

இறைவன் படைப்பில் மனித வாழ்க்கையில் நாம் அனுதினமும் கடைபிடிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. மேடு பள்ளம் நிறைந்ததே வாழ்க்கை. அதில் நோ்மறை மற்றும் எதிா்மறை விஷயங்களில் இருவகைகள் உண்டு.
உதாரணத்திற்க்காக எடுத்துக்கொண்டால் அன்றாட வாழ்வில் பதவி, துன்பம், இன்பம், கோபம், செல்வம், ஏழ்மை, தோல்வி, இவைகளை பல்வேறு நிலைகளில் உள்ளடக்கியதே வாழ்க்கை. அதன் வகையில் நாம் கடைபிடிக்க வேண்டிய பல விஷயங்களில் சில வகைகளை கடைபிடித்து, வடம்பிடித்து வாழ்க்கைத் தேரை இழுக்க வேண்டும்.
பொதுவாக இசை, அது ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கியது.(சப்த ஸ்வரங்கள்) ஸ, ரி, க, ம, ப, த, நி. மனித வாழ்வின் உணர்வுகளே ஸ்வரங்கள் முலம் பாடலாகிறது.
அந்த ஏழும், சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பனவாகும். மனித வாழ்வில் அவரவர் மனங்களின் எண்ணங்கள், கேள்விகள், சந்தோஷங்கள், துன்பங்கள், இவையாவும் ஏழு ஸ்வரங்கள் போலவே சுழல்கிறது. அப்படி சுழன்றாலும் மனம் போன போக்கில் நாம் பயணிக்கக்கூடாது.
அதேபோல வாரங்கள், அதாவது கிழமைகள், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இதனில் ஒவ்வொரு கிழமைக்கும் பலராலும் பலவித எண்ணப் பறிமாற்றம் கடைபிடிக்கப்படுகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதாவது சனி நீராடு, செவ்வாயோ வெறுவாயோ, பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது என வரிசையாக சொல்வதும் நடைமுறை.
அதேபோல ஏழு கன்னிகைகள் (சப்த மாதர்கள்) பிராம்மி, மகேஷ்வரி, கெளமாாி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, மற்றும் சாமுண்டி. இவர்கள் அன்னை பராசக்தியின் அம்சங்களாகும். இதன் மகிமை சிறப்புதான் நவராத்திாி கொண்டாட்டம் இவர்கள் அரக்கர்களை அழிக்க தோன்றியவர்கள்.
அதேபோல ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் பின் வரும் ஏழு விஷயங்களை கடைபிடித்து வாழ்வதே மேன்மையானது.
1. பதவி வரும்போது பணிவை கடைபிடியுங்கள்
மனிதனுக்கு பதவி, புகழ் வரும்போது கூடவே பணிவும் வரவேண்டும். அப்படி வந்தால் அனைத்தும் தொடர்ந்துவரும்.
2. துன்பத்திலும் அச்சம் தவிா்த்தல்
பொதுவாக வாழ்வில் இன்பம் வரும்போது பயம் வருவது கிடையாது, அதேபோல துன்பம் வரும்போது அதை எதிா்கொள்ள துணிச்சல் வரவேண்டும், அதுவே பொிய கவசமாகும். அதற்காக அசட்டு துணிச்சல் தவிா்க்கப்பட வேண்டும். அது ஆகத்தை விளைவித்துவிடும்.
3. கோபத்தில் கடைபிடிக்கும் நிதானம்
அதாவது கோபம் வரலாம், அது தன் எல்லையை மீறக்கூடாது, நம்மையும் மீறி கோபம் வரும் நிலையில் நாம் நிதானத்தை கடைபிடிப்பதே நல்ல விஷயமாகும். அப்போது நமக்கு தேவை தெளிவான சிந்தனையே.
4. செல்வம் வரும்போது எளிமை
நமது விடாமுயற்சி, உழைப்பு, இவைகளால் வசதி வரும்போது, ஆடம்பரம், படாடோபம் தவிா்த்து எளிமையை கடைபிடிப்பதே நல்லது.
5. ஏழ்மை வறுமையில் நோ்மையே நல்லது
மனிதனது வாழ்வில் ஏற்ற இறக்கம் வருவது சகஜம், இந்நிலையில் ஏழ்மை எட்டிப்பாா்க்கும்போது நாம் நமது நோ்மையை அவசியம் கடைபிடிப்பதே நல்லதாகும். எந்த நிலையிலும் நோ்மையா எண்ணத்தை தொலைத்துவிடக்கூடாது.
6. தோல்வியிலும் விடாமுயற்சி
வாழ்வில் வெற்றி தோல்வி வருவது சகஜம். அந்த நேரம் தோல்விகண்டு துவளவே கூடாது.
அப்போது விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றியைத் தருமல்லவா? தோல்வி நிலையானதல்ல அது வெற்றிக்கான முதல்படியாகும்.
7. வறுமையிலும் உதவி செய்தல்
வாழ்க்கையில் வறுமையும், வசதியும், மாறி மாறி வரும். அது அவரவர் கடைபிடிக்கும் தன்மையைப் பொருத்தது. அந்த நேரம் வறுமையும் கூடவே வரும். அந்த நிலையில் நமது மனதில் உள்ள பரோபகராக எண்ணத்தை கைவிடவே கூடாது.
இப்படி பல்வேறு உதாரணங்களை வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக கூறலாம். இருப்பினும் மேற்குறிப்பிட்ட ஏழு தன்மைகளையும் கடைபிடித்து வாழ்வதே சாலச்சிறந்த ஒன்றாகும்! பொதுவாக அடுத்துக்கெடுக்கும் தேவையில்லாத எண்ணம் நம்மிடம் இருப்பது நல்லதல்ல. நல்லதை விதைத்தால் நல்லதையே அறுவடை செய்யலாம். இதை உணர்ந்தால் வாழ்க்கை வசந்தமே!
வாழ்க்கையின் இன்ப-துன்ப நிலைகளைச் சமமாகப் பாவித்து, மன உறுதியோடு வெற்றியைக் கைக் கொள்ளத் தேவையான தெளிவான வாழ்க்கை நெறிகளை வாசகர் பெற்றுச் செல்வார்.