குப்பையில் வீசும் உணவை அமுதமாக மாற்றும் 16 சமையலறை ரகசியங்கள்!

பணத்தை மிச்சப்படுத்தி விவசாயத்திற்கு மதிப்பளிக்கும் அட்டகாசமான வழிகாட்டி.
சமையலறை குறிப்புகள்
சமையலறை குறிப்புகள்Gemini image
Updated on

வீட்டிலும் எவ்வளவுதான் அளவு பார்த்து சமைத்தாலும் உணவு மீதமாவதை தடுக்க முடிவதில்லை. அந்த வகையில் மீதமாகவும் புளித்த மோரையும், தேங்கிய சாதத்தையும் மாற்று வழியில் பயன்படுத்தும் எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

புளித்த மோரை வீணாக்காமல் பயன்படுத்தும் 8 வழிகள் 

1. புளித்த மோரில் பூசணிக்காய், வெண்டைக்காய் சேர்த்து மோர் குழம்பு வைத்தால் அதன் சுவை அலாதியாக இருக்கும்.

2. மழைக்காலத்திலும், இட்லி மாவு அரைத்த 2 மணி நேரத்திலும் மாவு புளிக்காத நிலையில் புளித்த மோரை சேர்த்து இட்லி, தோசை வார்த்தால் மாவு புளித்து இட்லி மென்மையாகவும் தோசை சுவையாகவும் வரும்.

3. ரவா இட்லிக்கும், ரவா தோசைக்கும் மாவு தயாரிக்கும் போது புளித்த மோரை தண்ணீருக்கு பதிலாக சேர்த்து சமைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

4. மீதமாகும் புளித்த மோரை மைதா போண்டா அல்லது மங்களூர் போண்டா செய்ய மாவு பிசையும் போது சேர்த்து போண்டா செய்தால் சுவையாக இருப்பதோடு உப்பலாகவும் இருக்கும். அதேபோல் அடை மாவுடன் புளித்த மோரை சேர்த்தால் ருசி அலாதியாக இருக்கும்.

5. புளித்த மோர் சிறந்த கண்டிஷனராக செயல்படும் என்பதால் பொடுகு தொல்லை இருப்பவர்கள் தலையில் 20 நிமிடங்கள் புளித்த மோரை தடவி ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கி முடி மிருதுவாக இருக்கும்.

6. முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி சருமம் பளபளப்பாக இருக்க சிறிதளவு கடலை மாவுடன் புளித்த மோர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

7. செடிகளில் தாக்கும் பூச்சிகளை அழிக்க புளித்த மோருடன் சம அளவு தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

8. புளித்த மோரை மல்லிகை ரோஜா செடியின் வேரில் ஊற்றினால் அதிக பூக்கள் பூக்கும். 

சமையலறை குறிப்புகள்
சமையலறை குறிப்புகள்Gemini image

தேங்கிய சாதம் வீணாக்காமல் பயன்படுத்தும் 8 வழிகள் 

1. தேங்கிய சாதத்தை மிக்ஸியில் லேசாக அரைத்து அரிசி மாவு அல்லது கடலை மாவு சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான சாத வடை தயாராகிவிடும்.

2. தேங்கிய சாதத்தை நன்கு பிசைந்து வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட் தனி மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பிசைந்து தோசை கல்லில் தட்டையாக தட்டி எடுத்தால் கட்லெட் தயார்.

இதையும் படியுங்கள்:
ஒரு வருடம் கெடாத பாட்டி காலத்து நெல்லிக்காய் ஊறுகாய்: சீக்ரெட் ரெசிபி!
சமையலறை குறிப்புகள்

3. தேங்கிய சாதத்தில் இருந்து சாத வடகம் தயாரிக்க மீதமான சாதத்தில் தண்ணீர் சீரகம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வெயிலில் பிழிந்து காய வைக்க வேண்டும்.

4. சம அளவு ரவை அல்லது பச்சரிசி மாவு, தயிர் மீதமுள்ள சாதம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து தோசை அல்லது ஊத்தப்பம் செய்யலாம்.

5. இரவில் மீதமான சாதத்தை தண்ணீர் ஊற்றி காலையில் மோர், உப்பு, சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து ஊறுகாய் தொட்டு நீராகாரமாக குடிக்கலாம். உடல் சூட்டை தணிக்கும் இந்த நீராகாரம் சிறந்த புரோபயாடிக் (Probiotic) உணவாகும். 

6. மீதமான சாதத்தில் ஈரப்பதம் குறைவாகவும் உதிரி உதிரியாகவும் இருக்கும் என்பதால் அதனுடன் கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், சோயா சாஸ், மிளகுத்தூள் சேர்த்து பிரைடு ரைஸ் விரைவாக தயாரிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
10 நிமிடத்தில் சமையல் முடிக்கும் மேஜிக் இன்ஸ்டன்ட் மசாலா விழுதும் பொடியும்!
சமையலறை குறிப்புகள்

7. உடலுக்கு ஆரோக்கியம் வழங்கி சளியை குணமாக்க நெய் அல்லது நல்லெண்ணெயில் பூண்டுப்பற்கள், மிளகுத்தூள் வதக்கி தேங்கிய சாதத்தை சேர்த்தால் மிளகு சாதம் தயாராகிவிடும்.

8. மிக்ஸியில் தேங்கிய சாதத்தை அரைத்து தாளித்த கடுகு, உளுந்து தேங்காய் துருவல் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுத்தால் சாத கொழுக்கட்டை தயாராகிவிடும்.

 வீட்டில் மீதமாகும் உணவுப் பொருட்களை மாற்று வழியை பயன்படுத்தி சாப்பிடுவது விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை ஆகும்.

உணவை வீணாக்காமல் சமையலறை குறிப்புகள் மறுசுழற்சி செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சேமிப்பதுடன், விவசாயிகளின் உழைப்பிற்கு மதிப்பளித்து ஆரோக்கியமான வாழ்வியலை உருவாக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com