ஓவர் Perfection-ல் இருந்து விடுபடுவது எப்படி?

சின்னச் சின்னத் தவறுகளும் அழகுதான்!
Over Perfectionism
Over PerfectionismCredit: AI Image
Updated on

நம் எல்லாருக்குமே நாம் செய்யும் வேலைகளைச் சரியாக, திருத்தமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதில் தவறுமில்லை. 'செய்வன திருந்தச் செய்' என்றுதான் நாம் கற்றிருக்கிறோம். ஆங்கிலத்தில் இதையே 'பர்ஃபெக்ஷன்' என்கிறோம். செய்யும் வேலை சிறியதோ பெரியதோ, அதை அழகாக, திருத்தமாகச் செய்தல் நலம்.

இது எப்போது சிக்கலாக மாறுகிறது தெரியுமா? ஒரு சிலர் பர்ஃபெக்ஷன் (Perfection) என்ற பெயரில் நிறைய கட்டுப்பாடுகள் வைத்துக்கொண்டு வேலை செய்வார்கள். அது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அழுத்தத்தை உண்டாக்கும்.

பர்ஃபெக்டா இருக்கிறது ஒரு குத்தமா?

இதுல எப்படி மன அழுத்தம் வரும்?

மன நிறைவைத்தானே தரும்?

இப்படி நிறைய கேள்விகள் உங்கள் மனதிற்குள் ஓடுகிறதா? நீங்கள் ஒரு 'ஓவர் பர்ஃபெக்ஷனிஸ்ட்' (Over Perfectionism) என்றால், இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

வீட்டில் எல்லாப் பொருட்களும் அவை இருக்க வேண்டிய இடத்தில் சீராகத்தான் இருக்கும். சில நேரங்களில் அவசரத்தில் எடுத்த பொருளை அதன் இடத்தில் வைக்கத் தவறலாம். ஓவர் பர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பவர்கள் இதைச் சாதாரணமாகக் கடந்து செல்ல மாட்டார்கள். இதற்காக, இருக்கும் சக்தியை வீணடித்து அரை மணி நேரம் வாதிடுவார்கள்; தங்கள் மூடையே கெடுத்துக்கொள்வார்கள்.

  • "வீடு வீடாவா இருக்கு? எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கத் தெரியாதா?"

  • "எப்பவும் நானேதான் வீட்டைச் சுத்தமா வைக்கணுமா? வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் அந்த அக்கறை இருக்கணும்."

  • "உட்கார்ந்து எழுந்தா சோஃபா துணியையெல்லாம் சரி பண்ணணும்னு ஒருத்தருக்கும் அக்கறையில்லை."

இப்படி வரிசைகட்டி வரும் விமர்சனங்கள், விமர்சிக்கும் உங்களையும், கேட்டுக்கொண்டிருப்பவர் மனநிலையையும் பாதிக்கும். வீடு வேறு, மியூசியம் வேறு. மியூசியத்தில்தான் பொருட்கள் எப்போதும் சுத்தமாக, சீராக வைக்கப்பட்டிருக்கும். வீடு என்றால் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். நாலு பேர் புழங்கும் இடத்தில் கொஞ்சம் முன்ன பின்னத்தான் இருக்க வேண்டும்; அது ஒன்றும் பெரிய குற்றமல்ல. குப்பையும் தூசுமாக வைத்திருக்க வேண்டாம், ஆனால் ஒன்றிரண்டு பொருட்கள் என்றாவது அதன் இடத்திலிருந்து மாறியிருந்தால் தவறில்லை.

ஓவர் பர்ஃபெக்ஷன் பார்ப்பவர்கள் பெரும்பாலும் யாருடனும் ஒத்துப்போக மாட்டார்கள். யார் என்ன வேலை செய்தாலும் அதில் ஒரு குறை சொல்வார்கள். வீட்டு வேலைக்கு ஆள் வைத்துவிட்டு, அவர்கள் பாத்திரம் கழுவினாலும் வீடு கூட்டினாலும் பின்னால் வந்து குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்:

  • "இங்கே குப்பை போகலை."

