

வாழ்க்கையில் வருங்காலத்தைப் பற்றி அதிகமாக யோசிப்பதை விடவும், நிகழ்காலத்தைப் பற்றி சில மணித்துளிகள் சிந்தியுங்கள். உங்களுடைய வாழ்க்கை பயணத்தில் தெளிவு பிறக்கும் என்பதை உணர்ந்து செயலாற்ற முயலுங்கள்.
உங்களுடைய செயல்பாடுகளில் ஏதேனும் செயல்முறையில் தவறுகள் நிகழ்ந்து இருப்பின் உடனடியாக அதனை களைந்து விடப் பாருங்கள். யாருக்கும் விளக்கங்கள் தரத் தேவையில்லை. அதிலிருந்து தாங்களே வெளிவரப்பாருங்கள்.
வாழ்க்கையில் எந்தப் பிரச்னைகள் வரும்போதும், அந்த தவறு எங்கே நேர்ந்ததென்று பார்த்து சரிசெய்யப் பாருங்கள். ஏன் நேர்ந்தது என யோசிச்சு, அதனை எப்படிச் சரி படுத்தலாம் என்பதை ஆராய்ந்து பாரத்து, அதற்கு தீர்வுகாண முயலுங்கள்.
வாழ்க்கையில் எப்போதும் நீங்கள், முதலில் உங்களுக்காக வாழப் பாருங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கைக்கான அடித்தளம் ஸ்திரமாக அமையும். அதேபோல் யார் உங்களை உச்சியில் வைத்து புகழ்ந்தாலும், தரம் தாழ்த்தி இகழ்ந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருக்க பாருங்கள். அப்போதுதான் உங்களின் சுயத்தன்மை மாறாமல் இருக்கும்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையை, தனக்கு கிடைத்த வரம்' என்று நினைத்து பயணித்தால், அதில் நீங்கள் முத்தெடுத்து, முத்தான வாழ்க்கை வாழும் அதிஷ்டசாலியாக நீங்கள் இருக்கலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையின் ஆரம்பம்.
வாழ்க்கை உங்களுக்கு எப்படி அமைந்து இருந்தாலும், தான்தான் வாழ்ந்து காட்டவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டால், ஆல விருட்சத்தின் விழுதுகள் உங்களுக்கு ஊன்றுகோலாக இருக்கும். அதற்காக நீங்கள் உங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழும் போதே, அடுத்தவர்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் உள்வாங்கி, முடிந்த வரை அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும் என்பது நிதர்சனமான உண்மை. மகிழ்ச்சி சோகம் இருசேரக் கலந்தது வருவதுதான் வாழ்கையின் நியதி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் இரண்டையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் உங்களுக்கு ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையில் இரண்டும் நிரந்தரமானது இல்லை.
வாழ்க்கையில் ஏதாவது குறிக்கோள் வைத்துக்கொண்டு வாழ்ந்தால், உங்கள் லட்சியப் பயணத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அப்போது தான், உங்களுக்கான வெற்றிப் பயணமாக அது அமையும். அதனை வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
வாழ்க்கை என்பது, ஊஞ்சல் போட்டு அதில் உட்கார்ந்து ஆடிவிட்டு போவது அல்ல. புயலுக்கு நடுவே படகில் பயணம் செய்வது போன்றது என்பதை புரிந்துகொள்ளூங்கள்.
அம்பின் பிடி எந்த அளவுக்குப் பின்னோக்கி இழுக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு முன்னோக்கிப் பாயும் தன்மை உடையது. அதேபோல், வாழ்க்கையில் நாம் பின்னோக்கி இழுக்கப்படுகிறோம் என்றால். அடுத்த முன்னேற்றம் நிச்சயம் வருகிறது என நம்பிக்கையுடன் இருக்க வேண்டுடியது அவசியம்.
அப்படியே அதில் பின்னடைவு ஏற்பட்டால், இறுதி வரை மனம் தளரக் கூடாது. எந்த நிலையில் இருந்தாலும், அடுத்த அடி எடுத்து வைக்கிறீர்கள் என்றால், நீங்கள் தான் திறமைசாலி. அண்ணாந்து பார்க்கும் வரை தான் சிகரம். அதன் அருகில் சென்று விட்டால், அதுவும் சமதளத் தரைதான். ஆகவே சிந்தித்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்!