
முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு முக்கிய நூல் ‘பீ யூஸ்ஃபுல்: செவன் டூல்ஸ் ஃபார் லைஃப்’ (Be Useful: Seven Tools for Life.)
இதை எழுதியவர் உலகின் ஆகப்பெரும் பாடிபில்டரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்.
1947ம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்த ஸ்வார்ஸ்னேக்கர் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வீட்டில் கழிப்பறை கூடக் கிடையாது.
ஆனால் படிப்படியாக உயர்ந்து ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் ஆனார். பின்னால் கலிபோர்னியா மாநிலத்தில் கவர்னராகப் பொறுப்பேற்றார்.
கின்னஸ் ரிகார்டில் உடலை நன்கு பேணும் பாடிபில்டர் என்ற புகழைப் பெற்றார்.
சிறு வயதில் ரெக் பார்க் என்ற பிரிட்டிஷ் பாடிபில்டர் பற்றி அவர் படித்தார். அவரால் வாழ்க்கையில் ஒரு தெளிவான பார்வையைப் பெற்று, விடாமுயற்சியால் பெரிய பாடிபில்டர் ஆனார். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வெய்ட் லிப்டிங் பயிற்சியை விடாது செய்வார்.
தனது சொந்த அனுபவத்தைக் கொண்டு, வாழ்க்கையில் உயர ஏழு கருவிகளை (விதிகளை) இவர் தருகிறார்.
ஏழு கருவிகள் எவை தெரியுமா?
1. Have a clear vision.
2. Never think small.
3. Work your ass off.
4. Sell, sell, sell.
5. Shift gears.
6. Shut your mouth, open your mind.
7. Break your mirrors.
1. தெளிவான பார்வை தேவை!
குறிப்பிட்ட குறிக்கோளைத் தெளிவாகக் கொள்ள வேண்டும். மனச்சித்திரத்தில் அதைக் கொண்டு அதனால் எப்போதும் உத்வேகம் பெற வேண்டும். அடிக்கடி அதை மதிப்பீடு செய்து வர வேண்டும். ஒரு போர்டில் குறிப்பிட்ட குறிக்கோளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
2. பெரிதாக நினை; சிறிதாக நினைக்காதே!
சந்தேகப்பேர்வழிகளையும் ஊக்கத்தைக் கெடுப்பவர்களையும் உங்கள் அருகில் அண்ட விடாதீர்கள். நெகடிவ் பர்ஸனாலிடி எனப்படும் எதிர்மறையாகப் பேசுவோர் ஆபத்தானவர்கள். ஆகவே நம்மைச் சுற்றி எப்போதும் ஆக்கபூர்வமாகப் பேசி ஊக்கமளிப்பவர்களை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய வெற்றி பெற்றால் கூட அதைக் கொண்டாட வேண்டும்.
3. உழைத்து முன்னேறு!
உழைப்பு, உழைப்பு. கடும் உழைப்பு தேவை.
"பாடிபில்டர்; மிக அதிக சம்பளத்தைப் பெற்ற முன்னணி ஹாலிவுட் நடிகர்; கலிபோர்னியா கவர்னர் – இதெல்லாம் எப்படி சாத்தியம். ஒரே வார்த்தை – உழைப்பினால் தான்!"
4. விளம்பரமும் தேவை தான்!
தன்னைத் தானே சமுதாயத்தில் உயர்த்திக் கொள்ள போட்டிகளில் வென்றால் மட்டும் போதாது. 19 வயதில் மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாவதாக வந்த அர்னால்ட், மீடியாவைத் தன் பக்கம் இழுக்க நீச்சல்உடை அணிந்து போஸ் கொடுத்தார். அவ்வளவு தான் அன்றிலிருந்து மீடியா அவர் பக்கம். இந்த ஸ்டன்ட்டும் தேவை தான். தன்னைத் தானே பல்வேறு விதங்களில் முன்னிலைப் படுத்திக் கொள்வது இன்றியமையாதது.
30 நாட்களில் 30 நகருக்குப் பயணம் செய்தார் அவர்! எதற்காக? அவரது ‘அர்னால்ட் – தி எஜுகேஷன் ஆஃப் எ பாடிபில்டர்’ என்ற தனது புத்தகத்தை விளம்பரப்படுத்த! விளைவு? அவரது புத்தகம் 2,50,000 காப்பிகள் விற்று புத்தகப் பதிப்பாளரையே அதிர வைத்தது!
'சமூக ஊடகங்களை ஒரு போதும் விடாதே; விளம்பரம் செய்து கொண்டே இரு; வாய்ப்புகளைக் கவனி - பயன்படுத்து!' இது தான் அவர் வழி!
5. ஷிப்ட் கியர்ஸ்!
தோல்வியைக் கண்டு பயப்படாதே. தோல்விக்கான காரணங்களைப் பற்றிப் புகார் செய்வதை விட்டுவிட்டு அவற்றை எப்படி மீறி முன்னேறுவது என்பதை யோசி! தோல்வியில் நிறையக் கற்றுக் கொள் – திருப்பி எழுவேன் என்று உறுதி செய்து கொள்!
6. வாயை மூடு; மனதைத் திற!
ஒரு கடல்பஞ்சு போல இரு. அதிகமதிகம் அறிவைப் பெறு. பேசுவதை விட கேட்பதை அதிகமாக்கு!
7. கண்ணாடியை உடை!
அர்னால்டின் மாமனார் அவருக்குக் கூறிய புத்திமதி இது : உனது கண்ணாடியை உடை! அதாவது, இந்த சமூகத்தில் அனைவரும் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அதை விட்டு விட்டு நீ வாழும் சமூகத்திற்குச் சேவை செய்; கண்ணாடிக் கூண்டை உடைத்து வெளியே வா, என்பது அவர் கொள்கை!
சுருக்கமாகச் சொல்லப் போனால்.....
நான்கே வார்த்தைகளில் அர்னால்ட் தனது மந்திரக் கொள்கையை வலியுறுத்தி விடுகிறார் : STAY BUSY; BE USEFUL - சுறுசுறுப்பாய் இரு; பயனுள்ளவனாக இரு!
போகிற போக்கில் சொல்லப்பட்டவை அல்ல இவை!
சொந்த அனுபவத்தில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் கூறும் அனுபவ வார்த்தைகள்!
அருமையான நூல்! படிப்பதற்கு மட்டும் அல்ல; பயன்படுத்தவும் தான்!