

தனி வீடானாலும் சரி, அபார்ட்மெண்ட் என்றாலும் சரி, முன் வாசல் கதவில் கலர், கலராக பிளக்ஸ் போர்டிலும், தகர போர்டிலும் "தயவுசெய்து கதவை மூடவும்னு, Please close the door" என்று எழுதி, வெளிப்பக்கமும், உள் பக்கமும், நுழையும்போதே விண்ணப்பம் வைத்திருப்பதை பல இடங்களில் பார்த்திருப்போம்.
பரபரப்பான அவசர உலகில், தினசரி கதவை திறந்து உள்ளே வரும் வாய்ப்பு, அநேகமாக ஆன்லைனில் ஆர்டர் பண்ணிய பொருட்களை டெலிவரி செய்யும் பாய்ஸுக்குத்தான். அவர்கள் அபார்மெண்ட்டின் கேட்டிற்கு வெளியே நின்று, மொபைலில் அழைத்தாலும், கஸ்டமர், எத்தனாவது மாடி, என்றும், வீட்டு நம்பரையும் சொல்லி, தங்கள் வீட்டு வாசலுக்கே வரச் சொல்லுவார்கள். பொறுப்புடன் நேரில் சென்று, பொருளைக் கொடுத்த பாய்ஸ் வெளியேறும்போது மட்டும், போர்டை உள்ளேயும் வெளியேயும் பார்த்தாலும் பொறுப்பின்றி கதவை மூடாமல் சென்று விடுவர்.
அடுத்த இடத்தில் இருப்பவர்கள் கூரியர் பாய்ஸ், கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள், போஸ்ட் மேன். பொருட்களை பெற்றுக் கொண்டதும், போகும்போது கதவை மூடிவிட்டுப் போங்கன்னு சொன்னால், பலனளிக்க வாய்ப்பு உண்டு. சரின்னு சொல்லிவிட்டு கதவை மூடாமல் செல்லும் மேதாவிகளும் உண்டு.
நிறைய இல்லங்களில் பணிப்பெண்களும் கதவை மூடாமல் சென்று, குடியிருப்போரின் டென்ஷனை கூட்டி விடுவதுண்டு. யாரோ ஒருவர் கேட்டை அடைக்காமல் செல்ல, பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதற்கேற்ப தப்பு பண்ணாத ஆத்மாக்களையும் சந்தேக லிஸ்ட்டில் சேர்க்கும், பல சுவாரஸ்யமான விஷயங்களும் நடக்கும்.
இப்படித்தான், மாடியிலுள்ள இல்லத்தரசி, கீழே தரையில் வெயில்படும் இடத்தில் கோதுமையை காய வைத்துள்ளார்கள். சில மணி நேரங்கழித்து, கீழே வந்தால், கோதுமையைக் காணோம். டென்ஷனான மேடம், பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார்கள். எல்லோரும் நானில்லை என வாக்குமூலம் தர, ஒரு சகோதரர், "அப்போ யார் வீட்டு பணிப்பெண்ணோ எடுத்துச் சென்றிருக்கலாம்" எனக் கூறி துப்பறியும் சங்கர்லால் அவதாரமெடுத்தார். அவர் கூறியதும், அபார்ட்மெண்ட் அம்மணிகளின் கண்களில், பயம் தெறித்தது. குற்றவாளியாகவே இல்லாவிட்டாலும், சந்தேகப்படுவது தெரிந்தால் பணிப்பெண் வேலையை விட்டு நின்று விடுவாளே. மற்றொரு பணிப்பெண் கிடைக்கும் வரை சமாளிக்க வேண்டுமே இந்த எண்ணம்தான் வெவ்வேறு டிசைன்களில் அவர்கள் மனசுக்குள்.
இதற்கிடையே, ஒரு புத்திசாலி பெரியவர், " சிசிடிவி கேமராவில் செக் பண்ணுங்க" ஐடியா கொடுக்கவும், அடுத்த நிமிடம் எல்லோரும் F5 வீட்டு ஹாலில் ஆஜர். காலை பத்து மணிக்கு காயவைத்ததாக ஒரு கிலோ கோதுமையை பறி கொடுத்த அம்மணி சொல்ல, பத்து மணியிலிருந்து வீடியோ நோக்கப்பட்டது.
