

காலம் தான் நமக்கு மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய பாடம். மனித வாழ்க்கையில் எந்த ஒரு மனிதராலும், புத்தகத்தாலும் கற்றுத் தர முடியாத பல உன்னதமான உண்மைகளை காலம் நமக்கு மிக எளிதாகக் கற்றுக் கொடுத்து விடுகிறது.
வாழ்க்கை நமக்கு எத்தனையோ விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாலும், காலம் கற்பிக்கும் பாடங்கள் என்றும் மறப்பதில்லை. இழந்த பணத்தையோ அல்லது பொருட்களையோ நாம் மீண்டும் சம்பாதித்துவிட முடியும். ஆனால் கடந்துபோன ஒரு நொடியைக் கூட நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது.
எவ்வளவு பெரிய இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி, கஷ்டமோ, நஷ்டமோ, மகிழ்ச்சியோ எதுவுமே நிரந்தரமல்ல என்பதை காலம் நமக்கு உணர்த்துகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்றும், இதுவும் கடந்து போகும் என்ற மனப்பக்குவத்தையும் நமக்கு கற்றுத்தருகிறது.
நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது யார் உண்மையானவர், யார் நம்முடன் இருக்கிறார்கள், யார் சுயநலக்காரர், யார் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்கள் என்பதைக் காலம் மிகத்துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுகிறது. அது உறவுகளை மாற்றுவதில்லை. ஆனால் மனிதர்களைப் பற்றிய நமது பார்வையை மாற்றி விடுகிறது.
சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைப்பதில்லை. சில காயங்கள் ஆறவும், சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கவும் நாம் காத்திருக்க வேண்டும். அந்தப் பொறுமையை காலம் நமக்கு கற்றுத் தருகிறது. ஒரு பொருள் அல்லது நபர் நம்மோடு இருக்கும்போது தெரியாத மதிப்பு, அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு அதாவது காலம் கடந்த பின்பு அவர்களின் மதிப்பு மற்றும் அவர்களின் இருப்பு எவ்வளவு பெரியது, எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிய வைக்கிறது. மனிதன் தவறு செய்யும் பொழுதெல்லாம் உடனே தண்டிப்பதில்லை காலம்; மாறாக அனுபவம் என்ற பெயரில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்து நம்மை பக்குவப்படுத்துகிறது.
வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு அனுபவமும் காலம் நமக்கு கற்றுத் தரும் ஒரு பாடம்தான். நாம் அவசரப்படுவதால் எதுவும் நடந்துவிடாது என்ற நிதானத்தை நமக்கு கற்றுத்தருகிறது. இழப்புகளின் வலியையும் காலப்போக்கில் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை இந்த காலமே நமக்கு வழங்குகிறது.
வயது கூடக்கூட காலம் நமக்கு கொடுக்கும் அனுபவங்கள் நம்மை முதிர்ச்சி அடையச் செய்து சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வைக்கின்றது. காலம் என்பது ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு சிறந்த ஆசிரியர். அது தவறு செய்யும் போது நம்மை உடனே தண்டிப்பதில்லை. ஆனால் மெதுவாக மிகச்சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்து விடுகிறது.
சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கலங்கிப் போய் நின்ற மனம், கடந்து செல்லும் காலத்தால் பெரிய பிரச்சனைகளையும் சிரித்தபடியே கடந்து செல்லப் பழக்கிவிடுகிறது. நாம் விரும்பியது நம்மை விட்டு விலகும் போதும், விரும்பாதது நம்மைத் தேடி வரும் போதும் ஏற்படும் துன்பங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை காலம் நமக்குத் தருகிறது.
நாம் எவ்வளவுதான் படித்து பட்டறிவை வளர்த்துக் கொண்டாலும், சில உண்மைகளையும் பக்குவத்தையும் காலத்தால் மட்டுமே நமக்கு உணர்த்த முடியும். சில விஷயங்கள் நடப்பதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. எவ்வளவுதான் அவசரப்பட்டாலும் விதைத்த உடனே பழம் கிடைப்பதில்லை என்பதை காலம் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கிறது.
விதியின் பயன் எப்படி இருந்தாலும், நாம் போடும் நேர்மையான முயற்சிக்கான பலன் ஒருநாள் கண்டிப்பாக கிடைக்கும் என்ற யதார்த்தத்தை காலம் உணர்த்துகிறது. காலம் கற்றுக் கொடுக்கும் பாடங்களுக்கான விலை மிக அதிகம்தான்.
ஆனால் அந்தப் பாடங்கள் தரும் முதிர்ச்சியும் தெளிவும் மனிதனை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றன. காலத்தின் பாடங்களை நாம் முன்கூட்டியே உணர்ந்துகொள்ளும் பொழுது தேவையற்ற ஏமாற்றங்களைத் தவிர்த்து நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும்.
வாசகர் தன் வாழ்வில் கடந்த கடினமான காலங்களை மீட்டுப்பார்த்து, எதிர்காலத்தை அமைதியாகவும் பக்குவமாகவும் எதிர்கொள்ளும் மனத்தெளிவைப் பெறுவார்.