
கிறிஸ்டியன் டி லார்ஸன் (Christian D Larson - 1874-1954) புதிய சிந்தனை இயக்கத்தை நிறுவி அதைக் குறித்து எழுதிய ஒரு அமெரிக்க எழுத்தாளர். ஐயோவாவில் பிறந்து படித்த அவர் 1898ல் ஓஹையோவில் உள்ள சின்சினாடி நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கு புதிய சிந்தனைக்காக தனது இல்லத்திலேயே ஒரு ஆலயத்தையும் நிறுவினார். ஆப்டிமிஸ்ட் க்ளப் (Optimist Club) எனப்படும் நன்னம்பிக்கையாளர் சங்கங்கள் அவரது ஒரு கீதத்தை தங்களது கொள்கையைத் தெரிவிக்கும் கீதமாக ஏற்றுக் கொண்டன. அவரது 21 புத்தகங்களில் மோடிவேஷன், ஆப்டிமிஸம், விதியை வெல்லுதல் போன்ற விஷயங்களை விவரிக்கும் நூல்கள் புகழ் பெற்றவையாகும்.
‘திங்கிங் ஃபார் ரிஸல்ட்ஸ்’ (THINKING FOR RESULTS) என்ற ஒரு அருமையான நூலை அவர் 1912ம் ஆண்டில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
அறிவியல் பூர்வமாக சிந்திக்க முடியுமா? முடியும் என்றால் அதற்கான வழி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு இதில் அவர் பதிலைத் தருகிறார். இந்த நூலில் உள்ள பல கருத்துக்கள் ஹிந்து மத ஆழ்நிலை தியானத்துடன் ஒத்துப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அறிவியல் பூர்வ சிந்தனை பற்றிய சில கேள்விகளும் அவரது பதில்களும் இதோ:
அறிவியல்பூர்வமான சிந்தனைக்கு அடிப்படை என்ன?
வளர்வதற்கென்று உள்ள விதிகளின் படியும் ஒரு உறுதியான குறிக்கோளுக்காக சிந்திப்பது என்ற நோக்கத்துடனும் சிந்திப்பதே அறிவியல்பூர்வமான சிந்தனைக்கு அடிப்படை எனலாம்.
மன அமைதியை சீக்கிரமாக எப்படி அடையலாம்?
மன அமைதியுடன் இருக்க வேண்டும் என்று முயற்சிக்காமல் நம்மை சாதாரணமாக இருக்க அனுமதித்தாலே மன அமைதி வந்து விடும். மனதையும் உடலையும் சீரான இடைவெளியில் அடிக்கடி ஓய்வாக வைத்திருந்தால் அதுவே குறிப்பிடத்தக்கபடி மன அமைதியை நமக்கு நல்கும். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவெனில் அமைதி பற்றி விழிப்புணர்வானது நமக்குள் அடையப்பட வேண்டும்.
மன அமைதி என்பது சக்தி வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவோம். அது ஆற்றலை நமக்குள் சேமிக்கிறது என்பதும் தெரியும். ஆனால் அதை அடைய ஏதேனும் ஒரு விசேஷமான வழிமுறை உண்டா?
உண்டு. ஒரு தன்னிகரற்ற அமைதியான மையம் நமது மனதிற்குள்ளாகவே இருக்கிறது. உள்ளுக்குள் இருக்கும் அந்த மையத்தின் மீது நீங்கள் உங்கள் கவனத்தை அடிக்கடி மிருதுவாகவும் அமைதியாகவும் செலுத்தினால் அந்த உள்ளுணர்வு மையத்தை நீங்கள் உணரலாம். ஒவ்வொரு நாளிலும் இது பல முறைகள் செய்யப்பட வேண்டும். எவ்வளவு அமைதியாக நாம் இருந்தபோதிலும் இன்னும் அதிகமான அமைதி உணர்வை அடைவதற்காக இதைச் செய்ய வேண்டும். இதனுடைய விளைவு மிக மிக அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும். ஏனெனில் அமைதியானது ஆற்றலைச் சேமிக்கிறது.
வாழ்க்கையில் பலபேருடனும் அன்றாடம் நாம் பழக வேண்டியவர்களாக இருக்கிறோம். சூழ்நிலைகள் லயத்துடன் கூடிய மன அமைதியைக் கொள்ள விடுவதே இல்லை. எப்படி அந்த அமைதியான மனோலயத்தை அடைவது?
சீரான மனோலயத்துடன் கூடிய அமைதியைப் பெற சிறப்பான வழி நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு விஷயத்திலும் உணர்வுபூர்வமாக ஒத்திசைந்து இருப்பது தான். எதையும் தடுக்கக் கூடாது. எதையும் எதிர்க்கக் கூடாது. எவருடனும் விலகித் தனியே போகக் கூடாது. நீங்கள் எங்கிருந்தாலும் சரி, பாஸிடிவாக (உடன்மறையாக) இருக்கக் கூடிய விஷயங்களை முதலில் இனம் காணுங்கள். அந்த அணுகுமுறையுடன் எதையும் செய்ய முயலுங்கள். இப்படிச் செய்யும் போது அவர்களுடன் இசைந்து போக முடியும், அதன் மூலம் இருவரும் தனியாக இருந்தால் அடைய முடியாத நல்ல விளைவுகளைப் பெற முடியும்,
மேலே கூறியபடி எளிமையான வழியை நீங்கள் பின்பற்றினால் நீங்களே ராஜா, மன அமைதி எளிதில் உங்களுக்குக் கிடைக்கும், உங்கள் ஆற்றல் கூடும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்!