வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது, பலருக்கும் வரும் மிகப்பெரிய குழப்பம் எந்த சமையல் எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான். கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளில் 'ரிஃபைன்ட்', 'பில்டர்', மற்றும் 'கோல்ட் பிரஸ்டு' எனப் பல பெயர்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
இவை எண்ணெயின் சுவையைக் குறிக்கும் வார்த்தைகள் அல்ல, அந்த எண்ணெய் எந்த முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் தொழில்நுட்ப வார்த்தைகள். ஒவ்வொரு தயாரிப்பு முறையும் எண்ணெயின் சத்துக்கள், அதன் இயற்கையான சுவை மற்றும் சமைக்கும் தன்மையில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான உணவு முறைக்கு இந்த மூன்று வகைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வது நல்லது.
கோல்ட் பிரஸ்டு!
இது மிகவும் பாரம்பரியமான, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான எண்ணெய். விதைகள், கொட்டைகளை அதிக வெப்பப்படுத்தாமல், மரச்செக்கு அல்லது நவீன இயந்திரங்கள் மூலம் மிகவும் குறைந்த வெப்பநிலையில் அழுத்தி இது எடுக்கப்படுகிறது. இதில் எந்தவிதமான வெப்பமும் ரசாயனமும் பயன்படுத்தப்படாததால், விதைகளில் உள்ள இயற்கையான வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் அழியாமல் அப்படியே பாதுகாக்கப்படும்.
இந்த எண்ணெயின் இயற்கையான வாசனை, அடர்த்தி மற்றும் சுவை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். இந்த வகை எண்ணெயைக் குறைந்த அல்லது மிதமான தீயில் சமைப்பதற்கும், தாளிப்பதற்கும் மற்றும் பச்சையாக சாலட் போன்ற உணவுகளில் சேர்ப்பதற்கும் பயன்படுத்துவது மிகச் சிறந்தது.
பில்டர் எண்ணெய்!
விதைகளிலிருந்து இயந்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்த பிறகு, அதில் தங்கியுள்ள கசடுகளை மட்டும் நீக்கித் தயாரிக்கப்படுவது பில்டர் முறையாகும். விதைகளை அரைத்து எண்ணெய் எடுத்த பின், அதைப் பல அடுக்கு வடிகட்டிகள் வழியாகச் செலுத்திச் சுத்தப்படுத்துவார்கள். இதில் எவ்வித ரசாயனங்களும் சேர்க்கப்படுவதில்லை.
இதனால் விதைகளின் இயற்கையான சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இதில் ஓரளவு அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. அந்தந்த விதைகளுக்கே உரிய இயற்கையான மணமும் சுவையும் இதில் நிச்சயம் இருக்கும். அன்றாட குழம்பு வகைகள் சமைப்பதற்கும், வறுத்தல் மற்றும் பொரிப்பதற்கும் இந்த பில்டர் வகை எண்ணெயைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான தேர்வாகும்.
ரிஃபைன்ட் எண்ணெய்!
இன்று கடைகளில் மிக அதிக அளவில் விற்பனையாவது இந்த வகை எண்ணெய்தான். இது நவீன தொழிற்சாலைகளில் பல கட்ட சுத்திகரிப்பு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. அதிக வெப்பநிலை மற்றும் Hexane போன்ற சில ரசாயனங்களைப் பயன்படுத்தி, விதைகளிலிருந்து அதிகபட்ச எண்ணெய் பிரித்தெடுக்கப்படும். பின்னர் எண்ணெயின் நிறம், அதன் மணம் மற்றும் பிசுபிசுப்புத் தன்மை ஆகியவை முழுமையாக நீக்கப்பட்டுவிடும்.
அதிக வெப்பம் மற்றும் ரசாயன சுத்திகரிப்பு காரணமாக இயற்கையான சத்துக்கள், வைட்டமின்கள் பெருமளவு அழிந்துவிடும். இது பார்ப்பதற்குத் தெளிவாகவும், எந்தவித வாசனையோ சுவையோ இல்லாமலும் இருக்கும். இதன் புகை நிலை அதிகமாக இருப்பதால், அதிக வெப்பத்தில் உணவுகளைப் பொரிப்பதற்கு இந்த சமையல் எண்ணெய் எளிதாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டால், முடிந்தவரை முதல் இரண்டு வகைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.