அரிசி, உளுந்து அரைத்து இரவு முழுவதும் புளிக்க வைத்த மாவைத் தட்டில் ஊற்றி 12 முதல் 15 நிமிடங்கள் வேகவைத்தால் மென்மையான இட்லி தயாராகிவிடும். இது பார்ப்பதற்கு மிக எளிமையான சமையலாகத் தோன்றினாலும், அந்த 15 நிமிடங்களில் மாவுக்குள் நடக்கும் அறிவியல் மிகவும் நுட்பமானது.
இட்லியைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்காமல் ஆவியில் வேகவைப்பது வெறும் பாரம்பரியப் பழக்கம் மட்டுமல்ல. மாவின் அமைப்பு உடையாமல் பஞ்சு போல வேக ஆவி மட்டுமே ஒரே சரியான வழி.
புளித்த மாவில் ஒளிந்திருக்கும் விஷயம்!
புளித்த மாவில் 2 முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒன்று புளித்தலின்போது உருவாகும் கார்பன் டை ஆக்சைடு வாயு, மற்றொன்று தண்ணீரில் கலந்துள்ள அரிசி மாவுத் துகள்கள். உளுந்தும் அரிசியும் சேர்ந்து புளிக்கும்போது அதில் உள்ள பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் சர்க்கரையை உட்கொண்டு வாயுவை வெளியிடும்.
உளுந்தில் உள்ள புரதம் இந்த வாயுவைச் சிறு குமிழ்களாகப் பிடித்து நுரை போல மாற்றும். இந்தச் சிறிய காற்றுக் குமிழ்களே இட்லிக்கு பஞ்சு போன்ற தன்மையைத் தருகின்றன. ஆனால், இந்த புரத வலைப்பின்னல் மிகவும் மென்மையானது. இதற்கு மிதமான, சீரான வெப்பமே தேவை.
ஆவிக்கும் கொதிக்கும் நீருக்கும் உள்ள வித்தியாசம்!
100°C வெப்பநிலையில் உள்ள ஆவி, இட்லித் தட்டைச் சுற்றிலும் பரவி வெப்பத்தை மெதுவாக உள்ளே அனுப்பும். இதனால் மாவின் வெளிப்புறம் முதலில் வெந்து ஒரு மெல்லிய தோல் போல வடிவத்தைப் பிடித்துக்கொள்ளும். பின்னர் வெப்பம் உள்ளே சென்று காற்றுக் குமிழ்களை அப்படியே தக்கவைக்கும்.
ஆனால், கொதிக்கும் நீரில் போட்டால் நீரின் வேகமான அசைவால் நுரை உடனே உடைந்துவிடும். மேலும், ஆவி போல மேல்பரப்பில் வடிந்து செல்லாமல் கொதிக்கும் நீர் மாவுக்குள் வேகமாக ஊடுருவும். இதனால் காற்று இடைவெளி இல்லாத, பிசுபிசுப்பான கெட்டி பொருளாகவே மாறும்.
ஸ்டார்ச் வேகும் சரியான வெப்பநிலை!
அரிசி மாவுத் துகள்கள் வெப்பத்தில் நீரை உறிஞ்சி கூழ் போல மாறுவதாலேயே இட்லிக்கு மென்மையான பதம் கிடைக்கிறது. இந்த மாற்றம் 60°C முதல் 80°C வெப்பநிலைக்குள் நிகழும். ஆவியில் வேகும்போது மாவு இந்த வெப்பநிலையை மெதுவாகக் கடப்பதால் வெளிப்பகுதி உறுதியாகி உட்பகுதி சரியாக வேகும். கொதிக்கும் நீரில் 100°C வெப்பம் ஒரே நேரத்தில் தாக்குவதால் வெளிப்புறம் ரப்பர் போலக் கடினமாகி, உள்ளே நுரை சிதைந்துவிடும்.
மூடியும், மாவின் பதமும் ஏன் முக்கியம்?
இட்லி வேகும்போது பாதியில் மூடியைத் திறந்தால் உள்ளே இருக்கும் ஆவி வெளியேறி வெப்பநிலை திடீரெனக் குறையும். இதனால் பாதி வெந்த மாவு சுருங்கி, இட்லியின் நடுப்பகுதி பள்ளமாகிவிடும். அதேபோல, பிரஷர் குக்கரில் விசில் போடாமல் வேகவைக்கும்போது ஆவி 100°C அளவிலேயே இருப்பதால் இட்லி மென்மையாக இருக்கும். விசில் போட்டால் அழுத்தத்தால் வெப்பநிலை 100°C-ஐத் தாண்டி, மாவு வேகமாக இறுகி காற்றோட்டம் குறையும்.
மாவின் பதமும் மிக முக்கியம். மாவு அதிகம் நீர்த்திருந்தால் புரதம் நுரையைத் தாங்காமல் தட்டையாகி ஓரங்கள் கெட்டியாகும். அதிக கெட்டியாக இருந்தால் ஆவி உள்ளே செல்லாமல் உட்பகுதி பிசுபிசுப்பாக இருக்கும். கரண்டியில் ஒட்டி மெதுவாக விழும் பதமே சரியானது.
புளித்த மாவின் நுரை, ஆவியின் சீரான வெப்பம், மாவு வேகும் வேகம் ஆகிய 3 விஷயங்களும் சரியாக இணையும்போதுதான் மென்மையான இட்லி கிடைக்கும். எனவே இனி நீங்கள் இட்லி ஊற்றும்போது பாதியில் மூடியைத் திறக்காமல் இந்த அறிவியலை மனதில் வைத்துச் சமைத்துப் பாருங்கள்.