பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் விருப்பங்கள் - தேவையா? இது நன்மை பயக்குமா?

தங்கள் பிள்ளை எங்கு படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? என்ன ஆக வேண்டும்? என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்களுக்குக் குழந்தை பிறந்த நாளிலிருந்தேத் திட்டமிடத் தொடங்கி விடுகின்றனர்.
children's education!
children's education!
Published on

தாங்கள் பார்க்கும் பணியைத் தங்களது பிள்ளையும் பார்க்கும் நிலை வந்து விடக்கூடாது, தங்கள் வாழ்க்கையை விடத் தங்கள் பிள்ளையின் வாழ்க்கை வளமானதாக அமைய வேண்டும் என்கிற எண்ணமும், அதற்காகத் தங்கள் பிள்ளையைப் பெரிய அளவில் படிக்க வைத்து, அதிக வருமானம் கிடைக்கும் பணிக்கு அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுவிட வேண்டும் என்கிற ஆசையுமே பெரும்பான்மையான பெற்றோர்களிடம் இருக்கிறது.

தங்கள் பிள்ளை எங்கு படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? என்ன ஆக வேண்டும்? என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்களுக்குக் குழந்தை பிறந்த நாளிலிருந்தேத் திட்டமிடத் தொடங்கி விடுகின்றனர். இந்தத் திட்டமிடலில், தங்களது குழந்தைக்கு ஆங்கிலக் கல்வி அளிப்பது முதல் அரசின் உயர் பதவியைப் பெறுவது, அயல் நாடுகளுக்கு அனுப்பி அதிகப் பணம் சேர்ப்பது என்று எத்தனையோ எதிர்பார்ப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக, ஆரம்பக் கல்வி முதலே ஆட்சியராகி விட வேண்டும், மருத்துவராகி விட வேண்டும், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அளவு கடந்த ஆசைகளைப் பிள்ளையின் மனங்களில் விதைத்து, அதிகப் பணம் சேர்ப்பவர்களே வாழ்க்கையில் வெற்றியடைபவர்கள் என்கிற எண்ணத்தையும் அவர்களுக்குள் ஏற்படுத்தி, அவர்களைப் பணம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் வலம் வரச் செய்து விடுகின்றனர்.

தங்கள் பிள்ளைகள் பள்ளியில் படிக்கத் தொடங்கிய உடனே, அவர்களின் சிறு வயது விருப்பங்கள், விளையாட்டுகளையெல்லாம் விரட்டியடித்துப் பாடப்புத்தகத்திலிருக்கும் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்வதற்கான பயிற்சிகளை மட்டுமே வீடுகளில் செய்ய வேண்டும் என்கிற வழக்கத்தை அவர்களுக்குள் திணித்து விடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பிடிவாதமாக இருக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா?
children's education!

பிள்ளைகளும் தங்களின் சிறு வயது வேடிக்கை, விளையாட்டுகளில் கிடைக்கும் மகிழ்ச்சிகளை எல்லாம் மறந்து, பாடப்புத்தகங்களில் மூழ்கிப் போய் விடுகின்றனர்.

பெற்றோர்களின் படிப்புத் திணிப்புகள் பிள்ளையின் தொடக்கக் கல்வியில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லும் நிலையில் அதன் வேகம் மேலும் அதிகரிக்கத் தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான், தங்கள் பிள்ளைகளுக்கு +1 வகுப்பில் தாங்கள் விரும்பும் பாடம் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் பத்தாம் வகுப்பில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் கொடுக்கும் நெருக்கடி மிகவும் கடுமையானதாக இருக்கிறது. சில வேளைகளில் இந்த நெருக்கடி அபாயகரமான விளைவுகளைக் கூட ஏற்படுத்தி விடுகிறது.

படிப்பிற்கான இந்த நெருக்கடிகள் பத்தாம் வகுப்புடன் முடிவடைந்து விடுவதில்லை, அடுத்தும் தொடரத்தான் செய்கின்றன. பெற்றோர் விரும்பும் பள்ளியில், விரும்பும் பாடத்தில் +1 வகுப்பில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைத்தாலும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் தாங்கள் விரும்பும் கல்வியைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்க முடியும் என்கிற எண்ணத்துடன் அவர்களுக்குக் குறிப்பிட்ட சில பாடங்களில் தினமும் தனிப்பயிற்சிகள், விடுமுறை நாட்களில் சிறப்புப் பயிற்சிகள் என்று ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளில் ‘அதிக மதிப்பெண்கள்’ என்கிற ஒரு நோக்கம் மட்டுமே இருக்கிறது. இதனால் +2 படிக்கும் மாணவர்களுக்குப் பெற்றோர்களால் கொடுக்கப்படும் மன அழுத்தம் மிக அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தங்கள் பிள்ளைகளின் படிப்பு சிறக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கும் பல்வேறு மன அழுத்தங்களும், இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன.

