இது பெண்களுக்கு மட்டுமானதல்ல... ஒவ்வொரு ஆணும்கூட தெரிஞ்சுக்கணும்!

Gas cylinder
Gas cylinder
Published on

சமையல் உள்ளிட்ட சில பணிகளைச் செய்திட மற்ற எரிபொருட்களைக் காட்டிலும், எரிவாயுவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நேரச்சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பல்வேறு பயன் மிகுந்த செயல்பாடுகளால் எரிவாயுவின் பயன்பாடு மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. உலகில் எரிவாயுவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தில் இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

வீடு மற்றும் சிறு வணிக நிறுவனங்களில் சமையலுக்கான எரிவாயுக்கள் பயன்பாடு எளிமையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் தீவிபத்துகளை ஏற்படுத்தி விடுமோ, அதன் மூலம் பொருள் இழப்புகள் மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. 

இதற்காகவே, எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துபவர்கள் அதனை அதிகக் கவனத்துடன் கையாள வேண்டுமென்கிற சில முன்னெச்சரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. வாருங்கள்… எரிவாயு உருளை குறித்தும், அதனைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்தும் முழுமையாகத் தெரிந்து கொள்வோம்… 

இந்தியாவில் சமையல் எரிவாயு உருளைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை; 

  • கிராமப்பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகள் போன்றவற்றின் பயன்பாட்டுக்காக 5 கிலோ எடையளவு கொண்ட எரிவாயு உருளைகள்.

  • வீட்டுப் பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடையளவு கொண்ட எரிவாயு உருளைகள்.

  • வணிகம் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கான 19 மற்றும் 47.5 கிலோ எடையளவு கொண்ட எரிவாயு உருளைகள்.

தேதி ரொம்ப முக்கியமுங்க:

வீடுகள் மற்றும் சிறு வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் மேற்பகுதியில், மூன்று கம்பிப் பட்டைகள் இருக்கும். இவற்றில் ஒன்றில், உட்புறத்தில் ஆங்கில எழுத்துகளில் A, B, C, D என்ற நான்கு எழுத்துகளில் ஏதாவதொன்று இருக்கும். அதனைத் தொடர்ந்து, 18, 19, 20, 21 என்று இரண்டு இலக்கத்தில் ஏதேனும் எண் குறிக்கப்பட்டிருக்கும். ஆங்கில எழுத்து A என்று குறிக்கப்பட்டிருந்தால், அது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களையும், B என்று குறிக்கப்பட்டிருந்தால், அது ஏப்ரல், மே, ஜூன் மாதங்களையும், C என்று குறிக்கப்பட்டிருந்தால், அது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களையும், D என்று குறிக்கப்பட்டிருந்தால், அது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து இருக்கும் எண்கள் ஆண்டையும் குறிக்கின்றன. 

உதாரணமாக, எரிவாயு உருளையின் மேற்பகுதியில், D-20 என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கொள்வோம். அப்படியெனில், இந்த எரிவாயு உருளை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பயனற்றதாகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இதனைக் கவனித்துப் பயன்படுத்துவது விபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும். 

எரிவாயு உருளைகள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் இருக்கிறதே, இது ஏனென்று தெரியுமா?

சிவப்பு நிறம் என்பது ஆபத்தானது என்பதை அறிவுறுத்தும் நிறம் என்பது மட்டுமல்ல, இருள் நிறைந்த இடங்களிலும், தொலைதூரத்திலிருந்தும், அதனை எளிதாகக் கண்டறிய முடியும் என்பதால்தான் எரிவாயு உருளைக்கு சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

எரிவாயுவில் துர்நாற்ற வாசனை:

உண்மையில் எரிவாயுவில் துர்நாற்ற வாசனை என்று எதுவுமில்லை. எரிவாயு உருளையில் எரிவாயு நிரப்பப்படும் போது, அதனுடன் ‘எதில் மெர்கப்டன்’ (Ethyl Mercaptan) கலந்து, அதன் மூலம் துர்நாற்ற வாசனை சேர்க்கப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு உருளைகள் வீட்டிற்குள்ளாகப் பயன்படுத்துவதால், அதில் துர்நாற்ற வாசனை குறைவாகவும், சிறு வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு உருளைகள், பெரும்பான்மையாகப் பொதுவெளிகளில் பயன்படுத்தப்படுவதால், அதில் துர்நாற்ற வாசனை அதிகமாகவும் சேர்க்கப்படுகிறது. எரிவாயு கசிவு ஏற்பட்டாலோ அல்லது எரிவாயுவைத் திறந்து விட்டு மறந்து போய்விட்டாலோ, இந்தத் துர்நாற்ற வாசனை அவ்விடத்தில் பரவத் தொடங்கிவிடும். இந்தத் துர்நாற்ற வாசனையைக் கொண்டு, எரிவாயு கசிவு ஏற்பட்டிருப்பதை நாம் எளிதில் அறிந்து கொண்டு, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

பொதுவாக, எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் போது, மேற்காணும் எச்சரிக்கைகளைக் கவனிப்பதுடன், கீழ்க்காணும் சில முக்கியமானப் பாதுகாப்பு வழிமுறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கேஸ் செலவை மிச்சப்படுத்தும் கோட்டை அடுப்பு, கொடி அடுப்பு, குமுட்டி அடுப்பு!
Gas cylinder

எரிவாயு உருளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:

வீட்டிற்குக் கொண்டு வரப்படும் எரிவாயு உருளை மூடி முத்திரையிட்ட நிலையில் இருப்பதுடன், நம் முன்பு அதனைத் திறந்து காண்பிக்கச் சொல்ல வேண்டும்.  எரிவாயு உருளையின் மூடி சரியாக இருக்கிறதா? என்பதையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

எரிவாயு உருளையை அப்படியேத் தூக்கிக் கொண்டு வந்து வைக்கச் சொல்ல வேண்டும். உருட்டிக் கொண்டோ அல்லது இழுத்துக் கொண்டோ வந்து வைக்க அனுமதிக்கக் கூடாது. 

