வெறுப்புணர்வு: மனதை அரிக்கும் நிழல் யுத்தம்! உறவுகளையும் நிம்மதியையும் காப்பது எப்படி?

சிறிய மனக்கசப்பு எப்படி வெறுப்பாக வளர்கிறது? மன அமைதியை மீட்க எளிய வழிகள்.
வெறுப்புணர்வு - emotional resentment
வெறுப்புணர்வு - emotional resentmentImage credit: Gemini
முனைவர் மா. அன்பரசு

வேளாண் அறிவியலில் முனைவர் (Ph.D.) மற்றும் முதுமுனைவர் (Post-Doctoral Fellow) பட்டம் பெற்றவர். உழவியல் துறை (Agronomy) உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் நாவல் உள்ளிட்ட படைப்பிலக்கியத் தளங்களிலும் பல வருடங்களாக தடம் பதித்து வருகிறார்.

Updated on: 

ஒரு மனிதரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடிக்காமல் போகலாம். அவருடைய பேச்சு, செயல்பாடு, பழக்க வழக்கம் அல்லது சிந்தனை நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதுவரை இயல்பானதுதான். ஆனால், அந்த விருப்பமின்மை மெல்ல வெறுப்பாக மாறும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலே கோபம் வருவது, அவர் நன்றாக இருப்பதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் போவது, அவருக்குக் கிடைக்கும் பாராட்டைப் பார்த்து மனம் எரிவது என வெறுப்பு பல வடிவங்களில் வெளிப்படுகிறது.

உண்மையில், வெறுப்புணர்வு என்றால் என்ன?

ஒருவர் மீதோ, ஒரு குழுவின் மீதோ, ஒரு கருத்தின் மீதோ உருவாகும் தீவிரமான எதிர்மறை உணர்வே வெறுப்புணர்வு. இது திடீரென்று உருவாவதில்லை. ஒரு சிறிய மனக்கசப்பு, புரிந்துகொள்ளப்படாத வார்த்தை, நிறைவேறாத எதிர்பார்ப்பு அல்லது ஏற்பட்ட அவமானம் என ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி, மனதிற்குள் தொடர்ந்து இடம் பெறும்போது வெறுப்பாக வளர்கிறது.

வெறுப்புணர்வு ஏன் வருகிறது?

மனிதன் இயல்பாகவே அன்பு, அங்கீகாரம், மரியாதை, பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது ஏமாற்றம் ஏற்படுகிறது. அந்த ஏமாற்றத்தைப் புரிந்துகொண்டு கடந்து செல்லமுடியாவிட்டால், அது கோபமாக மாறுகிறது. கோபத்திற்கான காரணத்தைத் தொடர்ந்து மனதில் நினைவுபடுத்திக்கொண்டிருந்தால், அந்தக் கோபம் வெறுப்பாக மாறத்தொடங்குகிறது.

சில நேரங்களில் நமக்குக் கிடைக்காத ஒன்று மற்றவருக்குக் கிடைக்கும்போது வெறுப்பு உருவாகிறது. சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த மரியாதையை ஒருவர் கொடுக்காதபோது உருவாகிறது. இன்னும் சில நேரங்களில் நம்முடைய தவறைச் சுட்டிக்காட்டிய ஒருவரையே எதிரியாக நினைக்கத் தொடங்குகிறோம். உண்மையில் அவர் சொன்னதில் இருக்கும் நியாயத்தை ஆராய்வதற்குப் பதிலாக, அவர் சொன்ன விதத்தையும் அவருடைய நோக்கத்தையும் மட்டுமே சந்தேகிக்கிறோம்.

இதற்குப் பின்னால் தாழ்வு மனப்பான்மை, பொறாமை, பாதுகாப்பற்ற உணர்வு, ஒப்பீட்டு மனநிலை, பழிவாங்கும் எண்ணம் போன்ற உளவியல் காரணிகள் இருக்கின்றன. தன்னுடைய மதிப்பைத் தானே உணராத ஒருவர், மற்றவர்களின் வளர்ச்சியைத் தன்னுடைய குறையாகப் பார்க்கக்கூடும். தனக்குக் கிடைக்காத அங்கீகாரம் மற்றவருக்குக் கிடைக்கும்போது, அவருடைய திறமையைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவருடைய குறைகளைத் தேடத்தொடங்கலாம்.

வெறுப்புணர்வு எப்படிப் வளர்கிறது?

