
ஒவ்வொருவரின் வாழ்விலும் வரக்கூடிய குழந்தைப் பருவத்தில் ஊர்ந்து செல்வது, எழுந்து நடப்பது, ஓடுவது, மேலே ஏறுவது, கீழே விழுவது போன்ற செயல்களால் காயங்கள் அல்லது எலும்புகள் உடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தைகளின் எலும்புகளை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாக இருக்கிறது. அந்த வகையில், குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில ஆலோசனைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
* எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க கால்சியம் இன்றியமையாதது. எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு தினமும் 1000 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. பால் மற்றும் பால் பொருட்கள், கீரைகள், பாதாம், தானியங்கள் ஆகியவற்றில் குழந்தைகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருப்பதால் தினமும் தவறாமல் இதனைக் கொடுக்க வேண்டும்.
* உடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சும் தன்மை வைட்டமின் டி.க்கு உண்டு என்பதால் முட்டை, கொழுப்பு நிறைந்த மீன், பால் போன்ற உணவுப் பொருட்களை தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். ஏனெனில், இதில் வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும், காலை மற்றும் மாலை வேளைகளில் தினமும் 15 நிமிடம் வெயிலில் விளையாட வைப்பது வைட்டமின் டி உடலுக்குக் கிடைப்பதை உறுதி செய்கிறது.
* எலும்புகளின் வளர்ச்சிக்கு புரதங்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதால் புரதச் சத்து நிறைந்த பருப்பு வகைகள், பீன்ஸ், முட்டை, கோழி, மீன் ஆகியவற்றை குழந்தைகள் சாப்பிடும் உணவில் சேர்த்து சமைக்க வேண்டும். மேலும், வைட்டமின் கே அதிக அளவில் நிறைந்த புரோக்கோலி, முட்டைக்கோஸ், கீரைகள் ஆகியவற்றையும் கொடுப்பது எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
* குழந்தைகளுக்கு மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பிற தாதுக்களும் வைட்டமின்களும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதால் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் என சமச்சீர் உணவுகளை வழங்குவதை பெற்றோர் கடமையாகக் கொள்ள வேண்டும்.
* எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சர்க்கரை சேர்த்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளான சோடா பானங்கள், காஃபின் நிறைந்த உணவுகள் கால்சியம் உறிஞ்சுவதைத் தவிர்க்கும் என்பதால் இதனை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.
* ஒட்டுமொத்த எலும்புகளின் வளர்ச்சிக்கு தூக்கம் மிகவும் அவசியம் என்பதால் உணவுகளோடு சேர்த்து உடல் செயல்பாட்டையும் கண்காணித்து குழந்தைகள் போதுமான நேரம் தூங்குகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* எலும்புகள் அடர்த்தியாகவும் வலுவாகவும் இருப்பதற்கு ஓடுதல், குதித்தல், விளையாடுதல் போன்ற உடல் செயல்பாடுகள் இன்றியமையாதது என்பதால் குழந்தைகள் விளையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
* ஒரே இடத்தில் அமர்வது எலும்பு மற்றும் தசைகளை பலவீனமாக்கும் என்பதால் குழந்தைகளை மொபைல் கொடுத்து வீடியோ பார்க்க ஒரே இடத்தில் அனுமதிக்காமல் வெளியில் சென்று விளையாட வைக்க வேண்டும்.
* குழந்தை பருவத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகள் பிற்காலத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் கூற்றாக இருப்பதால் குழந்தைகள் விளையாடும்போது பாதுகாப்பிற்காகத் தக்க காலணிகள் மற்றும் ஷூக்களை கொடுக்க வேண்டும்.
* குழந்தைகள் சைக்கிள் ஓட்டும்போதும், ஸ்கேட்டிங், கால்பந்து விளையாடும்போது ஹெல்மெட், முழங்கை, முழங்கால் பேடுகள் ஆகியவற்றை அணிவது எலும்பு முறிவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உதவும்.
* பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அவர்களின் உடல் எடையில் 15 சதவீதத்திற்கும் மேல் அவர்களின் பேக் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், அதிக எடை உடைய பேக்குகள் தோள்பட்டை மற்றும் முதுகு எலும்புகளை சேதமடையச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய முறைகளை குழந்தைகளிடம் பெற்றோர்கள் கையாண்டாலே குழந்தைப் பருவத்தில் இருந்து பலமானவர்களாக அவர்கள் மாறிவிடுவார்கள்.