

மழைக்காலம், பனிக்காலத்தில் சுற்றுப்புறசூழலால் எப்போதும் குளிரான சூழ்நிலையே வீட்டிற்குள் நிலவும். வெளியில் சென்று வீட்டுக்கு வந்தாலும் வீட்டிலும் குளிராக இருக்கும். பனி மற்றும் குளிர்காலத்தில் நம் வீட்டை கதகதப்பாக எப்படி வைத்துக்கொள்ளலாம் என்பதை இப்பதில் தெரிந்து கொள்வோம்.
ஜன்னல், கதவுகளில் கனமான ஸ்கிரீன்கள்: பலரும் தங்களது வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு திரைச்சீலைகளைப் பயன்படுத்துவர். அப்படி ஸ்கிரீன் பயன்படுத்தும்போது குளிர்காலத்துக்கு ஏற்ற வகையிலான கனமான அடர்த்தி மிகுந்த திரைச்சீலைகளை தொங்க விடலாம். ஜன்னலிலிருந்து வெளிப்புற குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வராமல் இருக்க கனமான, அடர்த்தியான ஸ்கிரீன்களை போட்டால் குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வராமல் உங்கள் வீடு வெதுவெதுப்பாக இருக்கும்.
தரை விரிப்புகள்: குளிர்காலத்தில் வீட்டின் தரையில் கூட கால்களை வைக்க முடியாது. அந்த அளவுக்கு தரை ஜில் என்று இருக்கும். ஜில்லென்ற தரையில் அதிகம் நடப்பதால் பலருக்கு சளி பிரச்னை ஏற்படும். அதனைத் தவிர்க்க வீட்டின் தரைகளில் கனமான விரிப்புகளைப் பயன்படுத்தலாம். இதனால் உங்களது கால்கள் குளிர்ச்சியிலிருந்து காக்கப்படும். தரை விரிப்புகளைப் பயன்படுத்துவதால் வீட்டின் தோற்றமும் அழகாக இருக்கும், வீடும் வெது வெதுப்பாக இருக்கும்.
மெழுகுவர்த்தி ஏற்றலாம்: குளிர்காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்திருக்க எளிய வழி, வீடுகளில் வாசனை மிகுந்த மெழுகுவர்த்தியை ஏற்றுவதுதான். மெழுகுவர்த்திகள் வீட்டிற்கு வெதுவெதுப்பை தந்து குளிர்ச்சியை குறைத்து அதன் நறுமணம் நமக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
ஜன்னலை திறந்து வைத்தல்: குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வராமல் இருக்க பலர் ஜன்னலை மூடி வைப்பர். ஆனால், சூரிய ஒளி படும் நேரத்தில் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்தால் சூரிய ஒளி வீட்டிற்குள் பட்டு வீடு வெது வெதுப்பாக இருக்கும்.Hot drinks
ரூம் ஹீட்டர் போடலாம்: கோடைக் காலத்திலே அறையை குளிராக்க எப்படி ஏசி பயன்படுத்துவோமோ, அதுபோல் பலரும் குளிர்காலத்தில் அறையை வெப்பப்படுத்த ரூம் ஹீட்டரை பயன்படுத்தலாம். மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்களின் வீடுகளில் ரூம் ஹீட்டர் உபயோகிப்பர். குளிர்காலங்களில் வசதி இருப்பவர்கள் வீடுகளில் இதனைப் பயன்படுத்தலாம்.
சூடான பானங்கள்: குளிரைப் போக்க பலரும் சூடான உணவுகள் மற்றும் பானங்கள் உபயோகிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். சூடான காபி, டீ, கஷாயம், பே சூப் குடிப்பதால் உங்களின் குளிரை குறைக்க முடியும். அடிக்கடி சூடான பானங்கள் மற்றும் உணவுகள் உட்கொள்வதன் மூலம் உங்களின் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ளலாம்.
வெதர் ஸ்ட்ரிப்: கதவு, ஜன்னல் பிரேம்களை சுற்றி போம் டேப் அல்லது வெதர் ஸ்கிப்பிங்கைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் குளிர்ந்த காற்று அதிக அளவு வீட்டின் உள்ளே வருவதைத் தடுக்கலாம். மேலும், ஜன்னல்கள், கதவுகள் சுவரின் இடுக்குகளில் உள்ள விரிசல்களின் இடைவெளிகளை இதன் மூலம் மூடுவதால் குளிர்ந்த காற்றைத் தடுத்து வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருக்கலாம்.
வீடு சுத்தமாக இருத்தல்: மழை, பனி காலத்தில் வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருக்க வீட்டைச் சுற்றி உள்ள குப்பை குளங்களை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். வீட்டைச் சுற்றிலும் குப்பையாக இருந்தால் அதில் உள்ள ஈரப்பதம் கூட உங்களின் வீடுகளுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். அதனால் வீட்டைச் சுற்றியும், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மேற்கண்ட விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலம் மழை மற்றும் குளிர் காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்துப் பராமரிக்கலாம்.