  • "இந்த பாத்திரத்தை ஒழுங்கா தேய்க்கலை."

  • "இந்தத் துணியை இப்படி ஏன் மடிச்சு வச்சே?"

  • "இந்த பாத்திரத்துல ஏன் பால் காய்ச்சினே?"

  • "வெங்காயத்தை ஏன் இவ்வளவு சின்னதா வெட்டினே?"

இப்படி நிறைய குறைகளும் கேள்விகளும் கேட்கும்போது, வேலை செய்பவர்களுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிடும். இந்த மனநிலையில் இருப்பவர்களிடம் வேலை செய்பவர்கள் நீண்ட நாட்கள் இருக்க விரும்பமாட்டார்கள்.

"என்ன செய்தாலும் திருப்தி வராது" என்ற எண்ணம் சலிப்பைத் தரும். நிரந்தரமில்லாத வேலையாட்களால் உங்களுக்கும் நிம்மதி போய்விடும்.

"இதை இப்படித்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும், இங்கேதான் வைக்க வேண்டும்" என நிறைய முன்முடிவுகளை வைத்திருப்பதால், அவர்களால் ஒரு சின்ன மாறுதலைக் கூட இயல்பாகக் கடந்து செல்ல முடியாது. ஓவர் பர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பவர்கள் எப்போதும் பரபரப்புடனே இருப்பார்கள். சின்னத் தவறைக்கூடச் சாதாரணமாகக் கடந்து செல்லத் தெரியாது. தவறுகள் மனித இயல்பு; அதைக் குற்றமாக நினைத்து மனதில் பாரத்தை ஏற்றிக்கொண்டால் நிம்மதி இருக்காது.

இதையும் படியுங்கள்:
'நான் இல்லனா எதுவும் நடக்காது' - இந்த எண்ணம் ஆபத்தானதா?
Over Perfectionism
  • "நான் இப்படிச் செய்யணும்னு நினைச்சேன், ஆனா அது அப்படி நடக்கலை."

  • "நான் எதிர்பார்க்கிற மாதிரி யாரும் நடக்கிறதில்லை."

  • "யாருக்கும் எதுவும் சரியாத் தெரியலை."

இப்படி எப்போதும் மனநிறைவு இல்லாமல், ஓவர் பர்ஃபெக்டாக வாழ்ந்து என்ன பயன்?

சின்னச் சின்னச் சறுக்கல்கள் இருந்தால்தான் அடுத்த அடியைக் கவனமாக வைப்போம். குழந்தை கீழே விழுந்துதான் நடை பழகுகிறது. அதுபோலத்தான் சில சிதறல்கள், தவறுகள் எல்லாமே ஒரு அனுபவம்தான். ரிலாக்ஸாக இருங்கள்; எல்லா விஷயத்திலும் அதிகப்படியான பர்ஃபெக்ஷனை எதிர்பார்க்காதீர்கள்.

கோணல் கோடுகளும் சில நேரம் அழகாகத்தான் இருக்கும். கொட்டிவிட்ட வண்ணக்கலவைகூட ஒரு ஓவியம்தான். குழந்தைகள் சிதறவிடும் விளையாட்டுப் பொருட்களும் வீட்டிற்கு ஒருவித அழகுதான். என்றோ ஒருநாள் கலைந்து கிடக்கும் சோஃபா கவருக்காக டென்ஷன் ஆகாதீர்கள். 'இதுவும் கடந்து போகும்' என்று இயல்பாகக் கடந்து செல்லுங்கள்.

பர்ஃபெக்டாக இருக்கலாம், ஆனால் 'ஓவர் பர்ஃபெக்ட்' நிம்மதியைக் கெடுத்துவிடும்!

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com