ஒரு அலுவலகத்தில் இரண்டு பேர் பணிபுரிகிறார்கள். இருவரும் ஒரே பதவியில் இருக்கிறார்கள். ஒருவருக்கு மேலதிகாரியிடம் பாராட்டு கிடைக்கிறது. மற்றொருவருக்கும் அதே அளவு திறமை இருந்தாலும் பாராட்டு கிடைப்பதில்லை. ஆரம்பத்தில் சிறிய ஏமாற்றம் ஏற்படுகிறது.

பிறகு, பாராட்டுப் பெற்றவரின் ஒவ்வொரு செயலிலும் குறை காணத் தொடங்குகிறார். அவர் பேசினாலும் தவறு, பேசாமல் இருந்தாலும் தவறு. அவருடைய வளர்ச்சியையே தன்னுடைய தோல்வியாக நினைக்கிறார்.

இங்கே கவனிக்கவேண்டியது, ஆரம்பத்தில் ஏற்பட்டது ஏமாற்றம் மட்டுமே. ஆனால், அந்த ஏமாற்றத்தை அவர் தொடர்ந்து மனதில் அசைபோட்டதால் அது ஒப்பீடாக மாறியது. ஒப்பீடு பொறாமையை உருவாக்கியது. பொறாமை குறை தேடும் மனநிலையை வளர்த்தது. இறுதியில் அது வெறுப்பாக மாறியது.

வெறுப்பு வளர்வதற்கு நினைவுகளும் முக்கியக் காரணமாகின்றன. ஒருவர் நம்மிடம் தவறாக நடந்துகொண்ட ஒரு சம்பவத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறோம். அதனுடன் தொடர்பில்லாத பழைய சம்பவங்களையும் சேர்த்துக்கொள்கிறோம். அவர் செய்த நல்ல செயல்களைக்கூட மறந்துவிட்டு, தவறுகளை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறோம். காலப்போக்கில் அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் தவறான நோக்கத்துடன் அணுகத் தொடங்குகிறோம்.

இதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. நம்முடைய வெறுப்பை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்கிறோம். 'அவர் அப்படிப்பட்டவர்', 'அவரை நம்பவே முடியாது' என்று கூறி, நம்முடைய அனுபவத்தை மற்றவர்களுடைய எண்ணமாகவும் மாற்ற முயல்கிறோம். சில நேரங்களில் உண்மையை அறியாதவர்கள்கூட அந்த வெறுப்பில் பங்கெடுக்கிறார்கள்.

உறவுகளை உடைக்கும் வெறுப்பு!

ஒரு குடும்பத்தில் சொத்துப் பிரச்னையால் இரண்டு சகோதரர்கள் பேசிக்கொள்வதில்லை என்று வைத்துக்கொள்வோம். தந்தை இறந்த பிறகு ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு நாளடைவில் பெரிய பிரிவாக மாறுகிறது. திருமணம், பிறந்தநாள், குடும்ப நிகழ்ச்சிகள் என எதற்கும் ஒருவர் மற்றவரை அழைப்பதில்லை. காலம் செல்லச் செல்ல, ஆரம்பத்தில் எதற்காகப் பிரிந்தோம் என்பதுகூட மறந்துவிடுகிறது.

ஆனால், பிரிந்திருப்பதற்கான காரணத்தை மட்டும் தொடர்ந்து மனதில் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்படுகிறார். அப்போதுதான் பல ஆண்டுகளாகப் பேசாமல் கழித்த காலத்தின் வெறுமை புரிகிறது. சில உறவுகளை இழந்த பிறகுதான் அவற்றின் மதிப்பு தெரிகிறது.

வெறுப்புணர்வு - emotional resentment
வெறுப்புணர்வு - emotional resentmentImage credit: Gemini

வெறுப்புணர்வின் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், அது நாம் வெறுக்கும் நபரைவிட நம்மையே அதிகமாகப் பாதிக்கிறது. ஒருவர் நம்மை அவமதித்துவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றியே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தால், நம்முடைய மன அமைதியை அவரிடம் ஒப்படைத்துவிட்டோம் என்றுதான் பொருள். அவர் தனது வாழ்க்கையை இயல்பாக வாழ்ந்து கொண்டிருப்பார். ஆனால், நாம் மட்டும் அவரைப் பற்றிய கோபத்தையும் நினைவுகளையும் சுமந்து கொண்டிருப்போம்.

சமூகத்தில் வெறுப்பு உருவாகும் விதம்!

