

நகை திருட்டு, பைக்-ஸ்னாட்சிங், மொபைல் திருட்டு போன்றவற்றிலிருந்து பெண்கள் பாதுகாப்புடன் இருக்க அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சில ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பெண்கள் வெளியில் செல்லும்போது கையில் இருக்கும் பையில் கவனம் வேண்டும். ஹேன்ட்பேக் / பௌச் போன்றவற்றை எப்போதும் உடலின் முன்னால் வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லிங் பைகளை பயன்படுத்தினால் உடலைச் சுற்றி குறுக்காக அணியுங்கள். குறிப்பாக எந்தப் பையாக இருந்தாலும் ஜிப் முழுவதும் மூடியிருக்க வேண்டும். பின்பக்க பாக்கெட்டில் மொபைல் / பணம் போன்றவற்றை வைக்காதீர்கள். Bike / Scooty ஓட்டும்போது பையை front hookல் தொங்க விடாதீர்கள். உள் பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.
செல்போன் பயன்படுத்தும்போது சாலையோரத்தில் பைக் செல்லும் வழிகளில் நின்று பேச வேண்டாம். ஏனெனில், பைக் திருடர்களுக்கு மொபைல்தான் அதிக குறி என்பதுடன், பறிக்க எளிதாக இருக்கும். கூட்டங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மொபைலை கைகளில் இறுக்கமாகப் பிடியுங்கள். ஹெட் செட் போட்டுக்கொண்டு நடப்பதையும் பேசுவதையும் தவிருங்கள்.
தனியாக நடந்து செல்லும்போது, இருட்டான பகுதிகளிலும் ஆளரவமற்ற வெளிகளிலும் தனியாக செல்வதைத் தவிர்க்கவும். Earphone வைத்து அதிக சத்தத்தில் பாடல் கேட்பதை கட்டாயம் தவிர்க்கவும். ஏனெனில் கவனம் சிதறி சுற்றுப்புறத்தை கவனிக்க முடியாது. வெளியில் செல்லும்போது அதிக நகைகள் அணிவதை தவிர்க்கவும்.
வீட்டிலும் வெளியிலும் எல்லா பணத்தையும் ஒரே இடத்தில் வைக்காதீர்கள். பகுதிகளாகப் பிரித்து வையுங்கள். ATMல் பணம் எடுக்கும்போது பைகளை திறந்து வைக்க வேண்டாம். குறிப்பாக, ஏடிஎம் பிரச்னை என்றால் அருகிலிருக்கும் எவரிடமும் உதவி கேட்பதைத் தவிர்த்து அது தொடர்பான வங்கியிடம் மட்டும் விசாரிக்கவும்.
ஆட்டோ, கேப், பேருந்து பயணத்தின்போது பழக்கமில்லாத இடங்களில் ஷேர் ஆட்டோவை தவிர்க்கவும். தற்போது டிரைவர் விபரங்களுடன் Cab detail (vehicle number) நமக்கு வந்துவிடும் என்பதால் அதை நம்பகமான ஒருவருக்கு WhatsAppல் அனுப்பி வைக்கவும். கூட்டம் மிகுந்த கடைகள் மற்றும் மார்க்கெட்டில் உங்கள் பையை ஜிப் லாக் கொண்டு பாதுகாக்க வேண்டும்.
குழந்தைகளுடன் இருந்தால் இரண்டிலும் கவனம் சிதற வாய்ப்பு இருப்பதால் பையை உங்கள் உடலின் முன்புறம் இறுக்கப் பற்றுங்கள். அநாவசியமாக யாரிடமும் பேச்சு தராதீர்கள். உதவிக்கு வருவது போல் நடிப்பவர் அதிகம். வீட்டிற்கு அருகில் மற்றும் அபார்ட்மெண்ட் ஏரியாவில் வரும் மனிதர்களை கவனியுங்கள்.
தினமும் ஒரே நேரத்தில் நடைப்பயிற்சி, கடைக்கு செல்வது போன்றவற்றை தவிருங்கள். திருடர்களுக்கு வசதியான தினசரி routine நேரத்தை randomமாக மாற்றுங்கள். லிஃப்ட் வசதி அவசியம் இருப்பினும் லிஃப்டில் சந்தேகப்படும் நபர் இருந்தால் படிக்கட்டு வழியாகச் செல்லுங்கள் அல்லது அவர் செல்லும் வரை காத்திருங்கள்.
பெரும்பாலும் வீட்டு சாவிகள் பாதுகாப்பு விஷயத்தில்தான் நாம் அசால்ட்டாக இருப்போம். எளிதாகக் கண்டுபிடிக்கும்படி spare keyஐ நிலைப்படி கதவு மேல், வாசல் மேட் கீழ் போன்ற பொதுவான இடங்களில் மறைத்து வைக்க வேண்டாம். நம்பிக்கை என்றாலும் மாற்று சாவியைத் தரும்போது மதிப்பு மிக்க பொருட்களை இடம் மாற்றுவது அவசியம்.
ஏதாவது தவறாக உள்ளதுபோல் உணர்ந்தால் உடனடியாக காவல் நிலையம் அல்லது அருகிலிருப்பவர் உதவியை நாடுங்கள். நீண்ட நேரம் உங்கள் மீது கவனம் செலுத்தும் நபர்கள் பின்தொடர்வது போல தோன்றினால் உடனே மக்கள் அதிகமுள்ள இடத்துக்குச் செல்லுங்கள்.