பன்னிரண்டு மணி வரை கோதுமை இருந்த இடத்திலேயே இருந்தது. இடையே, பலர் வெளியே போகவும், உள்ளே வருவதுமாக இருந்தார்கள் சிஸ்டத்தின் ஸ்கிரீனில். பார்ப்பதில் டயர்டான ஒருவர் "மேடம் டீ கிடைக்குமா?" அப்ளிகேஷன் போட, F5 இல்லத்தரசி வேறு வழியின்றி மாலை உபயோகிக்க வச்சிருந்த பாலில் டீ போட ஆரம்பித்தார். சுகர் வேண்டாமென சிலரும், HaIf சுகர் எனப் பலரும் விண்ணப்பித்தார்கள். மேடமும், விதியேன்னு டீ சப்ளை செய்தார்கள். பருகிக் கொண்டிருக்கும்போது, திருடியது யார்? காரணம் யார்? எனத் தெரிந்துவிட்டது என ஒரு அம்மணி துள்ளலுடன் ஸ்கிரினை நோக்கி விரலை நீட்ட, பக்கத்திலிருந்தவரின் டீ கப்பில் கை பட்டு அந்த கப் டீ கொட்டி, தரை+வேஷ்டியில் டீ அபிஷேகம்.
இறுதியாக, கோதுமையை கபளீகரம் செய்தது யார் எனக் கண்டுபிடிச்சாச்சு. வேறு யாருமல்ல கோமாதாதான். உள்ளே வரக் காரணமானவர் யார்ன்னு தெரியணும், ரீ வைண்ட் பண்ணுங்கன்னு சொல்லி, செகரட்டரி தன் தலையில், கோதுமையை... ஸாரி...மண்ணைப் போட்டுக்கொண்டார்.
பின்னே, செகரட்டரி வீட்டுப் பணிப்பெண் வேலை முடித்துச் செல்லும்போது போனில் பேசிக்கொண்டே கேட்டைத் திறந்தவள் மூடாமலே சென்றுவிட்டாள். அந்த சமயம், வீதியில் உலா வந்து கொண்டிருந்த பசுமாடு ஸ்வாகா செய்துவிட்டது. விளைவு கோதுமையை பறிகொடுத்த அம்மணியும், திருமதி செகரட்டரியும் ஆறு மாதங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார்கள்.
சரி... இந்தக் கதையெல்லாம் இப்போ தேவையா, என்னதான் சொல்ல வர்றீங்க? உங்க மனசு புரியுது. இதோ சொல்றேன். பொறுப்பு என்பது எல்லா சூழலிலும் எல்லோருக்கும் இருக்கணும். உறவினர் வீடோ, நண்பர்கள் இல்லமோ, எங்கு சென்றாலும் கதவை மூடி விட்டுச் செல்லவேண்டும். திறந்துதானே இருந்தது. நான் ஏன் மூடவேண்டும் என்ற அசட்டை வேண்டாமே.
போர்டு இல்லாவிட்டாலும் கதவை மூடிவிட்டு செல்பவர்கள் உயர்ந்தோர். நான் வரும்போதே திறந்துதானே இருந்தது. யாரோ திறந்த கதவை நான் ஏன் மூடவேண்டும் என்ற ஈகோவை விலக்குங்கள். கதவை திறந்து விடுவதும், மூடுவதும் செக்யூரிட்டியின் பணி என்பவர்களும் உண்டு. அவரும் சில தருணங்கள் வேறு வேலையாகப் போயிருக்கலாம் அல்லவா? யார் வீட்டிற்கு சென்றாலும் டென்ஷன் குறைக்க திறக்கும் கதவை மறக்காமல் மூடவும்.
பின் குறிப்பு: எதிர் வீட்டிற்கு விருந்தினர் வந்தபோது, கடைசியாக நுழைந்த பாட்டியிடம், ஆறு வயது பேத்தி, "அப்பத்தா கேட்டை மூடிட்டு வா" சொன்னதைக் கேட்டதும், எழுதத் தோணியது.