட்டிவ் மனப்பான்மையுடன் அணுகுவதுதான் சிறப்பு. நாம் என்ன ஜடப்பொருளா கனவுகள் வராமல் இருப்பதற்கு. கனவு வருவதே நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி தான். கனவு பற்றி படிக்க தனி படிப்பே (Oneirology) இருக்கிறது தெரியுமா? கனவு நல்லதாக வந்தால் மகிழ்ச்சி கொள்ளுங்கள். பயப்படும் விதமாக வந்தால் அதைப் பற்றி சிந்திப்பதை தவிர்த்து விட்டு உற்சாகத்துடன் வேறு செயல்களில் கவனத்தைத் திருப்புங்கள்!
சிறுகுறிப்பு: Oneirology என்பது தூக்கத்தின் பொழுது மூளை எவ்வாறு இயங்குகிறது, நினைவாற்றல் உருவாக்கம் மற்றும் நரம்பியல் செயல்பாடுகள் கனவுகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை இது ஆராய்கிறது.
இதையும் படியுங்கள்:
தினமும் வீட்டை துடைப்பவரா நீங்கள்? இந்த 9 இடங்களை மறந்தால் பெரிய ஆபத்து!
உங்க கனவுல கறுப்பு பாம்பு வந்துருக்கா... அப்போ இந்த ஆபத்து வரப்போகுதுனு அர்த்தம்!