சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்திருங்கள்! ஆரோக்கியமான தூக்கத்திற்கு சில ரகசியங்கள்!

ஆழ்ந்த உறக்கமும் மலர்ச்சியான காலைப் பொழுதும் உங்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.
நல்ல தூக்கம்
நல்ல தூக்கம்AI image
Updated on

காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருப்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம்னு சொல்ல முடியாது. சிலருக்கு இமை பிரியுமுன் அன்றைய வேலைப்பளு கண்ணுக்குள் விரிந்து சோர்வைத்தரும். பலருக்கு ஆழ்ந்த நல்ல தூக்கம் இல்லாததால் உடல் ஒத்துழைக்க மறுக்கும்.

சூரியன் உதிப்பதையும், அஸ்தமனமாவதையும் புரிந்து, தூங்கும் நேரத்தையும், எழும் நேரத்தையும் கணக்கிட்டு முன்னோர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் உறங்கி, அதி காலையில் எழுந்தார்கள். ஆரோக்கியமாக மன நிறைவாக வாழ்ந்தார்கள்.

இன்று நிலைமையே வேறு. மூளைக்கும், உடலுக்கும் ரெஸ்ட் கொடுத்து ரிலாக்ஸாக இருக்கிறேன்னு சொல்பவர்கள் மிகக் குறைவே. உடல் உழைப்பு இல்லாத தருணங்களிலும் மொபைலில், இரவிலும் வெகு நேரம் ஆழ்ந்துவிடுகிறார்கள்.

சிலருக்கு, மருத்துவரின் பரிந்துரையின்படி உட்கொள்ளும் தூக்கமாத்திரைகள் மூளையை மந்தமாக்கிவிடுகின்றன. மறுநாள் சூரியன் உதிக்கும் நேரம் இமைகள் பிரிய அடம் பிடிக்கிறது. டாக்டர்கள் சொல்கிறார்கள், "தினசரி எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். வயதானவர்கள் ஏழு அல்லது ஆறு மணி நேரம் தூங்கலாம்."

கடைபிடிப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. இரவில் தூக்கம் குறைவதற்கான காரணங்களையும், அதற்கு என்ன செய்யலாம் என்பதையும் பார்ப்போமே.

ஐம்பது வருடங்களுக்கு முன், இரவு ஒன்பது மணிக்கெல்லாம் மக்கள் தூங்கச்சென்று விடுவதால், வீடுகளில் விளக்கு வெளிச்சமே இருக்காது. யாரேனும், தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றிருந்தால், அந்த வீடுகளில் லைட் எரியும். அதுவும் பத்து மணிக்கு அணைக்கப்பட்டு ஊரே உறங்கிவிடும். இன்று இரவு ஒரு மணிக்குக் கூட, அபார்ட்மெண்ட்களில், சில வீடுகளில் லைட் வெளிச்சத்தைப் பார்க்கலாம். சீக்கிரம் தூங்கச் சென்றால் அதி காலையில் சுறுசுறுப்புடன் எழும்பலாம். ஒரு காலத்தில், பொழுது போக "வாசித்தல்" தான் கை கொடுத்தது. அதில் நாவல்கள், பத்திரிகைகளுக்கு முக்கிய இடமுண்டு.

நல்ல தூக்கம்
நல்ல தூக்கம்AI image

அவற்றை இரவில் வெகு நேரம் படிக்க விடமாட்டார்கள். கரண்ட் பில் அதிகமாயிடும். கண் கெட்டுவிடும் என்று அதட்டுவார்கள் வீட்டிலுள்ள பெரியவர்கள். அதனால், சீக்கிரம் தூங்க வேண்டிய கட்டாயம். இன்று டி.வி, மொபைல் போனின் வருகையால் நடுநிசி வரை தூங்கச் செல்வதில்லை.

இதையும் படியுங்கள்:
ஈகோ: குடும்பங்களைச் சிதைக்கும் மௌனப் போர்!
நல்ல தூக்கம்

இன்றைய தலைமுறைக்கு மின் கட்டணம் பொருட்டே இல்லை. அவர்களுக்குத் தனி அறைகள் இருப்பதால் மற்றவர்கள் தூக்கத்திற்கு இடைஞ்சல் இல்லாத காரணத்தால் நெடுநேரம் விழித்திருக்கிறார்கள். தினசரி இரவு பத்து மணிக்காவது தூங்கச் செல்லலாமே. படுக்கை அறைக்கு செல்லுமுன் அரைமணி நேரம் முன்பே மொபைலையும், டி.வியையும் தூங்க வைத்துவிடுங்கள். குடும்ப பொருளாதார நலன் கருதி இரவில் ஆன்லைன் மூலம் பணி செய்யும் உழைப்பாளிகள் அங்கங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த யோசனை பொருந்தாது.

தூங்கும் அறையில் அதிகக் குளிரும் ஆகாது. அதிக வெப்பமும் கூடாது. அறையில் எந்த சத்தமும் இல்லாமல் இருந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். அத்தோடு, நாள் தோறும் செய்யும் சிறு, சிறு உடற்பயிற்சிகள் ஆழ்ந்த தூக்கத்தின் நேரத்தை கூட்டும். உறங்கச் செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன் கால்மணி நேரம் காலாற உலாத்தலாம். வீட்டிற்குள்ளேயே நடக்கலாம். உடல், மனம் இரண்டும் லேசாகி, தூக்கம் கண்களைத் தழுவும்.

இரவில் காபி, டீ போன்ற பானங்களை தவிர்த்து பால் அருந்தினால் தடையில்லாத் தூக்கம் கிடைக்கும். சரி.. தூங்கியாச்சு..காலையில் எப்படி படுக்கையிலிருந்து எழும்புவது..? விழிப்புத் தட்டியதும், பூ விரிவது போல் இமைகளைத் திறக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஈகோவுக்கு இடமில்லை: குடும்ப அமைதிக்குத் தேவை மனப்பக்குவம்!
நல்ல தூக்கம்

படுத்தவாறே, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, வெளியே விடவும். பின், எழுந்து, உள்ளங்கைகளை பத்து முறை மூடி, விரித்து விடவும். கால் பாதங்களையும், பத்து முறை உயர்த்தி, இறக்கவும். மனசுக்கு பிடித்தமான பாடலையோ, ஸ்லோகங்களையோ சொல்லிக் கொண்டே எழுந்தால் எனர்ஜி லெவல் எகிறும். அன்றைய பொழுது இனிமையாக ஆரம்பமாகும். சலிப்பின்றி நாள் முழுதும் உழைக்கலாம்.

நேரத்திற்கு இலகுவான மனசுடன் உறங்கி, அதிகாலையில் எழுந்தால், வாழ்க்கையை ரசிக்கலாம்.. ஆழ்ந்த உறக்கம் காலைப் பொழுதின் சுறுசுறுப்பை அதிப்படுத்தும். சலிப்பின்றி நித்தம் புத்தம் புது காலையாக இருக்கும்.

இயற்கையான முறையில் கிடைக்கும் ஆழ்ந்த தூக்கமும், ஆரோக்கியமான காலைப் பழக்கவழக்கங்களும் உங்கள் வாழ்நாளை நீட்டிக்கச் செய்து, மனநிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும்.

logo
Kalki Online
kalkionline.com