எரிவாயு உருளையினை நேராக நிமிர்த்திய நிலையிலேயே வைக்க வேண்டும், கீழேச் சாய்த்து வைக்கக் கூடாது. 

எரிவாயு சீராக்கி (Gas Regulator) மற்றும் எரிவாயுக் குழாய் (Gas Tube) வாங்கும் போது, எண்ணெய் நிறுவனங்கள் பரிந்துரைத்த நல்ல தரத்துடன் கூடிய இந்திய தரச்சான்றிதழ் பெற்ற பொருட்களாகவே வாங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆஸ்துமாவை உண்டாக்கும் சிலிண்டர் கேஸ்.. ஜாக்கிரதை!
Gas cylinder

எரிவாயு உருளையைப் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை:

எரிவாயு பயன்படுத்தும் போது, அடுப்பிலிருந்து நெருப்புச் சுடருக்கு அருகில் வேதிப்பொருட்கள் மற்றும் எரியக்கூடிய கரைசல்கள் எதையும் தெளிக்கக் கூடாது.

அடுப்பில் சமைப்பதற்கான பாத்திரத்தை வைப்பதற்கு முன்பு, எரியுமிடத்தில் (Burner) கசிவு இருக்கிறதா? என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

எரிவாயு அடுப்புக்கு அருகில் காகிதம், நெகிழி (Plastic) யிலான பொருட்களை வைக்கக் கூடாது.

அடுப்பில் வைத்த பாத்திரத்தை, அடுப்பிலிருந்து இறக்குவதற்கு தீப்பிடிக்கக் கூடிய துணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சமையலறை இடுக்கி, தீ எதிர்ப்பு கையுறைகள் போன்றவைகளைப் பயன்படுத்தலாம்.

தரையில் எரிவாயு உருளைக்கு அருகில் வேதிப்பொருட்கள், அமிலங்கள் போன்றவைகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
காஸ் மிச்சப்படுத்த... - சில யோசனைகள்!
Gas cylinder

எரிவாயு அடுப்புப் பராமரிப்புக் குறிப்புகள்:                 

குழாய், வால்வு (Valve), சீராக்கி (Regulator) ஆகியவை சேதமடையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

எரிவாயு குழாய் தேய்ந்திருக்கிறதா? அல்லது பிரிந்திருக்கிறதா? என்பதை ஒவ்வொரு நாளும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். 

அடுப்புக்கு அருகில் திரைச்சீலைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையான மின்சாதனங்கள் நிலையான வெப்பம் அல்லது தீப்பொறிகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், அடுப்புக்கு அருகில் மின்சாதனங்கள் அல்லது மின்சார இணைப்புக் கம்பிகள் போன்றவைகளை வைக்கக் கூடாது. 

அடுப்பு வேலைகள் முடிவடைந்தவுடன் எரிவாயு உருளையில் இணைக்கப்பட்டிருக்கும் சீராக்கியைக் கொண்டு எரிவாயு அடுப்பிற்குச் செல்லாதபடி அடைத்து வைக்க வேண்டும். 

மூன்று நாட்களுக்கு மேல் வெளியூர் செல்ல வேண்டிய நிலையில், எரிவாயு உருளையில் இணைக்கப்பட்ட சீராக்கியை எடுத்துவிட்டு, எரிவாயு உருளையுடன் நூலுடன் இணைக்கப்பட்ட தொப்பி மூடியைக் கொண்டு மூடிப் பாதுகாப்பாக வைத்துவிட வேண்டும்.  

இதையும் படியுங்கள்:
கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி தெரிந்து கொள்ள வேண்டுமா?
Gas cylinder

எரிவாயு கசிவு: 

எரிவாயு கசிவு இருப்பதாகத் தோன்றினால், அடுப்பைப் பயன்படுத்த வேண்டாம். எரிவாயு சீராக்கி (Gas Regulator), எரிப்பான் சீராக்கி (Burner Regulator) ஆகியவற்றை அணைத்துவிடவும். சமையலறை சன்னலை முழுமையாகத் திறந்து வைக்கவும். 

வீட்டிற்கான மின் இணைப்பைத் துண்டிக்கவும். 

எரிவாயு கசிவை நாமேச் சரி செய்துவிடலாம் என்று நினைத்துச் செயல்படக் கூடாது.

எரிவாயுவானது காற்றின் கனத்தை விட அதிகமானது என்பதால், அது தரையின் அடிப்பகுதியிலேயே நிரம்பியிருக்கும். எனவே, அது வெளியேறுவதற்கு வசதியாக அனைத்துக் காற்றோட்டங்களையும் திறந்து வைக்கவும்.

விளக்கு எரித்தல், தீப்பிழம்புகள், நெருப்புப் பொறிகள் உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். 

தங்களது எரிவாயு விற்பனையாளர் அலுவலகத்தின் அவசர உதவிப்பிரிவு எண் (எரிவாயு உருளை வாங்கும் போது, கொடுக்கப்படும் பண ரசீதின் பின்புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும் எண்) அல்லது எரிவாயுக் கசிவு குறித்துப் புகார் அளிப்பதற்கான பொது எண் 1906 என்று ஏதாவதொரு எண்ணிறிற்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.   

எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டு விட்டால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான அவசர எண் 101-ஐத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com