

தோல்வி வரும்பொழுது நாம் தோற்றுப்போவதில்லை. எப்போது நம்மால் ஜெயிக்க முடியாது என்று நினைக்கிறோமோ அப்போதுதான் தோற்றுப் போகிறோம். நம் மனமே நமது வெற்றி மற்றும் தோல்வியை தீர்மானிக்கிறது. நாம் வெளியில் நடக்கும் போட்டிகளில் தோற்பதற்கு முன்பாகவே "என்னால் முடியாது" என்று மனதிற்குள் நினைக்கும் போதுதான் முழுமையாகத் தோற்றுப் போகிறோம்.
இதைத்தான் "மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்" என்பார்கள். விளையாட்டு, படிப்பு, தொழில் அல்லது வாழ்க்கை என எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத வரை நமக்கான வெற்றி வாய்ப்பு எப்போதும் உயிர்ப்போடு தான் இருக்கும்.
நமது எண்ணங்களே நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன. நாம் ஒரு செயலில் இறங்குவதற்கு முன்பே இது நம்மால் முடியாது என்று நினைத்து விட்டால், அங்கே நம்முடைய முயற்சி பாதியிலேயே முடங்கிவிடுகிறது. மனதளவில் தோற்காத வரை வெளியில் நமக்கு ஏற்படும் எந்த ஒரு தோல்வியும் நிரந்தரமானது அல்ல.
தோல்வி என்பது சூழ்நிலைகளால் வருவது அல்ல. அது நம் மனதில் நாம் எடுக்கும் முடிவால் தான் வருகிறது. எனவே மன உறுதியுடன் எந்த ஒரு செயலையும் தொடங்கினால் தோல்வி என்பது கிடையாது. முடியும் என்று நம்புகிறவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். முடியாது என்று நினைப்பவர்களோ ஒரு சாக்கை கண்டுபிடிப்பார்கள் என்பார்கள்.
எனவே தான் வாழ்க்கையில் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள மன உறுதியும் நம்பிக்கையும் அவசியம். இவை நேர்மறை எண்ணங்களை உருவாக்கி நாம் முன்னெடுக்கும் செயல்களை வெற்றிகரமாக முடிக்க உதவும்.
நம்முடைய மன உறுதியும் எண்ணங்களும் தான் நம் செயல்களையும் அதன் முடிவுகளையும் தீர்மானிக்கின்றன. முடியாது என்ற எண்ணம் வந்த உடனேயே சவால்களை எதிர்கொள்ளும் நம்முடைய ஆர்வம் குறைந்து விடுகிறது. வெற்றி பெறமாட்டோம் என்று நினைக்கும் பொழுது நாம் அதற்கான முழு உழைப்பையும் கொடுக்கத் தவறிவிடுகிறோம்.
தோல்வியைப் பற்றிய பயம், நம்மிடம் இருக்கும் திறமைகளை வெளிப்பட விடாமல் தடுத்துவிடும். இதைத்தான் எண்ணம்போல் வாழ்க்கை என்பார்கள். தோல்வி என்பது தற்காலிகமானது; ஆனால் என்னால் முடியாது என்று எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு நினைப்பது நிரந்தரமான தோல்விக்கு வழி வகுக்கும். எனவே எத்தகைய சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் முயற்சிப்பதே வெற்றிக்கான முதல்படி.
நம்முடைய எண்ணங்கள்தான் நாம் செய்யப்போகும் செயல்களை தீர்மானிக்கின்றன. முயற்சிகளின் வீரியத்தைக் கூட்டுகின்றன. நம்மால் முடியும் என்ற நம்பிக்கைதான் பாசிட்டிவ் ஆற்றலைத் தருகிறது. முயற்சி இல்லாததே உண்மையான தோல்வி என்பதை உணர வேண்டும். தோல்வி பயம் என்ற ஒன்று வந்துவிட்டால் நாம் முழு மனதுடன் எந்த ஒரு செயலையும் செய்வதை நிறுத்தி விடுவோம். வெளி உலகப் போட்டிகளைவிட நம் மனதோடு நடக்கும் போராட்டத்தில் ஜெயிப்பதே முதலில் முக்கியம்.
அடர்ந்த காட்டில் ஒரு பெரிய யானை இருந்தது. அது மிகவும் வலிமையானது. காட்டில் உள்ள மரங்களை எல்லாம் தன் தும்பிக்கையால் எளிதாக வேரோடு பிடுங்கி எறியும் ஆற்றல் கொண்டது.
ஒருநாள் பாகன் ஒருவன் அதைப்பிடித்து வந்து அதன் கால்களை ஒரு சிறிய மெல்லிய சங்கிலியால் மரத்தில் கட்டினான். யானை நினைத்திருந்தால் அதனை ஒரே நொடியில் அறுத்தெறிந்து விட்டு தப்பியிருக்க முடியும்.
ஆனால் அது அமைதியாக நின்றது. தப்பிக்க ஒரு சின்ன முயற்சியைக் கூட அது செய்யவில்லை. யானையை தடுத்து நிறுத்தியது அந்த மெல்லிய கயிறு அல்ல; என்னால் முடியாது என்று அது தனக்குள்ளே வளர்த்துக்கொண்ட நம்பிக்கையற்ற எண்ணம்தான். அது போல்தான் நாமும் ஒரு விஷயத்தில் நம்மால் ஜெயிக்க முடியாது என்று எப்போது நினைக்கிறோமோ அப்பொழுதே நம் முயற்சியை கைவிட்டு தோற்றுப் போகிறோம்.
நம்பிக்கையும் முயற்சியுமே வெற்றியின் முதல்படி. நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!
வாசகர் தன் வாழ்வில் எழும் சவால்களைக் கண்டு அஞ்சாமல், தனது மன உறுதியால் எத்தகைய தடையையும் வென்று எப்படி வெற்றிப் பாதைக்கு திரும்புவது என்ற தெளிவைப் பெறுவார்.