

அன்றிலிருந்து இன்றுவரை தோல்வியே வெற்றியின் முதற்படி என்ற அறிவுரையை... ஸாரி... ஆறுதலை நிறைய தடவை பல இடங்களில் கேட்டிருப்போம். அது உண்மை தான்.
சமீபத்தில் ஒரு வாட்ஸ்அப்பில் வந்த ஒரு மெசேஜ் இதைப் பிரதிபலித்தது. அது, "சாதித்தவர்கள் எல்லோருமே ஏதோ ஓரிடத்தில் தோல்வியை சந்தித்தவர்களே." வித்தியாசமாக இருக்கிறதே என்று சிந்தித்தால் சரி என்றே தோன்றியது. மேலும் ஒரு விஷயம் பிடிபட்டது. அந்த தோல்வி தந்த அனுபவத்தைப் பாடமாக ஏற்று ஜெயித்திருக்கிறார்கள். பதினேழு முறை தோற்ற கஜினி முகமதுவும் ஒவ்வொரு தோல்வியிலும், எந்த இடத்தில் சறுக்கியிருக்கிறேன் என்று யோசித்து பின்னர் அந்த தவறு நடக்காமல் கவனித்து வென்றுள்ளார்.
விளையாட்டிற்கும் பொருந்தும். செஸ் விளையாட்டில் தோற்றவர்கள் எந்த காயை எங்கு நகர்த்தினால் வெற்றி ஏணியில் ஏற முடியும் என்ற அனுபவ பாடத்தையும் தோல்வி தந்த படிப்பினையால் புரிந்து முயன்று ஜெயிக்கிறார்கள்.
பள்ளியில் படிக்கும்போது நடந்த சின்ன சம்பவம். கஸ்தூரி நன்றாக ஓடக் கூடியவள். முதல் முறையாக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டாள். அவள் மட்டுமல்ல. ஏழாம் வகுப்பு மாணவிகள் அனைவருமே கஸ்தூரி தான் முதலில் வருவாள் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அவளால் ஐந்தாவதாகத் தான் வர முடிந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம் பிளஸ் வருத்தம்.
புலம்பும்போது ஒரு விஷயம் சொன்னாள். "போட்டி ஆரம்பிக்கும் போது ரெண்டு டம்ளர் தண்ணீர் குடிச்சுட்டு ஓடினேன்" என்று. அப்போதான் வேணி சொன்னாள், "தப்பு கஸ்தூரி. தண்ணீர் குடிச்சுட்டு உடனே ஓடக்கூடாது. உன் வேகம் தடைப்படும் வாய்ப்புகள் அதிகம்" என்றாள்.
அது தந்த அனுபவத்தை பாடமாக நினைத்து செயல்படுத்தி அடுத்து வந்த பந்தயங்களில் அவள் தான் முதலில் வெற்றிக் கோட்டைத் தொட்டாள்.
சமையலில் எத்தனை முறை தோல்வியடைந்து அதில் உள்ள நுணுக்கங்களை கண்டுபிடித்து டென்சனின்றி சமையல் பண்ணும் சூட்சுமம் பலரது வாழ்க்கையில் நடந்திருக்கிறது. முதலில் அவல் உப்புமா பண்ணும்போது அரை வேக்காடாக இருக்கவே யாரும் சாப்பிடாமல் வீணாகிவிட்டது.
தண்ணீர் பத்தாதோ எனத் தோணியது. அடுத்து முறை தண்ணீர் அதிகம் விட்டதில் குழைந்துவிட்டது. தண்ணீர் குறைவாக இருந்தால் நன்றாக வேகாது. நிறைய விட்டால் கூழ் ஆகிவிடும் என்ற அனுபவம் மேலும் யோசிக்க வைத்தது. மாத்தி யோசித்து, அவலில் நிறைய நீர் விட்டு பின் வடிகட்டி ஊறிய பின் தயாரித்த அவல் உப்புமா பாராட்டைப் பெற்றது.
வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் கூட சில இடங்களில் தோல்வியையே சந்தித்திருப்பார்கள். உதாரணமாக ஒன்று சொல்லவா. ஒரு சோப்புக் கம்பெனி தரமான குளியல் சோப்புகளை தயாரித்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் அவர்கள் நினைத்தபடி வாங்காததால் பிசினஸ் டல்லடித்தது. காரணத்தைத் தேடினார்கள்.
அப்பொழுதுதான் புரிந்தது, சோப்பின் சைஸ் வட்டமாக இருந்ததால் பிடிமானமின்றி அடிக்கடி குழந்தைகள், பெரியவர்கள் கையிலிருந்து நழுவி விழுந்ததால் வேறு பிராண்டிற்கு மாறிக் கொண்டிருந்தார்கள். வட்டமான சோப் விற்காது என புரிந்து செவ்வக வடிவில் நீளமான சோப் தயார் பண்ணி பிசினஸில் முன்னேற்றம் கண்டது.
தொலைக்காட்சியில் சிறந்த குரலுக்கான தேர்வு நடக்கும்போது கவனித்ததில் தெளிவாகப் புரிந்தது. போட்டியிலிருந்து விலக்கப்பட்ட. நிறைய பேர் தங்களுடைய தப்பை புரிந்து பாடலின் இடையே எங்கு நிறுத்த வேண்டும், எந்த இடத்தில் குரலை ஏற்றணும், எங்கெல்லாம் இறங்கணும் எனத் தெரிந்து பயிற்சி செய்து இறுதிப்போட்டிக்கு முன் நடக்கும் தகுதிச்சுற்றில் கலந்து பாடி தேர்வாகி, பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் டைட்டில் வின்னரில் பரிசு பெற்றார்கள்.
எந்தப் போட்டியானாலும், எத்தனை பேர் கலந்து கொண்டாலும் பரிசு இருவர் அல்லது மூவருக்குத்தான். தோற்றவர்களுக்கு கிடைப்பதோ மாபெரும் பரிசு. அடுத்து கலந்துகொள்ளும் போட்டிகளில் எதில் கவனமாயிருக்கணும், எந்த முயற்சி பலன் தராது எனப் புரிய வைத்து திறமையை சிறப்பாக அரங்கேற வைக்கும்.பாராட்டு மழையில் நனைய வைக்கும்.
தோல்வியில்லா மனித வாழ்க்கை கிடையாது. தோல்வியின்போது விரக்தியடையாமல், அடுத்த முயற்சியில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவைகளை பட்டியலிட்டு அதற்கேற்றார்போல் முன்னே சென்றால் முன்னேற்றம் நிச்சயம்.
தோல்விகளை எவ்வாறு நேர்மறையாக எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவது என்பதற்கான தெளிவான வழிகாட்டுதலை வாசகர் பெறுவார்.