தங்கள் பிள்ளையின் தொடக்கக் கல்வி சிறப்பாக அமைய வேண்டுமென்பதற்காக, இலவசக் கல்வியளிக்கும் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, அதிகப் பணம் செலுத்தித் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வி தரும் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்குத் தேவையான பணத்திற்காகத் தங்கள் வருமானத்தில், தங்கள் தேவைகளையெல்லாம் சுருக்கிக் கொண்டு, அதில் மீதமாகும் பணத்தினைச் சேர்த்து வைத்துச் செலவழிக்கும் எத்தனையோ பெற்றோர்கள் இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
பரீட்சை நேரம் வந்தாச்சு! பெற்றோர் கடமை என்ன?
children's education!

தாங்கள் படிக்காவிட்டாலும், தங்கள் பிள்ளைகளின் படிப்பு எவ்வகையிலும் குறைந்து போய்விடக் கூடாது என்பதற்காகத் தங்கள் பிள்ளைகளைப் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், மற்ற மாணவர்களுக்குச் சமமாக வந்து விட வேண்டும் என்பதற்காகத் தனியாக, அதிகப் பணத்தைச் செலவழித்துத் தனிப்பயிற்சிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் இருக்கின்றனர். தங்கள் பிள்ளையின் படிப்பிற்காக எத்தனையோ கடன்களை வாங்கிச் செலவு செய்த பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

பொதுவாகப் பிள்ளைகளின் படிப்புகளுக்காகப் பெற்றோர்களின் விருப்பங்களும், அதற்காக அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளும் மிக அதிகமாத்தான் இருக்கின்றன. வருங்காலத்தில் தங்கள் பிள்ளை வளமாய் வாழ வேண்டுமென்பதற்காகத் தங்களின் சுகபோகங்களை எல்லாம் இழந்து நிற்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மாணவர்கள் தங்கள் படிப்பு நிலையில் முழுமையாக வெற்றிபெற படிநிலை வழிகள்!
children's education!

பெரும்பான்மையான பிள்ளைகள் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்றபடி, தங்கள் படிப்பு முடிந்து, நல்லதொரு பணியைப் பெற்றுத் திருமணம் முடித்துப் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய பின்பு, தங்களுடைய மகிழ்ச்சியான வாழ்விற்காகப் பல தியாகங்களைச் செய்த பெற்றோர்களைக் கண்டு கொள்வதே இல்லை என்பதும் கவலைக்குரியதாகவே இருக்கிறது.

தங்களின் பிள்ளை வளமாக இருந்தால், வயதான காலத்தில் தங்களின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், சிறப்பானதாகவும் அமையும் என்கிற எண்ணத்தில் பெற்றோர்கள் செய்த செயல்பாடுகள் அனைத்தும் இன்று வீணாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றன. பெற்றோர்களின் விருப்பப்படி வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பல பிள்ளைகள், தங்கள் பெற்றோர்களுக்குத் தேவையான பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்களே தவிர, அவர்களைத் தங்களுடன் சேர்த்து வைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. இதனால் பல பெற்றோர்களின் நிலை தனிமையில் தவிப்பதாகவே போய்விடுகிறது.

பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று நினைத்துப் பெற்றோர்கள் உருவாக்கிய பிள்ளைகளால் எந்தவொரு மகிழ்ச்சியையும் பெற முடியாமல் தவிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கின்ற போதிலும், தங்கள் பிள்ளையின் வருங்காலம் வளமானதாக அமைய வேண்டும் என்கிற எண்ணத்தில் பெற்றோர்களின் விருப்பங்களாகப் பிள்ளைகளின் படிப்புகளும், அதற்கான முன்னேற்பாடுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒருவருக்கொருவரின் புரிதலில் எங்கோ ஒரு இடைவெளி இருப்பது உண்மை.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் படிப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் 4 தவறுகள்!
children's education!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com