

மழை பெய்யும் நாட்களில் குழந்தைகளால் வெளியே சென்று விளையாட முடியாது. வீட்டில் அமர்ந்து குடும்பத்தோடு என்னென்ன உள்ளரங்க விளையாட்டுகள் விளையாடி மகிழலாம் என்பதை பார்க்கலாம்.
மழை பெய்யும் நாட்களில் பள்ளிக்கு விடுமுறை கிடைத்தால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்! ஆனால், வெளியே சென்று விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது அவர்களுக்கு சலிப்பு ஏற்படலாம். அலைபேசியிலும் தொலைக்காட்சியிலும் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, வீட்டிலேயே விளையாடக்கூடிய எளிய விளையாட்டுகள் அவர்களை மகிழ்விப்பதுடன் சிந்திக்கும் திறனையும் வளர்க்கும். அப்படிப்பட்ட எட்டு விளையாட்டுகளைப் பார்க்கலாம்
காகிதப் படகு போட்டி!
மழைக்காலம் என்றாலே காகிதப் படகு நினைவுக்கு வரும். வண்ணக் காகிதங்களில் படகுகளைச் செய்து, வீட்டில் ஒரு பெரிய தட்டில் தண்ணீர் ஊற்றி மிதக்கவிடலாம். யாருடைய படகு அழகாக இருக்கிறது, எது நீண்ட நேரம் மிதக்கிறது என்று போட்டி நடத்தலாம். இது குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும்.
புதையல் வேட்டை!
ஒரு சிறிய பொம்மையையோ பந்தையோ வீட்டில் பாதுகாப்பான ஓரிடத்தில் மறைத்து வைக்கவும். அதைக் கண்டுபிடிக்கக் குறிப்புகளைக் கொடுக்கலாம். ஒவ்வொரு குறிப்பும் அடுத்த இடத்துக்கு வழிகாட்டும் வகையில் இருக்கட்டும். குழந்தைகளின் கவனிப்புத் திறனையும் சிந்திக்கும் திறனையும் வளர்க்கும் விளையாட்டு இது.
நினைவாற்றல் விளையாட்டு!
ஒரு தட்டில் பத்து பொருட்களை வைக்கவும். அவற்றைக் குழந்தைகள் ஒரு நிமிடம் கவனிக்கட்டும். பின்னர் தட்டை மூடிவிட்டு, பார்த்த பொருட்களின் பெயர்களைச் சொல்லச் செய்யலாம். வயதுக்கு ஏற்ப பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். நினைவாற்றலைச் சோதிக்க இது ஒரு சிறந்த விளையாட்டு.
கதை சொல்லும் விளையாட்டு!
ஒருவர் ஒரு வாக்கியத்தில் கதையைத் தொடங்க வேண்டும். அடுத்தவர் அதனுடன் மற்றொரு வாக்கியத்தைச் சேர்க்கவேண்டும். இப்படியே ஒவ்வொருவரும் புதிய திருப்பங்களைச் சேர்த்துக் கதையைத் தொடரலாம். கடைசியில் உருவாகும் கதை அனைவரையும் சிரிக்க வைப்பதுடன் மொழித் திறனையும் கற்பனை வளத்தையும் மேம்படுத்தும்.
பலூன் விளையாட்டு!
ஒரு பலூனை ஊதி, அது தரையில் விழாமல் ஒருவர் மற்றவருக்குத் தட்டிக் கொடுக்க வேண்டும். கைகளால் மட்டுமே தட்டவேண்டும் என்றோ, குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் தரையில் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றோ விதிகளை அமைக்கலாம். உடல் இயக்கத்துடன் மகிழ்ச்சியையும் தரும். பெரியவர்கள் கண்காணிப்பது அவசியம்.
ஓவியப் போட்டி!
காகிதமும் வண்ணப் பென்சில்களும் இருந்தால் போதும். மழை, வானவில், குடை, பறவைகள் என ஒரு தலைப்பைக் கொடுத்து ஓவியம் வரையச் சொல்லலாம். அழகான ஓவியத்துக்கு மட்டுமல்லாமல், வித்தியாசமான கற்பனைக்கும் பரிசு வழங்கலாம். வெற்றி, தோல்வியை விட முயற்சியைப் பாராட்டுவது முக்கியம்.
சொல் விளையாட்டு!
ஒருவர் ஒரு சொல்லைக் கூறவேண்டும். அடுத்தவர் அந்தச் சொல்லின் கடைசி எழுத்தில் தொடங்கும் சொல்லைக் கூறவேண்டும். உதாரணமாக, மழை, யானை, இலை என்று தொடரலாம். தமிழ்ச் சொற்களைப் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் சொல்வளத்தை அதிகரிக்கவும் இந்த விளையாட்டு உதவும்.
இசை நாற்காலி!
குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப நாற்காலிகளை வட்டமாக வைக்கவும். இசை ஒலிக்கும்போது அவற்றைச் சுற்றி வரவேண்டும். இசை நின்றதும் அனைவரும் அமர வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் ஒரு நாற்காலியைக் குறைக்கலாம். ஓடாமல், தள்ளாமல் விளையாட வேண்டும் என்பதையும் வலியுறுத்தவும்.
வீட்டு விளையாட்டுகளின் வியக்கத்தக்க பலன்கள்!
வீட்டில் விளையாடுவது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடும்பத்தினருடன் இணைந்து விளையாடும் போது விட்டுக்கொடுத்தல், பொறுமை, ஒற்றுமை, தோல்வியை ஏற்றுககொள்ளும் மனப்பான்மை போன்ற நற்பண்புகள் இயல்பாகவே வளர்கின்றன.
குறிப்பாக பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவது அவர்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்துகிறது. மேலும் கதை சொல்லுதல், புதிர்கள் விடுவித்தல் போன்ற விளையாட்டுகள் படைப்பாற்றைலையும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனையும் வளர்க்கின்றன.
ஒவ்வொரு விளையாட்டிலும் வெற்றி பெறுவதை விட மகிழ்ச்சியுடன் பங்கேற்பதே முக்கியம் என்பதை பெற்றோர் உணர்த்தவேண்டும் . மழை விடுமுறையில் குழந்தைகளுக்கென தனியாக நேரம் ஒதுக்கி விளையாடினால் அந்த இனிய தருணங்கள் அவர்களின் மனதில் வாழ்நாள் முழுவதும் அழியாத நினைவுகளாக நிலைத்திருக்கும்!
மழை விடுமுறை என்பது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நாளல்ல; குடும்பத்தினர் ஒன்றாக மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் அருமையான வாய்ப்பு!
பெற்றோரும் குழந்தைகளுடன் இணைந்து விளையாடினால் அவர்களுக்கிடையேயான அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பரிசுகள், விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் எதுவும் தேவையில்லை. கொஞ்சம் கற்பனையும் நிறைய அன்பும் இருந்தால் போதும்.
இந்த எளிய விளையாட்டுகள் குழந்தைகளின் விடுமுறையை இனிய நினைவுகளால் நிரப்புவதுடன், அலைபேசியைச் சார்ந்திருக்கும் பழக்கத்தையும் குறைக்க உதவும். மழைத்துளிகள் ஜன்னலில் இசை பாடட்டும்; வீட்டுக்குள் குழந்தைகளின் சிரிப்பொலி மகிழ்ச்சியைப் பொழியட்டும்!