ஓயாமல் பணம் தேடும் ஓட்டம்... சிறகுகளை இழக்கும் மனிதர்கள்! நிஜமான வெற்றி எது?

சிறகுகளை இழந்து பறக்க முடியாமல் தவிக்கும் குருவியின் கதை உணர்த்தும் வாழ்க்கை உண்மை.
வாழ்க்கை
வாழ்க்கைGemini image
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on: 

உண்மையில் 'நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்' என்ற நம் மனதின் குரல் தான் வெற்றி. 'பணமே தேவையில்லை மகிழ்ச்சி மட்டுமே சம்பாதித்தால் போதும்' என்பதல்ல இதன் அர்த்தம்.

சிலருக்கு பணத்தின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கலாம். ஆனால் ஒருவரால் நிறைய பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ முடியாமல் போனால், அவர் சம்பாதித்து வைத்திருக்கும் பணத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை. குறைவான வருமானம் கிடைத்தாலும் ஒருவரால் மகிழ்ச்சியாக வாழமுடிகிறது என்றால் அவர் வாழ்க்கையில் வெற்றி அடைந்து இருப்பதாகவே அர்த்தம்.

இதுவே எதையும் இழக்காமல் நாம் அடையும் வெற்றிகரமான வாழ்க்கை முறையாகும்.

ஒரு சிறு குருவிக்கும் கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை அப்படி ஒரு அற்புதக்காட்சியை அது பார்த்ததில்லை. அழகான நதிகள், விதவிதமான பழங்களுடன் பெரிய பெரிய மரங்கள், பல வண்ண மலர்கள் பூத்திருக்கும் செடிகள், இனிய ஓசை எழுப்பும் பறவைகள் என எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி நிறைந்து அந்த அற்புத உலகம் காட்சி தந்தது.

எப்படியாவது அந்த உலகத்துக்கு போய் வாழ வேண்டும் என அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் தெரியவில்லை. ஒரு நரியிடம் வழி கேட்டது.

'எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன் அதற்கு விலையாக, நீ உன் சிறகுகளில் ஒன்றை தரவேண்டும் 'என்றது நரி.

'ஒரே ஒரு சிறகுதானே' என்று குருவியும் கொடுத்தது. நரி சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் வழி தெரியாமல் குருவி திகைத்து நின்றது. அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி வழி கேட்டது.

எனக்குத் தெரிந்தவரை வழி சொல்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்? என்றது பாம்பு.

குருவி தன் சிறகில் ஒன்றை கொடுத்தது. பிறகு பாம்பு சொன்ன பாதையில் பயணம் சென்றது.

இப்படியே அந்த குருவி அங்கங்கே வழி கேட்டு பறந்தது. வழி சொன்ன எல்லாமே குருவியிடம் ஒரு சிறகை விலையாக கேட்டன. நீண்ட பயணத்தின் முடிவில் அது கனவில் கண்ட அந்த அழகான உலகம், அதன் கண்முன்னே தெரிந்தது. குருவிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உற்சாகத்தில் வேகமாக பறக்க முயன்றது.

இதையும் படியுங்கள்:
உங்களை முட்டாளாக்கும் ஆடம்பர வாழ்க்கை... இதோ அதிர்ச்சி உண்மைகள்!
வாழ்க்கை

ஆனால் எப்போதும் இல்லாதபடி அதன் உடல் கனக்க தடுமாறி தரையில் விழுந்தது. குருவியால் எழுந்து பறக்க முடியவில்லை. அப்போதுதான் அதற்கு உண்மை புரிந்தது. ஒவ்வொன்றாக சிறகை வழியில் பிய்த்து கொடுத்ததில் தன் பெரும்பாலான சிறகுகளை அது இழந்து விட்டிருந்தது. இப்பொழுது அது பறக்கும் நிலையில் இல்லை. கனவில் கண்ட அற்புத உலகம் கண் முன்னே இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாமல் கீழே விழுந்து கிடந்தது.

இன்று பலரும் இந்தக் குருவி போலவே வாழ்கிறார்கள். 'வெற்றிகரமாக வாழ்வதற்கு பணமே தேவை' என நினைத்துக் கொண்டு கண்மூடித்தனமாக பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள்.

வாழ்க்கை
வாழ்க்கைGemini image

இந்த மாய ஓட்டத்தில் தினசரி வாழ்வில் சின்ன சின்ன நிகழ்ச்சி, தருணங்கள் பலவற்றையும் இழக்கிறார்கள். குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம்விட்டு பேசுவது, நண்பரோடு உரையாடுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லாம் மகிழ்ச்சி சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வீசுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
எந்த நேரமும் பணம் வேலைனு ஓடுற ஆளா நீங்க… அப்போ இத உடனே படிங்க!
வாழ்க்கை

நிறைய பணம் சேர்த்துவிட்டதாக உணரும்போது, அதை அனுபவிக்க முடியாதபடி உடலும் மனமும் தளர்ந்து போய் இருக்கும்.

வெற்றிக்கான திறமைகள் தெளிவான இலக்கு, திட்டமிடுதல், விடாமுயற்சி, கற்றுக்கொள்ளும் ஆர்வம், நல்லுறவைப் பேணுவது என்ற 5 பண்புகளை பயன்படுத்தினால் வெற்றிக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும்.

பணத்தைத் தேடி ஓடும் வேகத்தில் நாம் எதையெல்லாம் இழக்கிறோம் என்பதை உணர்ந்து, மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும் உண்மையான வெற்றி வாழ்க்கைப் பாதையை வாசகர் கண்டடைவார்.

logo
Kalki Online
kalkionline.com