

மனிதனாகப் பிறந்த எவருக்கும், வாழும் வாழ்க்கையில் ஓர் அர்த்தம் (meaning of life) இருக்க வேண்டும். அதற்கு முதலில், "எதுவும் தன்னால் முடியும்" அல்லது "தன்னாலும் முடியும்" என்ற ஆற்றல் மிகுந்த நம்பிக்கையுடன் வாழப் பழக வேண்டும்.
வாழ்க்கைத் தத்துவம் என்பது "வாழ்வதும், வாழவிடுவதுமாக" இருக்க வேண்டியது அவசியம்.
வாழ்வது: ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் விருப்பப்படி வாழ்ந்து, வென்று காட்டுவது.
வாழவிடுவது: அடுத்தவர்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது.
வாழ்க்கையை வானவில் போன்று வண்ணமயமாகவும், வசதிகளோடும் வாழ நினைத்தால், மனதில் நல்ல எண்ணங்களைக் கொண்டிருப்பதே உண்மையான வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மனதில் தோன்றும் எண்ணத்திற்கும், செய்யப்போகும் செயலுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஏதேனும் இடைவெளி வரும் பட்சத்தில், அதனைத் தகர்க்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது என்பதை அறிந்தால், நீங்கள் உங்கள் இலக்குகளை நிச்சயம் அடைவீர்கள்.
உங்கள் மனதை எந்த அளவுக்குச் சஞ்சலம் இல்லாமலும், தடுமாற்றம் இல்லாமலும் "பத்தரை மாற்றுத் தங்கம்" போல் வைத்திருக்கிறீர்களோ, அதில் தான் உங்கள் வாழ்க்கைத் தத்துவம் அடங்கியுள்ளது. மனதிடத்தோடு "வெற்றி பெற்றே தீருவேன்" என்று இருப்பவர்களுக்கு நம்பிக்கை அரணாக இருக்கும்; எந்த நிலையிலும் கடமையிலிருந்து பின்வாங்கும் எண்ணம் தோன்றாது.
வாழ்க்கை என்றால் பிரச்னைகள் வரத்தான் செய்யும்; அதற்காக ஒருபோதும் மனம் தளர விடாதீர்கள். எந்தச் செயலையும் தள்ளிப் போடாதீர்கள். தடைகள் வரலாம், தட்டிப்பறிக்க ஒரு கூட்டம் வரலாம்; எதற்கும் அஞ்சாமல் துணிந்து நின்று களம் காண முயலுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகளாக மாறும். பயிற்சியும் முயற்சியும் உங்களுடன் இருந்தால், அது ஒரு வெற்றிப் பயணமாகவே அமையும்.
வெறும் உழைப்பு மட்டும் உங்களைச் சாதனையாளராக மாற்றிவிடாது. போட்டி நிறைந்த இவ்வுலகில், நீங்கள் செய்யும் வேலையில் உங்கள் தனித்திறமையை ஒவ்வொரு நாளும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களுக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியும்.
வேகமாக முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, விவேகமாகச் செயல்படுங்கள். "அகல உழுவதை விட ஆழ உழுவதே" நல்ல விளைச்சலைத் தரும். எதையும் பொறுமையாக ஆராய்ந்து பார்த்து, நிதானமாக எடுத்து வைக்கும் கால்தடங்களே உங்களை வலிமையான இடத்திற்குக் கொண்டு செல்லும்.
வாழ்க்கையில் வென்று காட்டி சாதனை படைத்துச் சிகரம் தொடுங்கள்! அந்த வெற்றியினைத் தக்கவைத்துக்கொள்ள எப்போதும் நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தித்துச் செயல்படுத்த முனையுங்கள்.