இன்றைய சமூகவலைத்தளங்களும் வெறுப்புணர்வு வளர்வதற்கான ஒரு களமாக மாறியுள்ளன. ஒருவருடைய கருத்து நமக்குப் பிடிக்கவில்லை என்றால், அந்தக் கருத்தை மறுப்பதற்குப் பதிலாக அவரையே தாக்குகிறோம். அரசியல், மதம், மொழி, சாதி, உணவு, உடை என அனைத்திலும் கருத்து வேறுபாடுகள் பகைமையாக மாற்றப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
தீர்ப்புகளைத் தள்ளி வைப்போம்: அவசர முடிவுகளால் சிதையும் உறவுகளைக் காக்கும் வழி என்ன?
வெறுப்புணர்வு - emotional resentment

ஒரு செய்தியை முழுமையாகப் படிக்காமல் தலைப்பைப் பார்த்தே முடிவுக்கு வருகிறோம். ஒரு காணொளியின் சில நொடிகளை மட்டும் பார்த்துவிட்டு ஒருவருடைய ஒட்டுமொத்தப் பண்பையும் தீர்மானிக்கிறோம். நமக்குப் பிடித்தவரைப் புகழ்வதும், பிடிக்காதவரை இழிவுபடுத்துவதும் ஒரே மனநிலையின் வெளிப்பாடுகளாகிவிடுகின்றன. இதற்குக் காரணம் தகவல் பற்றாக்குறை மட்டுமல்ல;

ஏற்கெனவே நம்பிக்கொண்டிருக்கும் கருத்துக்கு ஆதரவான தகவல்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் ஆகும். நம்முடைய கருத்தை உறுதிப்படுத்தும் செய்தி உண்மையா என்று ஆராயாமல் பகிர்கிறோம். மாறுபட்ட கருத்தைக் கூறுபவரை எதிரியாகப் பார்க்கிறோம். இவ்வாறு புரிதலுக்குப் பதிலாக முன்முடிவுகள் இடம்பிடிக்கும்போது வெறுப்பு தனிமனித எல்லையைத் தாண்டி சமூகத்தையே பாதிக்கிறது.

வெறுப்புணர்வை எப்படிக் கையாள்வது?

முதலில், வெறுப்பை மறுக்காமல் அதை அடையாளம் காண வேண்டும். 'எனக்கு ஏன் இவர் மீது இவ்வளவு கோபம் வருகிறது?' என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அவர் செய்த செயல்தான் காரணமா, அல்லது அவருடைய வளர்ச்சியை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, உடனடியாக எதிர்வினையாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கோபத்தில் பேசும் ஒரு வார்த்தை பல ஆண்டுகால உறவை முறித்துவிடலாம். சில நேரங்களில் சிறிது இடைவெளி எடுத்துக்கொள்வது நம்முடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள உதவும்.

மூன்றாவதாக, மன்னிப்புக்கும் எல்லைகளை அமைத்துக்கொள்வதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மைத் தொடர்ந்து காயப்படுத்தும் ஒருவரை மீண்டும் நம் வாழ்க்கைக்குள் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவரைப் பற்றிய வெறுப்பைத் தினமும் சுமந்துகொண்டும் இருக்க வேண்டியதில்லை. மன்னிப்பது என்பது நடந்த தவறைச் சரியென்று ஏற்றுக்கொள்வதல்ல; அந்தத் தவறுக்கு நம்முடைய எதிர்காலத்தையும் பலியாக்காமல் இருப்பது.

நான்காவதாக, மற்றவர்களின் வாழ்க்கையை நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பயணமும் காலமும் இருக்கிறது. ஒருவர் முன்னேறுவது நம்முடைய தோல்வியல்ல. மற்றவருடைய வெற்றியைப் பாராட்டக் கற்றுக்கொள்ளும்போது நம்முடைய மனமும் விரிவடைகிறது.

ஐந்தாவதாக, கருத்து வேறுபாடுகளைப் பகைமையாகப் பார்க்கக்கூடாது. ஒருவர் நம்மிடமிருந்து மாறுபட்டுச் சிந்திக்கலாம். அவருடைய கருத்தை மறுப்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அதற்காக அவருடைய மனிதத் தன்மையை மறுப்பதற்கு நமக்கு உரிமையில்லை.

வெறுப்புணர்வு இல்லாத வாழ்க்கை என்பது யாரையும் பிடிக்காமல் போகக்கூடாது என்பதல்ல. எல்லோரிடமும் நெருக்கமாகப் பழகவேண்டும் என்பதுமல்ல. நமக்குப் பிடிக்காதவர்களுடனும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ளத் தெரிந்திருப்பதே உண்மையான மனப்பக்குவம்.

இதையும் படியுங்கள்:
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய 3 கேள்விகள்?
வெறுப்புணர்வு - emotional resentment